3 மோடியின் சைக்கிள்
சொல்கிறான் மோடி, தூயரே கேட்பீர்!
***** சொந்தமாய்க் கார்வண்டி இருந்தும்,
செல்கையில் எங்கும் சைக்கிளில் சென்றால்
***** சேர்ந்திடும் நன்மைகள் கேளீர்!
கொல்கிற புகையும் இரைச்சலும் இல்லை!
***** கூட்டமும் புழுதியும் இல்லை!
பல்கிடும் விபத்துக் கொடுமையும் இல்லை!
***** பதற்றமும் உதறலும் இல்லை!
வாரத்திற் கொருநாள் ஞாயிற்றுக் கிழமை
***** மட்டுமே இதனைநீர் செய்வீர்!
ஓரத்தில் வைத்த சைக்கிளைத் துடைத்தே
***** ஓட்டுவீர்! நீட்டுவீர் வாழ்நாள்!
நேரத்திற் கேற்ப நடப்பதே புத்தி!
***** நிச்சயம் இதைக்கடைப் பிடிப்பீர்!
சாரத்தைச் சொல்வேன் ஈர மனத்தீர்,
***** சற்றென துரையினைக் கேட்பீர்!
எரிபொருட் செலவே இந்திய நாட்டிற்
***** கேற்படும் மிகப்பெருஞ் செலவாம்!
(பெருகிடும் வண்டி வாகனங் குடிக்கும்
***** பெட்ரொலே ஆலைக்கும் அதிகம்!)
அரபிய னுக்கே வரிப்பணம் எல்லாம்
***** அள்ளிக் கொடுத்துவிட் டாற்பின்,
சரிவினை எங்ஙன் சரிக்கட்ட இயலும்?
***** சாதிக்க எப்படி முடியும்?
உரியநே ரம்இதே! உணர்வுள மக்காள்!
***** ஒருபெரும் செயல்செய வாரீர்!
இயன்றவ ரைக்கும் எரிபொருள் அற்றே
***** எங்கெணும் சென்றிடப் பயில்வீர்!
தயங்கலிர் நடக்க! தயங்கலிர் மிதிக்க!
***** தயங்கலிர் பேருந்தில் கடக்க!
மயங்கலிர் மதிப்புக் குறையுமோ வென்று!
***** மயங்கலிர் நாட்டிற்கு உழைக்க!
இயங்குவீர் இன்றே இயக்கமாய்த் தோற்றி
***** இப்பெரும் நாட்டினை உயர்த்த!
சீனத்தில் 'மக்கள் இயக்க'மாய் இதனைச்
***** சிறப்புறச் செய்கிறார்! நாமும்
ஞானத்தைப் பெறுவோம்! நம்வண்டி விட்டு
***** நடைசைக்கிள் பேருந்தில் செல்வோம்!
ஊனக்கண் பார்க்கும் கௌரவம் ஒழிப்போம்!
***** உணர்வுள்ள மனிதராய் நடப்போம்!
ஆனத்தைச் செய்வோம்! அணியணித் திரள்வோம்!
***** ஆனந்தச் சைக்கிளை மிதிப்போம்!
ஒவ்வொரு மிதியும் இலவசக் கல்வி
***** ஒருவருக் களித்திடும் வாரீர்!
ஒவ்வொரு மிதியும் மருந்தின்றி மறையும்
***** உயிரினைக் காத்திடும் வாரீர்!
ஒவ்வொரு மிதியும் விளக்கற்ற கிராமம்
***** ஒளிபெற வைத்திடும் பாரீர்!
ஒவ்வொரு மிதியும் குடத்துடன் அலையும்
***** பெண்களுக் குதவிடும் சேரீர்!
நாட்டுப்பற் றுள்ள மக்களே நீவிர்
***** நாட்டிற்குத் தலைதர வேண்டாம்!
ஓட்டுவீர் சைக்கிள்; அக்தொன்றே போதும்;
***** உயிர்தரும் செயலினும் பெரிதாம்!
ஓட்டுவீர் சைக்கிள்! ஓட்டுவீர் சோம்பல்!
***** ஓட்டுவீர் ஓட்டுவீர் அகந்தை!
காட்டுவீர் உறுதி! நாட்டுவீர் பெருமை!
***** கூட்டுவீர் கூட்டுவீர் வளமை!