வளையங்கள்

பரபரப்பான ரயில் நிலையம் அது. சென்னை மத்திய ரயில் நிலையம்.தனக்கான தொடர்வண்டியையோ தொடர் வண்டியிலிருந்து இறங்கக்கூடிய தனது சொந்தக்காரரையோ, காதலனையோ காதலியையோ,மனைவியையோ, அல்லது யாரோ ஒருவரையோ எதிர்பாத்திருக்கும் கூட்டம் அந்த நிலையத்தை நிரப்பியது.சிலர் மூத்திர வாடையிலிருந்து தப்பிக்க கைக்குட்டையின் உதவியை நாடியபடி இருந்தனர்.சில சிறுபிள்ளைகள் தனது தாயின் முந்தானையை பற்றியபடி. சில நாட்கள் பிரிய போகும் தனது காதலலின் கரம் பிடித்தபடி ஒரு பெண்ணும் கூட நின்றிருந்தாள். 'இன்னும் சில நிமிடங்களில் மைசூரை சென்றடையும் ரயில் இரண்டாவது நடைமேடைக்கு வந்தடையும்' என்ற அறிவிப்பின் எதிரொலி அந்த இடமெங்கும் பரவ எல்லா கால்களும் சலசலத்தது. பல வண்ணங்களில் பெட்டிகளை கைகளில் தூக்கியபடி அக்கூட்டம் தயாரானது. நிலையத்தின் கடிகாரம் சரியாக ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது.
தனது பிரதான ஓசையுடன் அத்தொடர்வண்டி வந்து நின்றது. அதனருகேயே மற்றொரு நடைபாதையில்
உறங்கிக்கொண்டிருந்த பலரில் அந்த ரயிலோசையசை அலாரமென நினைத்தபடி ஓட்டுரிமை பெறுவதற்கு இன்னும் தயாராகாத தலை சட்டென நிமிர்ந்தது. இரு கைகளாலும் தனது கண்களை கசக்கியபடி.. தனது சுமையை சுமக்க தயாரானது அந்த பதின்மூன்று வயது கைகள். ஆம் அதற்கு அது சுமை தான். ஒரு அலுமினியத் தட்டு அதில் பெண்களின் பொட்டு , சடை மாட்டி, ரிப்பன் போன்ற சில சமாச்சாரங்கள்.அவள் கண்களை கசக்கி முடிக்கயில் தெளிவாக தெரிந்தது அந்த குழந்தைதனம் மாறாத முகம். மெதுவாக எழுந்தாள்.கணுக்கால் தாண்டாத அழுக்குப் பாவாடை. சிறிதளவு வயிறு காட்டும் தையல் மிகுந்த சட்டை.நக இடுக்குகளில் கொஞ்சம் கறுப்பு சேர்ந்த விரல்கள். அவளும் கறுப்பே.. விறுவிறுவென அவளின் கால்கள் நடக்க தொடங்கி அந்த பிரதான சாலையை கடந்து தனது வியாபாரத்திற்கான இடத்தை நோக்கி நடந்தது. அதன் வழியில் வழக்கமாக குடிக்கும் தேநீர் கடையில் தண்ணீர் வாங்கி வாய் கொப்பளித்து முகம் கழுவிவிட்டு தன்னிடம் இருந்த சில்லறைகளை எண்ணிக் கொடுத்து "ஒரு டீ" என்றாள் தனது ஓட்டை பல் தெரிய.. அவளுக்கான காலை பசியை தேநீரில் கரைத்தபடி மீண்டும் வியாபாரத்திற்கான இடம் நோக்கி விரைகயில்..
அந்த அழகான பொம்மை வாகனம் தென்பட்டது அவள் கண்களில்.. முழுவதும் நீல நிற தார்ப்பாய் போட்டு மூடிய அந்த நடைபாதை கடையில் அந்த சிகப்பு நிற விளையாட்டு வாகனம் மட்டும் வெளியில் தெரிந்தபடி இருந்தது. அருகில் நெருங்கினாள் சுற்றும் முற்றும் பார்த்தாள். தார்ப்பாய்க்கு பின் ஒரு தலை தரையில் கிடந்தது. பெரும்பாலும் அது நல்ல உறக்கத்தில் தான் இருக்க வேண்டும். அந்த கடையின் சொந்தக்காரராக கூட இருக்கலாம். பல சிந்தனைகள் இவள் மனதில் ஓட விளையாட்டு மனம் எதையும் பொருட்படுத்தாமல் அந்த சிவப்பு நிற காரை திருடி தனது சட்டைக்குள் பதுக்கி மீண்டும் நடந்தது. திருட்டு.... இதை தவிர அழகான வார்த்தை அதற்கு பொருத்தாது இச் சமூகம். மணி ஏழை நெருங்கியது. கடக்கின்ற கூட்டத்தில் விற்க தொடங்கினால்.. 'பான்சி பொட்டு இருக்கும்மா, ஹேர் கிளிப்ஸ் இருக்கு, எல்லாமே பத்து ரூபா தான்' ஒரு பெண்ணிடம் தனது வியாபாரத்தை தொடங்கியிருந்தாள் அவள்.

