ஜய காந்தம்

அலையாடு மாழியின் கரையதன் மேல்ஒரு
குடிசையாம் குடிதனிற் கோ பிறந்தான் – அவன்
விடியலின் வெள்ளியாய் ஒளிதரும் அறிவினால்
வாழ்வெனும் படிகளைப் படித்தறிந்தான்!

குடிகளின் வாழ்வதன் குறிப்பறிந்தான் – அதைக்
கூர்கொண்ட மதியதால் விரித்தறைந்தான்! - அவன்
சிந்தனை மரத்ததன் வேரறிந்தான் - அதன்
துணையதால் மடத்தன வேரரிந்தான்!!

வேலவன் நூலவை போர்முடுக்கும் - நல்ல
போரது மூளைக்கு முள்ளுக்குமாம்!
வாழ்வதன் மூலத்தை வேல் உரைக்கும்! – அது
மாயத்தின் பித்தத்தின் வேரழிக்கும்!

சுத்தத்தி னிலக்கண மஃதுரைக்கும்! பெரும்
சூட்சுமம் யாதென அறிவுரைக்கும்!
வேற்றுச்சொல் மேய்ப்பவர் மோவாயின்மேல் – அது
துணிந்தேதன் வெஞ்சினத் தார்தெளிக்கும்!

போகமாம் போர்வையைக் கூர்வாளினால் பெரும்
நோவின்றி வேகமாய்ப் பிய்த்தழிக்கும்! – சிறு
காகமும் ராகமாய்ப் பாடுமென்றே சில
நாகங்கற் சொல்அதை அஃதிழிக்கும்!

மோகத்தின் மேகத்துள் குளிர்பெரும் மாந்தர்தம்
பேதைமைக் கண்டதைப் பழித்துரைக்கும்! அது
வேகமொன் றில்லாத செந்தமிழ் யாகத்தைச்
செய்வ தஃதெங்ஙனம் என்றுரைக்கும்!

பெருந்தாகம் தணிவிக்கும் பெருமழைத் தருவிக்கும்
பெருங்காந்த மலையதைச் சேர்வதெந்நாள்?! – எதிர்
வரும்பாதை முன்னேற விழைந்திட்டேன் – சிறுதுகள்
மூட்டுடை முடவனாய் முன்விழுந்தேன்!

கடுகுநான் தமிழெனுங் காரமில்லை – அந்த
முதுவிளம் காந்தன்போ லாவதெந்நாள்?! – இளம்
பயிரதன் கதிர்தரு தீம்பாற் போலே – இங்கு
இனிக்கின்ற இலக்கியஞ் செய்வதெந்நாள் ?!

ஜயகாந்த மலையது மருள்விப்பதோ? இல்லை,
ஜயம்தரும் பெருங்காந்தத் தமிழ்ழ்ழ்ழ்மலையாம் – அது
துருவாகித் துய்க்கின்ற துகளையுங் கூடநற்
தமிழ்காந்தத் துகளென மாற்றுவிக்கும்!

நால்வட்ட வாகனம் காணிமேல் வீடேன
வாழ்வதும் வாழ்வென நினைந்திருப்பின் – அந்த
தேள்கொட்டும் நினைப்பினைப் புறந்தள்ளி நல்லதாய்
தேன்கொட்டும் வாழ்வதை வாழவைக்கும்!

ஞானத்தின் பீடத்தின் அதிபதி காந்தத்தை
ஞாலத்தில் வழிபடு மாந்தருள் நானுளன்!
நானவன் பாதத்தை வாழ்கின்ற வழிசொலும்
வேதமாய் போற்றியே வணங்கினேன், வாழ்த்துவான்!!


**************************************
அன்புடன்
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (9-May-15, 7:37 am)
பார்வை : 1131

மேலே