யுகங்கள் தாண்டும் சிறகுகள் 28 - கே-எஸ்-கலை

பிள்ளையார் வீட்டு
நெய்ப்பணியாரம்
-கேட்டான் மகன்

அய்யங்கார் வீட்டு அம்மாமியின்
பிளவுஸ் மாடல்
-மனைவியின் ஆசை

ஆபத்தில்லா உறவுக்கு
வெளிர்நிற ஆணுறை
-காசு இல்லை
கனவுகள் தொல்லை

இரத்தம் கொடுத்தால்
காசு கிடைக்குமாம்

சென்றேன்

"நர்ஸ் ,இவன் புது ஆள்
செக்கப் செய்திடு
நிமோனியா,டி.பி,எயிட்ஸ்
இருக்குதா என்று ,"
டாக்டர் சொன்னார்

உள்மனம் கூவிற்று
"ஏலே,வெளியே சொல்லாதலே
உன் கொடிய வியாதியை "
(தலைப்பு - வறுமை)
-------------------------------
யுகம் தாண்டும் சிறகுகள் கட்டுரைத் தொடரில் எழுத தொடங்கிய பலருக்கும் களைப்பெடுத்து விட்டதாய் உணர்கிறேன்....இனி வாசிப்போருக்கும் களைப்பெடுக்கலாம் போலும்...!

இருக்கட்டும் !

மாமேதை பாஷோ...மகாகவி தமிழன்பன்...யுகப்புருஷன் பொள்ளாச்சி அபி என்று என் எழுத்துகள் தவழத் தொடங்கி, ஒரு குழந்தையின் இயல்புகளோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன!

எழுத்து தளத்தில் சுமார் மூன்று வருடங்களாக என் முகப்பில் “இலக்கிய உலகில் தவழும் குழந்தை” என்று தான் என்னைப் பற்றி சொல்லி இருந்தேன்....இந்த கட்டுரைத் தொடரை எழுத தொடங்கியவுடன் “உள்ளெரியும் தீ” என்ற எனது கவிதையையும் அங்கே சேர்த்துக் கொண்டேன்! ஒரு கட்டாய காரணத்திற்காக !

அதுவும் இருக்கட்டும் !

தோழர் கவிதா சபாபதியின் இந்த கட்டுரைத் தொடரின் வெற்றி தோல்வி பற்றி அறிய இதுவரை நான் முனையவில்லை....வெற்றியளிக்க வேண்டும் என்பதே ஆசை ! பங்களிப்பாய் நானிருந்தால் பேரின்பமே !

யுகங்கள் தாண்டும் படைப்பாளிகள் வரிசையில் இந்த பாகத்தில் நான் எழுதப்போகும் தோழரைப் பற்றி இதற்கு முந்தய பாகங்களில் கட்டாயம் எழுதி இருப்பார்கள் என்றெண்ணுகிறேன்...ஏனெனில் அவரது சேவை வெகுதூர பாதயாத்திரை ஒன்றில், தனித்து நின்று நிழல் தரும் விருட்சம் போன்றது !

சம வயது தோழன் ஒருவருனுடன் என்னென்ன சேட்டைகள் செய்ய முடியுமோ அந்த சேட்டைகளை நான் செய்து விளையாடும் ஓர் அறுபது வயது குழந்தை அவர் ! அவர் தோழர் அகன் !

தளத்தில் நான் 2012 இல் கைவைத்த போது (கால் வைத்ததாய் சொல்லமுடியாதே?)அதே மாதத்தில் அகன் என்ற பெயரில் “வெண்கலக் கடையில் புகுந்த யானையென” வந்தவர்! அதற்கு முதல் “புதுவை காயத்ரி” என்ற பெயரில் தளத்தில் எவ்வளவு அட்டாகாசம் பண்ணியிருக்கிறார் என்பதை காலப்போக்கில் அறிந்துக் கொள்ளகிடைத்தது !

அகனைப் பற்றி பேசினால் 28ம் பாகம் எத்தனைப் பாகங்களைத் தாண்டுமென அறியேன் ! அவ்வளவு நெருங்கிய உறவினை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் ! அதனால் தான் அவரது ஒற்றைச் சொல்லுக்கு இலங்கையிலிருந்து புதுவை நோக்கி பறந்தேன் !