2.
முழுவதும் மஞ்சள் நிறம். மெல்ல மெல்ல அவனின் பார்வை முன்னிருந்து பின் விரிய அங்குமிங்கும் பல வண்ண உடை சிறார்கள் நடந்தும் விளையாடியும் கொண்டிமிருந்தனர்.
அந்த மஞ்சள் நிறம் இப்பொழுது அம்மேடையின் திரையானது. அவனின் பார்வை அகல விரிய ஒரு சிறுமி மின்னும் பாவாடையும் ஜொலிக்கும் சட்டையுடனும் ராதை வேடத்தில் அவனை நோக்கி நெருங்கினாள். அவனின் இதழ் மெதுவாக புன்னகைத்தபடி "ஹாய்" என்றான். தடால் புடாலக பள்ளி ஆண்டுவிழாவின் நடன நிகழ்ச்சி ஆயத்தங்கள் நடந்துக்கொண்டிருந்தன.வண்ண தாள்களுடனும் தெர்மாகோல் வாசங்கங்களும் சிறப்பு விருந்தினரை வரவேற்க தயாராக இருந்தன.. சேலை கட்டிய ஆசிரியைகள் பரபரப்புடன் சில அட்டைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தனர். கொஞ்சம் தூசி படர்ந்தே இருந்தது அப்பள்ளியில். அச்சிறுமி அவனருகில் வந்து நின்றாள். தூசி விலக தெளிவானது. அந்த ஹேர் கிளிப்ஸ் விற்ற அதே சிறுமி. அது ஒத்திகை பார்க்கப்படும் ஒரு கூடத்தின் ஜன்னல். 'என்ன ஜாக்சன், பிராக்டிஸ் நல்லா பண்ணிட்டியா .. ஆல் த பெஸ்ட்..' என்று ஜன்னல் வழியே கை நீட்டினால் ராதை. ராதையும் ஜாக்சனும் கைகுலுக்கிகொண்டனர். டிர்ரிங்க்க்கக்க்க்.. மணியோசை கேட்டது. திரை விலகியது. முதலில் ராதை ஆடினால்.
'கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா .. மறை மூர்த்தி கண்ணா..' பாடல் முடிய நடனம் முடித்தாள் ராதை. கரகோஷம்.. 'அடுத்ததாக ஆறாம் வகுப்பு 'எ' பிரிவு நடத்தும் ஒரு குழு நடனம்.'
குழு நடனம் அரங்கேறியது 'கையளவு நெஞ்சத்துள கடலளவு ஆசை...' நடன முடிவில் கரகோஷம்...
'வெஸ்டர்ன் பாடலுக்கு நடனமாட ஜாக்சனை அழைக்கிறேன்' நிகழ்ச்சி தொகுக்கும் ஆசிரியை மீண்டும் அறிவித்தார். 'ஜாக்சன் .. ஜாக்சன்..' ஜாக்சன் விரைந்து வந்து மேடையில் சருக்கி வீழ்ந்தான் .. கூட்டத்த்தில் சிரிப்பொலி.. கை ஊன்றி மெல்ல மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் எழுந்து பெல்டில் கை வைத்து இன்னொரு கையையால் தொப்பியை மெல்ல மேலேற்றினான்.. வண்ண விளக்குகள் அவன் முகத்தை மிளிர செய்தன.. கூட்டத்தில் கரகோஷம்.. வளைந்து நெளிந்து ஜாக்சன் ஆடி முடித்தான் அந்த 'டேஞ்சரஸ் ' பாடலுக்கு...
சிறிது அமைதி .. சிறிது சலசலப்பு.. திரை மீண்டும் திறக்க.
சிறப்பு விருந்தினரும் பள்ளி தலைமை ஆசிரியரும் வரிசையாக அமர்ந்திருந்தனர். வழக்காமாக சிறுவர்களை தூங்க வைக்கும் சில சொற்பொழிவுடன் தனது உரையை முடித்து அமர்ந்தார் சிறப்பு விருந்தினர். பரிசுகளை அறிவிக்கும் நேரம்.. அதே தொகுப்பாளினி வந்து நின்றார்.
கூட்டம் ஆர்வமாகியது,,.. தொகுப்பாளினி அறிவிக்க ஆரம்பித்தார்... உதடு மட்டும் அசைந்தது குரல் சத்தம் கேட்கவே இல்லை... மைக் செட் காரர் மேல வந்து தனது திறமையால் எதையோ திருகி 'டொக் டோக் ' என்று இருமுறை அடித்து .. 'இப்போ பேசுங்க மேடம்' என்றான்..
ஆசிரியை மீண்டும் அறிவிக்க தொடங்கினார்.. 'முதல் பரிசு .. முதல் பரிசு டேஞ்சரஸ் பாடலுக்கு ஆடிய ஜாக்சனுக்கு.. இந்த பரிசை தருமாறு கல்விக்காக பல பணிகள் செய்யும் நமது வட்டார கவுன்சிலர் திரு.சுப்பையா வை தாழ்மையுடன் அழைக்கிறேன்.' ராதையின் கரகோஷம் சற்று மேலோங்கியிருந்தது.
ஜாக்சன் பரிசு பெற மேடை ஏறினான்.. பரிசை குடுக்க சுப்பையா நெருங்கினார்.. நெருங்கி வந்து பரிசு கோப்பையை எடுத்து திடீரென்று தனது முகத்தை கோபத்தில் சிவக்க வைத்தவாறு ஜாக்சன் தலையில் படார் என அடிக்க கை உயர்த்தினார் சுப்பையா.

