யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 29

இந்தக் கவிதைகளால் பயன் என்ன ? இந்தக் கேள்வி நம்மில் பல பேருக்கு வந்து கொண்டே இருக்கிறது .கவிதைகள் எழுதியதை விட இந்தக் கேள்விகள் வந்த தருணம் அதிகம் . ஒவ்வொருமுறை கவிதை எழுதி முடிக்கும் போதும் இக்கேள்வி என்னை துளைக்கிறது ..
யோசித்துப் பார்த்ததில் எனக்கு நானே இப்படி சொல்லி கொள்கிறேன் ..

"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம் "....

ஆம் பாரதி சொன்னதை எனக்குச் சொல்லி கொள்கிறேன் .உங்களுக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன் .
முதல் வரியையும் கடைசி வரியையும் நோக்குங்கள் . இரண்டாம் வரியில் விடை உண்டு .
கவிதை கலவி போன்றதே .அது இன்பத்தையும் தரும் , மானுடத்தையும் வளர்க்கும் .
எனவே அதன் உள்ளே பொதிந்து கிடக்கும் இன்பமும் ( அழகியலும்) , மானுடமும் ( சமூக இலக்கியமும் ) தவிர்க்க முடியாதவை ..அவை ஒன்றோடு ஒன்று பயணம் செய்வதில்தான் மானுட மகிழ்ச்சியும் , வளர்ச்சியும் இருக்கிறது .

சரி ..எந்தக் கவிதைகள் மகிழ்ச்சி தருகின்றன ? எந்தக் கவிதைகள் வளர்ச்சி தருகின்றன ?
விடை ஒன்றே ...ஏதோ ஒரு செய்தியை , புதுமையாய் சொல்லும் கவிதைகள் நீடித்து நிலைக்கின்றன ..அச்செய்தி நற்செய்தியாய் இருப்பின் .

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றவன் மட்டுமா நற்செய்தியைச் சொன்னவன் ?.
இல்லை .
//அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.// என்று வண்டை கேட்டவன் ..
//நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட// ( சிலப்பதிகாரம் ) கோவலன் மதுரை மாநகரத்திற்குள் நுழையும் போது காற்றிலாடும் வாயிற் கொடிகள் அவன் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறியவன் ..
//எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!// என்று சொன்னவன் ..எல்லோரும் ஒரு நற்செய்தியை புதுமை கலந்து சொன்னவர்கள் ...

இந்தப் பரம்பரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது .. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இன்று மாங்கல்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பின்னும் தன் கவிதைகளை இன்னும் இன்னும் யுகங்கள் தாண்டி செலுத்துகிறது ...

ஒரு தமிழ் கவிதையின் வீச்சு எல்லா உலக மொழி கவிதைகளுக்கும் குறைந்தது அல்ல ..சொல்லப் போனால் தன் பின் புலத்தை பெரிய பலம் என உணர்ந்து தமிழ் கவிதைகள் தன் அடையாளத்தை சிறப்பாக இன்று வரை காப்பாற்றுகின்றன ..
" MORE ETHNIC IS MORE INTERNATIONAL " என்பார்கள் .அந்த முறையில் எழுதப் படும் கவிதைகள் நிலைத்தும் நிற்கின்றன .

அப்படிப்பட்ட சில கவிதைகளை இங்கு எடுத்துப் பதித்து ஆனந்தமுறுகிறேன் ..நானும் படித்த படியே .

*** கவிதை என் 204530 .எழுத்து.காம் " திரவங்களினாலான " எழுதியவர் சரவணா ***
தமிழ் கவிதையுலகின் மிக முக்கியமான கவிதை ...
ஒரு புது மணத் தம்பதியின் காதல் வாழக்கையை கண் முன்னே நிறுத்துகிறார் சரவணா ..ஆரம்பம் பாருங்கள் கீழே ...

//அழகாயிருப்பதாய்
மொழிகிறேன்...ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
ஏற்கிறாய்.....
திமிரோடிருப்பதாய்
மொழிகிறேன்....ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
மறுக்கிறாய் .... இரண்டுக்குமான
ஒற்றை வித்தியாசம்
ஒருதுளி கண்ணீர்.....!!! //

திருமணம் முடித்த ஒரு வாரம் அல்லது பத்து நாளில் இந்தக் காட்சி படிப்பவர் எல்லோருக்கும் வாய்த்திருக்கும் ..அதனால்தான் அதைக் கவிதை ஆக்கும்போது வாசகன் ஒன்றி விடுகிறான்

எவ்வளவு அழகாய் நம் பின்புலத்தோடு நம் காதலை அது பேசுகிறது .இப்படியே படித்துக் கொண்டிருக்கையில் அந்த மனைவி கடைசியில் கணவனை அவசரமாக வர சொல்கிறாள் ஒரு நாள் ...

