படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை -காத்திருக்கிறேன் அண்ணா-தேவி

எங்களை கட்டி காத்த அப்பா
ஏர் உழுத போதே
வெயிலில் மயங்கி
விழுந்து மாண்டு போனார்.

மழை வரும்
பட்டத்தில்
விவசாயம் பார்க்கும்
வென்காத்து பூமி

வானம் பார்த்தே
வாழ்க்கையை ஓட்டும்
எங்க ஊரில்
மாட்டுக்கு கூட புல்லு இல்லை.

சுள்ளி பொருக்கி
கள்ளி பொருக்கி
எங்கண்ணன ஏதோ
படிப்பு படிக்க வெச்சா எங்கம்மா .

ஆசை தங்கச்சி
என்னை நகை நட்டு போட்டு
கட்டிகுடுக்க வேணுமுன்னு
கண்டம் தண்டி கடல் தாண்டி
காசு சேக்க போன அண்ணா.

பச்சை மிளகா கடிச்சிட்டு
பழயத குடிக்கயிலும்
வயித்துக்கு நீ என்ன
பண்ணறயோன்னு கவலயில
தொண்டைக்குள்ள எரங்கலையே!

காசும் வேண்டா கப்பும் வேண்டா
நகையும் வேண்டா நட்டும் வேண்டா
சீக்கிரமா வந்திரு அண்ணா!

இருப்பத வெச்சு பொழச்சிக்கலாம்
சேர்ந்திங்க வாழ்ந்திடலாம்.
காத்திருக்கேன் வந்திடண்ணா.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (9-May-15, 10:59 am)
பார்வை : 141

மேலே