மீண்டும் பெண்ணாகவே பிறப்பேன்

நீ தான் ஏமாந்திருக்க கூடாதென்ற
வார்த்தைகளுக்கு முன்பாகவே
முளையிலேயே கிள்ளி எறிந்தேன்
எனது சிறு காதலையும்...

தோளின் ஈர்ப்பால் வரும்
சிலரின் ஆசை போதைகளை
துரத்திவிட்டேன் இருந்தும்கூட
ஆசிட் வீச்சுக்கு பயந்துதான் செல்கிறேன்
அவர்கள் இருக்கும் வீதிகளில்...

தந்தையின் பேச்சை
தட்டாது கேட்டு வந்தேன்
விரைவிலேயே மணம் முடிப்பார்
என்ற அக்காவின் அனுபவ
வாழ்க்கையை வேடிக்கை
பார்த்தவர்களுல் ஒருத்தியாய்...

பெண்ணுரிமையை பிச்சையாய்
போடும் சில வள்ளல்களுக்கு
எனது நன்றிகளற்ற அமைதி
மட்டுமே தலைவணங்கி நின்றது
பெண் சுதந்திரம் பேசும்
பெண்ணாதிக்கவாதி என்ற
முத்திரையை விரும்பாதவளாய்...

பார்வையாலேயே என்மீது மேயும்
பல எச்சில் நாக்குகள்
உரசி, இடித்து, கிள்ளி என்னை
ஓரளவிற்கு வேசியாய் பாவித்த
சில நிழல்களுக்கு பயந்தே
முடங்கிபோன எனது நாட்கள்
எத்தனையோ... எனது நிழலும்
கூச்சத்தோடு இருளில் ஓடி
ஒளிந்தது எனதறையில்...

ஊர்வாய்க்கு எள்ளாய் மாறிபோன
எனது கல்லூரி நாட்கள்
அதை செரிக்க முடியாத
என் தாய் உள்ளம் தீவிரப்படுத்தியது
மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை..

சில உயர்வான உறவுகளையும்
களங்கப்படுத்திய பல நாசக்காரர்கள்
ஒவ்வொரு உறவையும் தொடங்கும்முன்
விழுந்துவிடுகிறது சந்தேக
விதைகள் என்னுள்ளே...

நம்பிக்கையின் அர்த்தம்
சில சமயங்களில்
தேடும்படியாக மாறிவிடுகிறது
பல ஏமாற்றங்களால்
அப்படியே கிடைத்தாலும்
புரியாமலையே எட்ட நிற்கிறது
தீண்டிவிட முடியாத பல
கேள்விக்குறிகளாய் உருவெடுத்து....

சிரித்தாலும் அதில் சில்லறை
பொறுக்கும் சில அல்பங்கள்
நரம்பின்றி பேசி நகைக்கும்
நாற்ற வாய்கள்

பூக்களின் வாசமென்பது
தேனை பருக வண்டினம்
தேர்ந்தெடுத்த எளிய
குறுக்கு வழியே தவிர
பூக்கள் ஈர்ப்பதில்லை..

பெண்கள் பூக்களேயானால்
பூக்களின்றி செடிகள்
அனைத்தும் மலடிகளாகட்டும்

பெட்டைகோழி கூவி விடியா
உலகமது இரவின்றி போகட்டும்..
பகலொன்றையே கண்டு
சூரியன் சுட்டு எரிக்கட்டும்..

பெண்ணின் பெயரை
சொல்லி அழைப்பவைகளும்
பெண்மையை கொண்டு
வருணிக்கபடுபவைகளும்
முகவரி இழந்து போகட்டும்

கருவறையற்று போனால்
கல்லறையும் ஒரு தலைமுறைக்கே
என்பதை உணரட்டும்

இதற்குமேலும் கொடுமைகளை
தாங்கிடும் நிலை நேரிடினும்
மீண்டும் பெண்ணாகவே
பிறப்பேனே அன்றி
ஓர் ஆணாய் பிறவேன்...!!


----------------------------------------------------

மீள முடியாமல் மீள்பதிவு..

எழுதியவர் : மணிமேகலை (1-May-15, 9:22 am)
பார்வை : 150

மேலே