கவிஞனுக்காக எழுதிய கிறுக்கல்

சூரியனைச்
சொடுக்கி அழைப்பான் . . .
நிலாவிலே
நெட்டி முறிப்பான் . . . . .
இவன் கையிருந்தால்
எழுது கோலும்
எந்திரம் ஆகும் . . . . .
இவன்
எழுதிடக் கரைவது
எழுது கோல் மட்டுமா ?
படிப்பவர் மனமும்தான் . . . .
ஆறாம் விரலால்
ஆகாயம் சீண்டுவான் . . .
ஏழு அதிசயமும்
எழுத்தில் காட்டுவான் . . .
எட்டாவது கடலையும்
கட்டி இழுப்பான் . . . . .
மலர்களின்
வெளிச்சத்தில்
மனங்களைப் படிப்பான் . . . .
இவன் உண்ணுவது
இனிய தமிழை மட்டும் . . .
இதனால்தான்
இன்றும் தொடரும்
உயிரும் மெய்யும் . . . . .
பாதி இரவிலும்
விழித்தே இருப்பான் . . .
பாவி இவன் மட்டும்
கனவினைக் கொள்வான் . . . .
கோமகனும்
கோவனம் கொள்வான் . . .
கோபத்தில் இவன்
கொஞ்சம் வரைந்தால் . . . .
ஆள்காட்டி விரலால்
ஆழ்கடல் துளைப்பான் . . . .
இவன் எனினும்
ஆள்காட்டி அல்ல . . .
ஊர் உலகத்துக்கு மன
ஆழம் காட்டி . . . . .
வேரில் அமர்ந்து
விருட்சம் காண்பான் . . .
சோறு என்ற ஒன்றை
தமிழோடு உண்பான் . . . . .
மலர் நிலா
வீசு தென்றல்
மாலைக் கதிரவன்
மகிழ்வான காதல்
இவைகள் தான்
இவனது செல்லப் பிள்ளைகள் . . . .
எழுத்தில் இவனுக்கு
என்றுமே பிடிக்காதது
முற்றுப் புள்ளி மட்டுமே . . . .
இவன் இவள்
என்று பேதம் இல்லை . . . .
இவர்களின்
பொதுவான விளிச்சொல்
க வி ஞ ர் க ள் . . . . .
*=*=*=*=*