சித்தப்பா

அப்பாவுக்கும்
சித்தப்பாவுக்கும்
ஆகாது
சின்னச் சின்ன
சண்டைகள்
சின்னச் சின்ன
உரசல்கள்
எப்போதும்
இருந்து கொண்டிருக்கும்
அப்பாவுக்குத்
தெரியாமல்
சித்தப்பா வீட்டில்
டிவி பார்ககப்போவோம்
நானும்
தங்கையும்
ஒரு
சொத்துப் பிரச்சனையில்
வாய்ச்சண்டை முற்றி
அரிவாள் எடுத்து
வெட்டப்போனார்
சித்தப்பாவை
அப்பா
அவ்வப்போது
இழையோடிக்கொண்டிருந்த
பேச்சுவார்த்தையும்
அதன்பிறகு
முற்றிலும் அறுந்துவிட
தங்கையின்
திருமணப் பத்திரிகையில்
மறக்காமல்
விடுபட்டுப்போனது
சித்தப்பாவின் பெயர்
ஓடிப்போயின
பத்து வருடங்கள்
அப்படியே
சித்திக்குப்
பேசிவிட ஆசைதான்
சித்தப்பாதான்
வீம்பாக இருந்தார்
அப்பாவைப் போலவே
" இனி
செத்தாலும்
அந்த வீட்டு
வாசல்படியை
மிதிக்க மாட்டேன் "
என்று
சொல்லிக்கொண்டிருந்த
சித்தப்பா தான்
அம்மா தவறிய
செய்தி கேட்டதும்
கத்திக் கொண்டே
செம்மண் புழுதிபறக்க
ஓடிவந்து
எங்கள் வீட்டு
நிலைவாசல்படி இடித்துத்
தலையில்
காயம் பட்டுக்கொண்டார்
சிவப்பாக
வழிந்தது
சித்தப்பாவின் பாசம்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (28-Apr-15, 9:48 am)
Tanglish : SITHAPPA
பார்வை : 2650

மேலே