3.
மெட்ரிகுலேசன் என்று சொல்லக்கூடிய எல்லா அடையாளங்களுடனும் இருந்தது அந்த வகுப்பறை.
மூக்குக்கண்ணாடி வழியே 360 டிகிரி கோணத்திலும் பார்வையிட்டுவிட்டு பாடம் எடுக்க தொடங்கினாள் அந்த ஆசிரியை.ஹேர் பின் விற்கும் சிறுமியிடம் பேரம் பேசிக்கொண்டிருந்த அதே பெண் தான் ஆசிரியர் சொரூபினி. கரும்பலகை ||| 'A' sec என்று காட்டியது. 'டு டே ஐ அம் கோயிங் டு டீச் யு இந்தியா மேப்' என்று சொல்லியவாறு அந்த இந்திய வரைப்படத்தை தொங்க விட்டார் ஆசிரியர். திஸ் இஸ் காஷ்மீர் விச் இஸ் டாப் ஆஃப் அவர் கன்ரி.. திஸ் இஸ் ... திஸ் இஸ் .. என்றவாறே எல்லா மாநிலங்களையும் அதன் சிறப்புகளையும் சொல்லி முடித்தார் சொரூபினி. ஒரு கடைசி இருக்கை மாணவன் தூங்கி விழுந்துக் கொண்டிருந்தான்.. சோடாபுட்டி கண்ணாடியோடு. 'வருண்............................' என்று கத்தியவாறு அவன் தூக்கத்தை கலைத்தார் ஆசிரியர்.. 'கம் அண்ட் ஷோ வேர் இஸ் தி மத்திய பிரதேஷ்..'.. வருண் நடுங்கியவாறே நடந்து வந்தான்.. 'பிரிங் யுவர் பென்சில்' என்று மீண்டும் அலறினார் சொரூபினி.. தடுமாறியவாறே பென்சிலை எடுத்துக்கொண்டு மெதுவாக இந்திய வரைப்படத்தின் அருகில் வந்து நின்று திகைத்து நின்றான்.... பென்சிலை மெள்ள மெள்ள காஷ்மீரில் இருந்து சிந்து நதிக்கு தாவி திரும்பவும் அஸ்ஸாமிற்கு பயணிக்க வைத்தவாறு திகைத்துக்கொண்டிருந்தான் வருண்.. ஆசிரியர் முகம் சிவக்க ஆரம்பித்தது.. உச்சி ஏறிய கோபத்தோடு.. 'ஷோ......................................................................................' என்று அலறினார்..........

4.
மேடை மறைந்து நீல வண்ண தார்ப்பாயானது மஞ்சள் சட்டை கறைபடிந்த பற்களுடன் சுப்பையாவின் கையில் ஒரு குச்சி. சுளீரென வலிக்க
தார்ப்பாய்க்கு பின் தூங்கிக்கொண்டிருந்த ஜாக்சனின் தலை நிமிர்ந்தது. கண்களில் தண்ணீர். கனவு கலைந்திருந்தது.
5.
ராதை தான் திருடிய விளையாட்டு வாகனத்தில் இரண்டு பக்கமும் கிளிப்பை மாட்டி இறக்கை என கற்பனை செய்து
பறக்கவைத்து கொண்டிருந்தாள். அவசரமாய் ஓடிவந்த ஒரு இளைஞனின் கால்கள் அதை தடுக்கிவிட்டு சென்றதில். கற்பனையில் பறந்த கார் விழுந்து நொருங்கியது.
6.
ஷோ..... என்று ஆசிரியர் கத்தியதில் பதட்டப்பட்டு வருண் பென்சிலை அழுத்த இந்தியாவில் ஓட்டை விழுந்தது.
7.
'கைத.. சோத்த துன்னுட்டு வேலைய செய்யாம .. ஜனம் கூடுற நேரத்துல தூங்கினுகீது பாரு.... காலாங்காத்தால..'
கார் கடையின் உரிமையாளர் சுப்பையா, ஜாக்சனை அதட்டி கொண்டிருந்தார். பாதி தூக்கத்தில் கசிந்துக்கொண்டிருந்த கனவில் வந்த ராதை எங்கே என சுற்றி ஜாக்சன் கண்களை சுழட்ட .. அதோ அந்த சாலை முடிவில் கற்பனை உடைந்த சோகத்தில் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-May-15, 9:35 pm)
Tanglish : valaiyankal
பார்வை : 305

மேலே