மாயவரம் போகணும்- நகைச்சுவை நாடகம்-அருணை ஜெயசீலி

..............................................................................................................................................................................................

பாத்திரங்கள்: அரசு ஊழியர் தேவதாஸ், அவன் மனைவி ரேணுகா, ரேணுகாவின் தம்பி மென்பொருள் என்ஜினியர் பரசுராமன், ரேணுகா மற்றும் பரசுராமனின் தங்கை வத்சலா, சில்வர், பித்தளை மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள்.

தேவ : இன்னிக்கு தேதி மே ஆறு. அடடா, எங்க பாஸோட மகளுக்கு இன்னிக்குத்தானே மாயவரத்தில கல்யாணம். நான் ஜூன் மாசம் அஞ்சாம் தேதின்னு தப்பா குறிச்சுட்டேனே. இப்ப காலை மணி ஏழாகப் போகுது. நான் எப்படி திருவண்ணாமலைல இருந்து கிளம்பி மாயவரம் போய் கல்யாணம் அட்டெண்ட் பண்றது? போச்சே, என் பிழைப்பு போயிடும் போல இருக்கே ????
மானேஜர் பாவி தப்பா எடுத்துப்பானே ??? ரேணுகா.... ரேணுகா...

ரேணு : (வந்து கொண்டே) ஏன் ஊளையிடுறீங்க?

தேவ : ஆங்... ஒரு நரியை முழுங்கிட்டேன்; அதான்.. ஊளையிடுறேன்... பாஸ் வீட்டுக் கல்யாணத்தை மிஸ் பண்ணிணா விளைவுகள் விபரீதமாப் போயிடுமே...! என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுட்டிருக்கேன்..!

பரசு : என்ன அத்திம்பேர் பிரச்சினை?

தேவ : வாடா ஆபத்பாந்தவா.. ! சவடால் பேர்வழி! உனக்கு சமத்திருந்தா இன்னும் பத்து நிமிஷத்துல என்னை மாயவரம் அனுப்பி வைடா பார்ப்போம்!

பரசு : மாயவரம் எங்க ஊர்னா.. ! எங்க வீடு அங்கதானே இருக்கு?

ரேணு : நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற கல்யாண மண்டபத்துலதான் இவர் பாஸ் வீட்டுக் கல்யாணம். தேதியை ஒழுங்காப் பார்க்காம இப்ப முழிச்சிட்டு நிக்கறார். வழக்கம் போல நம்ம கிட்ட கத்தறார்.... !

தேவ : டேய்.. ! டேய்... ! இப்ப என்னடா பண்றது?

பரசு : உங்களுக்கு உடனே மாயவரம் போகணும், இல்லையா?

தேவ : ஆமாண்டா, ஆமாம் !

பரசு : அத்திம்பேர், நான் ராத்திரி இங்க ஒரு சிஸ்டம் செட் பண்ணி வச்சேன். அதே போல மாயவரத்துல என் ரூமுக்குள்ளேயும் ஒரு டிவைஸ் இருக்கு. நெட்டுல ஈமெயில் அனுப்பற மாதிரி உங்களை டிஜிட்டலைஸ் பண்ணி எலக்ட்ரானிக் எனர்ஜியா மாத்தி அனுப்பி வச்சிடவா?

தேவ : என்னது?

பரசு : நான் இந்தப் பரிசோதனைக்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்னு எழுதி ஒரு கையெழுத்தைப் போடுங்க... !

தேவ : டேய், நான் உன் அத்திம்பேர். உங்க அக்காவோட புருஷன். அத நீ ஞாபகம் வச்சுக்கோ...
( கையெழுத்துப் போடுகிறான்)

பரசு : சரி, சரி. அந்த ரூமுக்குள்ள போங்க. அத்திம்பேர் ! என் சிஸ்டம் உயிரில்லாதது, உபயோகமில்லாதது, வைரஸ், பாக்டீரியா இதையெல்லாம் சென்ஸ் பண்ணாது. அதனால நீங்க பப்பி ஷேமா மாயவரம் போய் நிப்பீங்க. டிரஸ் பண்ணிட்டு கல்யாணத்துக்குப் போயிடுங்க.... !

சில நொடிகளுக்குப் பிறகு..

பரசு : அக்கா, அத்திம்பேர் நீளமா இருக்காராம். முன்னூத்தி பதினேழு தடவை அனுப்பலாமான்னு கேக்குது சிஸ்டம்... !

ரேணு : டேய்.. என்னடா நீ? ராமா, கிருஷ்ணா ! என் தாலியைக் காப்பாத்து. நீ என்னமோ பண்ணுடா !

பரசு : அத்திம்பேரை காப்பாத்துன்னு வேண்ட மாட்டியா?

சில நொடிகளுக்குப் பிறகு..

