என் கண்ணீர் துளிகள் இரண்டு மிச்சப்பட்டிருக்கும்
விதி என்று சொல்வதற்கில்லை
மகனுக்கு நான்கு வயதுதானாம்
மறுமணம் நிகழ்ந்திருக்கலாம்
மகளொருத்தி இல்லாதக் குறையை
அண்ணன் மகளிடம் தீர்த்துக் கொண்டிருக்கிறாள்
திருமணம் முடிந்தக் கையோடு
அன்னையை கட்டி அழுதவல்
தள்ளி நின்ற அத்தையை
திரும்பியும் பார்க்கவில்லையாம்
அதிகமாய்தான் அன்பை
ஓரிடத்திலேயே கொட்டிவிட்டால் போலும்
பெயர் சொல்லிதான் அழைக்கிறான்
இருபது வயது மகன்
அவன் வயதில்
நான்கு வயது மகனோடு
தனித்து விடப்பட்டவளுக்கு
பாவம்
பிள்ளை வளர்ப்பு முறை
புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லை தானே
யாரோடும் பேசினாலும்
ஆடையில் வண்ணமும்
உணவில் உப்பும்
அதிகமாகி போனால்
ஏளனப்படுத்தபடுவாளென
ஒதுக்கியும் ஒதுங்கியும்விட்டாலாம்
துணித் தைக்க கொடுத்தப் பாவத்திற்காய்
என் துளி கண்ணீரையும்
துணையென பெற்றுக் கொள்கிறாளே
போதவில்லை போலும் அவளுடைய கண்ணீர்
சொல்லி அழ
தோலில் சாய்ந்துக் கொள்ள
இப்போதும் நானா கிடைத்தேன்
அன்றொரு முடிவை ஆதாரப்படுத்தியிருந்தாலானால்
என் கண்ணீர் துளிகள் இரண்டு மிச்சப்பட்டிருக்குமடி பாவி...