ஒரு படைப்பாளி சமூக சேவகனாக, பொதுநலன் விரும்பியாக எப்போதும் இருக்க மாட்டான் ! அவனது எழுத்துகளில் தான் இவை இரண்டையும் செய்வான் ! ஆனால் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் அகன் !

பொதுப் பணிகள் ஓய்ந்த நிலையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தான் அவரது ஆக்கங்கள் உயிர்க்கின்றன !

கவிதை, கட்டுரை, குறுநாவல்கள் என்று பல ஆக்கங்களைத் தளத்தில் இவர் பதிபித்திருகிறார் ! இருந்தாலும் அவற்றையெல்லாம் விட அவரது தன்னலம் கருதா பொதுப்பணியே, அவரின் முகவரியாக இங்கு பலருக்கும் தெரிந்திருக்கிறது !

வளரும் படைப்பாளிகள் பலரையும் ஒன்றிணைத்து தளத்தின் முதல் கவிதை தொகுப்பாக பன்னாட்டு கவிஞர்களின் தொகுப்பு என “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்” என்ற நூலை வெளியிட்டார். இந்த வெளியீடு என்னை மிகவும் ஊக்குவித்தது ! இரண்டு காரணங்கள்...

முதலாவது புதுவை பயணமும் ...தோழர்களின் சந்திப்பும்

இரண்டாவது - நூலின் தலைப்பு

ஏனெனில் “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்” என்பது என் மனைவி “ஹேயேந்தினி ப்ரியா” எழுதிய கவிதையின் தலைப்பு. அன்று அந்த நூலுக்கு இந்த தலைப்பை தெரிவு செய்த எவரும் அறிந்திருக்கவில்லை இது கலையின் மனைவியாக வரப் போகிறவளின் கவிதை என்பதை....கலை உட்பட !

(நெருக்கமானவர்களைப் பற்றி எழுத போனால் இப்படி சுயபுராணம் பாடுவதை தவிர்க்க முடியாது...பொறுத்தருள்க !)

அந்த நூல் மட்டுமல்ல... “ஆதலினால் காதலித்தேன்” “அலகுகளால் செதுக்கிய கூடு” போன்ற மிகச் சிறந்த தளத் தோழமைகளின் தொகுப்புகள், பெண் படைப்பாளிகளின் தொகுப்பு..என்று இன்னும் சில பதிப்புகளை தளத்தின் பெயர்க்கொண்டு செய்திருக்கிறார்.

என்னதான் இணையத்தில் எழுதினாலும் புத்தகமாக தனது ஆக்கங்களை பதிப்பித்துவிட வேண்டும் என்ற பேராவல் எல்லோருக்கும் பொதுவானதே ! ஆயினும் அதனை செயலாக்கிப் பார்க்க எத்தனைப் பேருக்கு பொருளாதாரம் கைக்கொடுக்கும் ?

யாருடைய முதல் உதவியையும் எதிர்ப்பாராது தனிச்சையாக முன்வந்து இப்படி பல புத்தகங்களை வெளியிட்டு இருப்பதோடு இன்னும் வெளியிடுவேன் என்ற முனைப்புடன் செயல்படும் அவரது எண்ணங்கள் அற்புதமானது !

இதே போல வருடம் தோறும் எழுத்து தளத்தில் உள்ள வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர் செய்யும் “விருது வழங்கும்” செயற்பாடும் போற்றுதற்குரியதே !

எனக்கு இந்த விருது வழங்கும் செயற்பாடு குறித்து மாற்றுக் கருத்துகள் இருப்பினும், எல்லோரையும் திருப்தி படுத்த விரும்புவதைத் தவிர்த்துக் கொண்டு தகுதிக்குரியவர்களுக்கு மாத்திரம் அங்கீகாரம் கொடுக்க முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதும் கருத்தாக இருக்கிறது !