//அலுவலகநாள் முற்பகலில்
அவசரச் செய்தியென
வரச் சொல்கிறாய்....!
பதறிச் சென்றிருந்த
எனையமர்த்தி...
விலக்கு தள்ளிப்போய்
விருத்தி வந்திருப்பதாய்
விளக்கேற்றி உணர்த்துகிறாய்....
இரண்டாம் முறையாய்
முதலில் இருந்து
காதலிக்கத் தோன்றுகிறதெனக்கு...!!!//

இதைப் படித்த ஒரு திருமணமான இளைஞன் தன மனைவிக்கு ஒரு முத்தமோ , சிறு பூவோ கொடுத்து விடுவான் .கொஞ்சம் வயதானவர்கள் அவள் கரத்தை பிடித்துக் கொள்ள கூடும் ...

// விளக்கேற்றி உணர்த்துகிறாய் // இந்த வரியில் கண்டு கொள்ளுங்கள் ..நம் கலாச்சார பதிவை ..இது கவிதை ..இது தமிழ் கவிதையின் முத்திரை கவிதைகளில் ஒன்று .

இதை வைத்துதான் சொல்கிறேன் ..கவிதை எழுதுபவர்கள் தங்கள் கற்பனை குதிரையை சர்க்கஸில் விட்டு விடுங்கள் .அது போக முரண்டு பிடித்தால் ஒரு துப்பாக்கி வாங்கி சுட்டுத் தள்ளுங்கள் .
ஆனால் நீங்கள் கவிதைகள் ஊடே நடந்து மட்டும் செல்லுங்கள் .. குதிரை வேண்டாம் .அதனினும் அந்த வெள்ளை குதிரை ..அது எம்ஜியாருக்கு மட்டுமே சொந்தமானது .
நீங்கள் மெல்ல நடந்து நிறுத்தி நிதானமாக .கவிதையின் எட்டுத் திசையும் பாருங்கள்; .அதன் பூமி , அதன் வானம் எல்லாவற்றையும் பாருங்கள் .நல்ல கவிதை வரும் .

அடுத்த கவிதை .
.**** கவிதை எண் 178436 .எழுத்து .காம் ' .சிவனுக்கு வந்த சிக்கல் " எழுதியவர் ஈஸ்வரன் ராஜாமணி .****

ஒரு இயற்கை அழிப்பின் கோரத்தை , மாசு ஏற்படுத்தலின் முடிவை கடவுளில் இருந்து தொடங்குகிறார் . அதுவே புதுமை .!

//கழுத்தை சுற்றிய பாம்பை
கழற்றி வைத்துவிட்டு -
சிவபெருமான்,
சிந்தித்து கொண்டிருந்தார்.

ஓசோன் உடைத்து
கைலாயம் புகுந்த,
கழிவுக் காற்று,
காசிநாதனின்
நாசியையும் விட்டுவைக்கவில்லை!!. //

எனத் தொடங்குகிறது .இதன் சொல்லாடல்களை கவனியுங்கள் .இவரும் இந்தக் கவிதையில் ஊடே நடந்துதான் போகிறார் .அந்தப் பொருத்தமான தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள் அதனால்தான் வருகிறது . இந்த இடத்தில் ஒன்றை சொல்ல ஆசை படுகிறேன் .புது கவிதைகளிலும் நல்ல சொற்களோடு கட்டுமானம் செய்யும் போது அது எளிதில் மனதில் நின்று விடும் .சொல்லாடல் என்பது வேறு ..சொற்கோர்வை என்பது வேறு .

நான் வியந்து போனது கீழ் காணும் வரிகளில்

// அதிவிரைவு ரயிலுக்காய் - தன்
அரசமரத்தை இழந்து,
அநாதையாகிவிட்டேனென்று
அலறுகிறான்,
ஆனைமுகன்!!.

