என் அவளுக்கு மட்டும்

புதிதாக விடியும் என்றுதான்
நினைத்தேன் பொழுது
ஆனால் வழக்கம் போலவே
விடிந்திருக்கிறது
அவளுடைய நினைவுகளோடு
________________________________

தோழியின் உரிமைகள்
கனவுகள்,ஏக்கங்கள்
அதட்டல்கள் வரிசையில்
அவளைப் பார்க்கப் போகிற நாளும்
தனிசுகமாய் இனிக்கிறது
____________________________________

நீ எப்போது பூப்பூத்தாயோ
அப்போது நான் கவிஞனாகியிருக்கிறேன்
தொலைவில் இருந்தும்
நாம் தொட்டுக் கொண்டிருந்திருக்கிறோம்
_________________________________________

அளவு கடந்த
நேசிப்பிற்குள்ளாகி விட்டது
நம் காதலை
மீண்டும் புதுப்பித்த
உன் வீட்டு மொட்டைமாடி
______________________________________

ஏற்றவளில்லை
மிதமிஞ்சிய அறிவோடும்
அளவுமீறிய அழகோடும்
என்னை நேசிக்கிறாள்
__________________________________

எனக்கு வேண்டும்
என்தோளில் நீ சாய்ந்துகொண்டு
பேருந்துப் பயணங்கள்
காற்றை உண்டு களிக்கும்
அந்திப் பொழுதுகள்
மெலிதான மௌனம்
எனக்கான அன்பு
உயிர்த்தோழி
நீ....
___________________________________

இப்போதெல்லாம்
பூக்களைவிட
மேகத்தைவிட
உன்னைத்தான் அதிகமாய் நேசிக்கிறேன்
நீ சண்டையிடத்தான் வேண்டியிருக்கிறது
பூக்களோடும்,மேகத்தோடும்
___________________________________________

கண்களைக் கண்டு காதலைச்
சொல்லிவிட வேண்டுமென்றுதான்
தோழி
ஒவ்வொருநாளும் அருகில் வருகிறேன்
நீ சுவாசிக்கும் ஓசையை
ரசித்தபடியே என்னை மறக்கிறேன்
_________________________________________

சிலநாட்களாய் ஒவ்வொரு நொடியும்
உன்னைப் பற்றியே நினைக்கிறேன்
உன்னைப் பார்க்காத தருணங்களில்
என் உயிர் அழுகின்ற சத்தத்தை
என்னால் உணர முடிகிறது
சில்லுகளாய் உடைந்து கிடக்கிற
என் மனதை
நீ சேர்த்துவிடுவாய் என்ற நம்பிக்கையிருகிறது

_________________________________________

எழுதியவர் : தண்மதி (7-May-15, 11:57 am)
சேர்த்தது : தண்மதி
Tanglish : en avaluku mattum
பார்வை : 122

மேலே