அகன் ஒரு தொகுப்பாசிரியராக/ஊக்குவிப்பாளராக யுகம் தாண்டுவார் !
---
ஒரு படைப்பாளியாக அகன் எழுதிய கவிதைகளில் பல, சமூக சிந்தனைச் செறிவுள்ள படைப்பாக இருக்கின்றன. ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியுள்ள கவிதை வறுமை பற்றி மிக கோரமாக எடுத்தியம்புகிறது !

“தூக்குச்சட்டி” (78246) என்ற மற்றொரு படைப்பில் அடிமட்ட சுரண்டல்களை தோலுரித்துக் காட்டுகிறார் ! “கையளவு சாம்பல்” (70886) படைப்பின் மூலம் தத்துவம் பேசுகிறார்....மழை.....மழை... (89859) என்ற படைப்பில் எழுத்தால் நனைக்கிறார்.... கருத்தப்பாண்டி தொடர் மிரட்டுகிறது !

சமூகத்தை மேம்படுத்தும் கருத்துகளைப் பொடி வைத்துப் பேசாமல் நேரடியாகவே சாடும் இவரது எழுத்தாளுமை போற்றுதற்குரியது !

புதுக்கவிதை தந்திருக்கும் விசால வீதியில் ஒரு ஓரமாய் நடந்துக் கொண்டிருப்பது அவருக்கு சௌகரியமாக இருக்கிறது போலும்....எண்பதுகளின் தொண்ணூறுகளின் பாணியில் கவிதைகளைப் புனைவதில் இன்னும் ஈடுபாட்டோடு இயங்குகிறார்...

ஆனாலும் இந்த யுகத்தை வெல்வதற்கு ஏராளமான புதுமைகளையும் புரட்சிகளையும் செய்யவேண்டும் என்பதை அவர் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன் !

அகன் அவர்களிடம் நல்ல சிந்தனைகளும், வீரியமிகு எழுத்தாற்றலும், சிறந்த மேடைப் பேச்சு அனுபவமும் தேங்கிக் கிடக்கின்றது ! எல்லாவற்றையும் மிஞ்சிய தமிழ் பற்று நிரம்பி கிடக்கின்றது !

தளத்திற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் கருத்துப்போரில் நெஞ்சி நிமிர்த்தி நின்ற ஜாம்பவான்களில் அகன் பிரதானமானவர்.

விமர்சனம், திறனாய்வு போன்று தான் கருத்துப் பகிர்தல்களும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக கொண்டிருந்தவர்..தற்போது எல்லோரிடமும் பாசமழை பொழிய ஆரம்பித்துவிட்டார்..அதனால் அவரது கருத்துப்போர் (பலருக்கும் அக்கப்போர்) சற்றே ஓய்வெடுப்பதாக எண்ணிக் கொள்கிறேன்.

பொதுவாக அவரது சாடல்கள் அருவருக்கத்தக்க காம இலக்கியங்கள் குறித்தும்....அதைவிட மோசமான மாற்று மொழி மோகம் பற்றியதுமாக இருந்தன !

இப்போது பலரும் ஆங்கில வார்த்தைகளை மிகச் சரளமாக படைப்புகளில் கோர்த்துக் கொள்வதை காண முடிகிறது !

மீண்டும் அவரது நடுநிலையான கருத்துகள் ஆட்சிக்கு வரின் பல புரட்சிகள் நடக்கலாம்....காலத்தின் தேவையும் அதுவாகவே இருக்கிறது !

தன்னைவிட தன் சமகால படைப்பாளிகளை உந்தி ஊக்குவிக்கும் பரந்த மனம் கொண்ட அகன் அவர்களை ஒரு படைப்பாளியாகப் பார்த்து மகிழ்ந்ததை விட ஒரு படைப்பாக எண்ணி வியந்தது அதிகம் !

பல கோணங்களில் இலக்கியத்திற்கும் தமிழுக்கும் சேவை செய்துக்கொண்டிருக்கும் தோழர் அகன் போன்றவர்கள் நிச்சயம் தலைமுறைகள் கடந்தும் போற்றப்படுவார்கள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-May-15, 1:31 pm)
பார்வை : 466

மேலே