பரசு : (கைபேசியில்) வத்சலா, நம்ம வீட்டுல என் ரூமில இன்பாக்ஸ்ன்னு ஒரு குட்டி போர்ஷன் இருக்கும். அதுல நம்ம அத்திம்பேர் வந்துட்டதா சிஸ்டம் இண்டிமேட் பண்ணுதான்னு பாரு...

வத்ச : (மாயவரத்திலிருந்து கைபேசியில்) ஆமா, ஃபோர் லாக்ஸ் டிரில்லியன் டெட்ராபைட் லோட் ஃபிரம் திருவண்ணாமலை; இப்படி முன்னூத்தி சொச்சம் லோட்..... ! டேட் மே ஆறு ! டைம் எட்டு மூணு..... மோட்னு போட்டு நீள நீள நம்பர்ஸ்...

பரசு : ஆமா, அதேதான். நீ என்ன பண்றே, கண்ணை மூடிட்டே எண்டர் அழுத்து. அப்படியே ஒரு துண்டை தூக்கிப் போட்டுட்டு ஓடிப் போயிடு..... !

வத்சலா மேலும் ஏதோ சொல்ல பரசு அக்காவைக் கூப்பிடுகிறான்..

பரசு : அக்கா, அத்திம்பேர் மாயவரம் போய்ச் சேர்ந்தாச்சு.. ! ! ! ! !
அதுவும் ஐம்பத்தி எட்டு நொடியில.... ! ! ! ! ! ! !

ரேணு : பரசு ! ! ! ! நீ கிரேட் டா.

பரசு : ஆனா அக்கா, அத்திம்பேரோட மூளை மட்டும் வரலியாம். அது வர லேட்டாகும் போல இருக்கு... !

ரேணு : அட தம்....பி, உங்க அத்திம்பேருக்கு கல்யாணமாயிடுச்சு, தமிழ்நாடு கவர்ன்மெண்ட்ல வேலை செய்றாரு. இனி எதுக்கு அவருக்கு அதெல்லாம்...?????? பாஸ் வீட்டுக் கல்யாணத்துல எஸ் சார், எஸ் சார்னு தலையாட்டப் போறாரு.. கூழைக் கும்பிடு போடப் போறாரு. அவ்வளவுதானே? அப்படியே அனுப்பி வைடா... !

பரசு : நிஜமாத்தான் சொல்றியா?

(வத்சலாவிடம் எண்டர் தட்ட சொல்கிறான்)

( இரண்டு மணி நேரம் கழித்து வத்சலாவிடமிருந்து ஃபோன்)

வத்ச் : பரசு, நான் எண்டர் தட்டிட்டேன். அத்திம்பேரை கூப்புட்டுக்கோ.

திரும்பவும் சில நொடிகளுக்குப் பிறகு..

பரசு : அக்கா, இன்பாக்ஸ்ல அத்திம்பேர் வந்துட்டார், பார்.

ரேணுகா : (பார்த்து விட்டு) டேய், பாவி.. ! என்னடா பண்ணே? உன் அத்திம்பேர் யானைத் தலையோட நிக்கிறார்டா.... ! அதுவும் ஆளில்லாத அமேசான் காட்டு யானை ! ! ! !

பரசு : பதறாதே, பதறாதே ! டெக்னிக்கல் எரர்தான். இப்படி மூளையை லோட் பண்ணா தன்னால சரியாயிடும். ஹை.. ! அக்கா, அத்திம்பேர் இப்பத்தான் அழகா இருக்கார். ஒரு பிள்ளையார் சதுர்த்தி வரைக்கும் இப்படியே இருந்துட்டுப் போகட்டுமே?

ரேணு : ஐயே, இடிச்சேன்னா? சாப்பாடு யார் போடுறது?

(முழுதாக வெளி வருகிறான் தேவதாஸ்)

தேவ : கல்யாணம் நல்லபடி நடந்திடுச்சு ரேணுகா. பரசுவுக்குத்தான் நன்றி சொல்லணும். என்னமோ தெரியலை ரேணுகா.. மேனேஜர் என்னை அப்படிப் புகழ்ந்தார்.... ! உங்க சர்வீஸ்ல இது வரை நீங்க இவ்வளவு அறிவுப்பூர்வமா பேசி நான் கேட்டதில்லையேன்னு சொல்லிட்டார். ! என்னோட புரமோஷனுக்கும் ஏற்பாடு பண்றேன்னுட்டார்.... !

(தேவதாஸ் பேசிக் கொண்டே போக, ரேணுகா பொருள் பொதிந்த பார்வையால் பரசுவைப் பார்க்கிறாள்...)

பரசு : அடக் கடவுளே ! ! !

(தலையைப் பிடித்துக் கொள்கிறான்)

சுபம்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (11-May-15, 2:29 pm)
பார்வை : 690

மேலே