அந்த நாள் ஞாபகம்

அந்த நாள் ஞாபகம் !!
************************************************************************************
சந்தான கிருஷ்ணன்-யசோதா தேவி தம்பதிக்கு அன்று இருபதாவது திருமண நாள். இருவரும் கடற்கரை உணவகத்தில் சாப்பிட்டு விட்டுப் பூங்காவில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சந்தான கிருஷ்ணன் - (கண்களில் பெருகும் கண்ணீருடன், கேவியபடி சொல்கிறார்) "யசோதா, இன்று நமது இருபதாவது திருமண நாள்! இதை நினைத்தால் ---- நினைத்தால் ---- என்னால் என் மன உணர்வுகளைத் தாங்க முடியவில்லை!"

யசோதா தேவி - "அட ராகவா! இதென்ன ஏதோ போன வருடம்தான் திருமணமானதைப் போல இவ்வளவு உணர்ச்சி வசப் படுகிறீர்களே! இருபது ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!"

சந்தான கிருஷ்ணன் - "அதுதான் யசோதா நானும் சொல்கிறேன்! இருபதே ஆண்டுகள் முடிந்து விட்டது!"

யசோதா தேவி - "அதுதானா? அதற்கென்ன இப்போது? இவ்வளவு கண்ணீர் விடுகிறீர்களே! நீங்கள் அழுதால் எனக்கும் அழுகை வருகிறது!"

சந்தான கிருஷ்ணன் - "அதில்லை யசோதா! அந்த நாள், அதுதான் நாம் காதலித்துக் கொண்டிருந்த நாள் என் நினைவில் வந்து விட்டது! உனக்கு நினைவிருக்கிறதா?"

யசோதா தேவி - "ஓ! நன்றாக நினைவில் இருக்கிறது!"

சந்தான கிருஷ்ணன் - "அப்போது தோட்டத்தில் நாம் திருட்டுத் தனமாகச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது நம்மைக் கையும் களவுமாகப் பிடித்த உன் அப்பா சொன்னது நினைவில் வந்ததா, எனக்கு உணர்ச்சி மேலிட்டு விட்டது யசோதா!"

யசோதா தேவி - "ஆமாம்! அவர், "டேய்! இப்படித் திருட்டுத்தனமாக என் மகளைக் காதலித்து என்னை அவமதிக்கும் அளவு உனக்கு தைரியம் உள்ளதா? இப்போது மரியாதையாக உண்மையைச் சொல்! ஒழுங்காக உன் பெற்றோருடன் வந்து என் மகளைத் திருமணம் செய்து கொள்கிறாயா; இல்லை உன்னைப் போலீசில் பிடித்துக் கொடுத்து ஒரு இருபது வருடம் காவல் தண்டனை வாங்கிக் கொடுக்கட்டுமா?" என்றார் இல்லையா?"

சந்தான கிருஷ்ணன் - "ஆமாம்! நன்றாக நினைவில் உள்ளது யசோ!"

யசோதா தேவி - "அதெல்லாம் சரி! இப்போது அதற்கென்ன வந்தது?"

சந்தான கிருஷ்ணன் - "ஒன்றும் இல்லை! உன் அப்பா அன்று சொன்னதில் நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்திருந்தால், இன்றைய நாளில் விடுதலை ஆகிச் சுதந்திர மனிதனாக வெளியில் வந்திருப்பேன் இல்லை?"

எழுதியவர் : செல்வப் ப்ரியா (12-May-15, 4:05 am)
பார்வை : 280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே