அவள் அப்படித்தான்

@@@அவள் அப்படித்தான்@@@

என் அறிமுகத்தன்றே
பாவம் அவள்
மயங்கி விழுந்துவிட்டாள்,,
அதன் பின்
அவளுக்கு சுத்தமாய்
பிடிக்காத மருந்து
மாத்திரை
வாசனைகளை
வம்படியாய் திணித்தது
நானே தான்!!
மூக்கு பிடிக்க
ஒரு பிடிபிடிக்கும்
ஓரிரு பண்டங்களையும்
பார்த்தாலே
குமட்டச் செய்ததும்
என்னோட வேலை தான்!!
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தவளுக்கு
அன்னநடை பழக்கிவிட்டேன்!!
இறக்க முடியா பாரத்தை
ஏற்றி ஏற்றி
மூச்சிரைக்க வைத்தேன்!!
அவ்வப்போது எனக்கு
போரடித்தால்
அவளை எட்டி உதைத்து
பந்தாடுவேன்!!
புரண்டு படுக்கவும் விடாமல்
படாத பாடு படுத்தி
எடுப்பேன்!!
இத்தனையும் பத்தாதென்று
பொய்யாய் வலி காட்டி
பயங்கரமாய் பயமுறுத்துவேன்!!
விடிய விடிய
விழிக்கவைத்து
விளக்கூண்ணெய் கூட
குடிக்க வைத்திருக்கிறேன்!!
இறுதியாய் அன்று
உயிர்போகும் வலி
தந்து அவளை
விட்டு வெளி வந்தேன்!!
படுக்கையில் செத்துப்
பிழைத்தவளாய் சுருண்டு
கிடந்தாள் அவள்!!
பத்து மாதமாய்
அணு அணுவாய் இம்சித்த
என்னை பார்த்ததும்
என்ன செய்வாளோ
என்ற பயத்தில்
என்னையும் மீறி
"வீல்"
என்று சத்தமாய் அழுதுவிட்டேன்
ஆணாக இருந்தும்!!
அவளோ ஏதோ
சாதனை புரிந்தவனை
வாரி அணைப்பது போல்
எனைக்
கையிரண்டில் ஏந்தி
நெத்தி முத்தமிட்டு
உச்சிகோதி
முந்தானைக்குள் புதைத்துக்கொண்டாள்!!
இது கனவா?
நினைவா?
தெரியாமல்
மாரைக் கடித்துவிட்டேன்!!
அப்போதும் எனை அடிக்காமல்
புல்லரித்துப் பூரிக்கிறாளே??
புரியவே இல்லை,,
எப்படி இவள் மட்டும் இப்படி??
என்று
கனவில் வந்த கடவுளிடம்
கேட்க அவரோ
சட்டென சொல்லிவிட்டு
மறைந்தார்!!
எனக்கும் தெரியவில்லை,,
நான் படைத்த நாள் முதல்
"அம்மா"வான
அவள் அப்படித்தான்!!

எழுதியவர் : புதுமை தமிழினி (8-May-15, 12:07 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 71

மேலே