கார்பைடு சுடாத
பழங்கேட்ட அவ்வைக்காய்,
காயாத கானகத்தே,
கால் கடுக்க தேடும் கந்தன்,
காலம் பலவாகியும் திரும்பவில்லை!!. //

நம் கலாச்சார / வரலாற்று பதிவோடு கவிதையின் பொருளை பதிவு செய்த லாவகம் ..அதுதான் நம் தேவை .அதுதான் நம்மை கவிதையோடு இணைக்கும் .அதைத்தான் நம் தலைமுறைகளுக்கு கடத்தும் படைப்பாகவும் நாம் செய்வோம் , நாம் விரும்புவோம் .

கடைசியில் எப்படி முடிகிறது ?

//இத்தனைக்கு பிறகும்,
“என்னை மட்டும் காப்பாற்று”
என்று வேண்டும் பக்தனிடம்,
“முதலில் என்னை நீ காப்பாற்றடா!!” வென்று -
சொல்லாமல் சிரிக்கிறான் சிவபெருமான்.

கழற்றி வைத்த பாம்பு - மீண்டும்
கழுத்தை சுற்ற ஆரம்பித்திருந்தது.//

இது ஓரளவு எதிர்பார்த்த முடிவு என்றாலும் அதை முடித்த பார்வை , அதன் பின் இருக்கும் நோக்கம் ,அதற்காக பயன் படுத்திய வார்த்தைகள் , களம் நம்மை இந்தக் கவிதையை தூக்கிக் கொண்டாட மட்டும் இல்லாமல் நம்மை குறித்து கவலை கொள்ளவும் செய்கிறது .

அப்புறம் இதில் சொன்ன தகவல்கள் கவிதையை அடுத்து அடுத்துப் படிக்க செய்கிறது . இது ஒரு நவீன கவிதையின் யுக்தி ..நவீன கவிதைகள் தகவல்களை வாரி இறைக்கின்றன .அதற்கு கவிஞர்கள் கொஞ்சம் மெனக்கெட வேண்டும் . ஆனால் அப்படி எழுதப்படும் கவிதைகள் ஆயிரம் வருடங்கள் கழித்து படிப்பினும் ஒரு சுவாரஸ்யத்தை உண்டு பண்ணும் .கவிதையின் தாக்கம் அதிகமாகும் ..

சமீபத்தில் விகடனில் படித்த ஒரு கவிதையை எந்த உரையும் இன்றி கீழே பதிக்கிறேன் ..படித்து நீங்களும் ஆடிப்போகவும் .நரன் எழுதியது .
--எவ்வளவு அழகாய் மொய்க்கின்றன எறும்புகள் ----

இன்னும் சில மாத்திரைகள் மீதமிருக்கின்றன.
நோய்முற்றி இறந்துவிட்டானவன்.
அவன் மனைவிக்கு அந்நோயில்லை.

அவள் இறந்தபோதும் அப்படித்தான்
மர அலமாரியில் கொஞ்சம் முகப்பூச்சு களிம்புகள் மீதமிருந்தன.

ரயிலில் தன்னைச் சிதையக் கொடுத்த
அவள் மகளிடம் முகமில்லை.
மகள் வாழ்நாள் முழுக்க மயிலை மிகவும் நேசித்தவள்.

இவளின் காதலன்தான் விஷம் அருந்தி நீலம் பாரித்தான்
பச்சையும் பாசியுமாய்க் கிடந்த ஏரியினருகே.

இவனின் அம்மாதான் சொல்வாள்.
பல நூறாய் உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்காதே... முகமுடையும்.
கடலிருக்கும் கிழக்கு நோக்கி உயிர் துறந்தாள்.
பின்னே என்னவாம்.
தன் வாழ்நாள் முழுக்க 17 மூட்டை உப்பைத் தின்றழித்தாள்.

கியூபாவின் மிகப் பெரிய கரும்புத் தோட்டத்தை உண்டழித்தவன்
இவளின் கணவன்.

கடந்த வாரம் தன் கால் கட்டை விரலை நீக்கிக்கொண்டானவன்
மருத்துவர் திரு.துரோணர் அக்கட்டை விரலை
ஓர் ஓலைக்கொட்டானில் பொதிந்து குப்பைக் கிடங்கில்...

எறும்புகள் அதை எவ்வளவு அழகாய் மொய்க்கின்றன பாருங்கள் ....
திரு.சக்கரை வியாதிஸ்தர்களே!...

---மீண்டும் பேசுவோம்
வரும் நாட்களில் இன்னும் கொஞ்சம் கவிதைகளோடு ....

எழுதியவர் : ராம் வசந்த் (17-May-15, 2:07 pm)
பார்வை : 267

மேலே