நடைபாதை இட்லிக்கடை
ஆயா
"நாலு இட்லி சாப்ட"
என்றேன்
"என்னையா சம்பளம் காலியா"
என்ற ஒரே வாக்கியத்தில்
என் பணக்கார சாயத்தினை
நிறமிழக்கச் செய்தாள்
ஒரு புன்முறுவலோடு.
"சாம்பார் தளும்ப ஊத்தி சாப்டு"
என்று கூறியபடியே
இட்லி முழுவதையும்
சாம்பாரால் நனைத்துவிட்டாள்.
உண்டு முடித்து
கைகழுவ நான் எத்தனித்த போது
என் தட்டினை பிடுங்கி
இன்னும் இரண்டு இட்லி போட்டாள்
"வயசு பிள்ள சாப்டுற சாப்பாடா இது"
என என்னை திட்டிக்கொண்டே.
அது தொழில் நோக்கோ என்னவோ
ஒருவேளை
எனக்கும் தாய் இருந்திருந்தால்
இப்படித்தான் பரிமாறியிருப்பாள்.
என் அடுத்த வாய்
இட்லியில்
உப்பை சற்றென்று கூட்டியது
என் கண்ணீர் துளிகள்...
வேகமாய் உண்டுவிட்டு
100 ரூபாயினை கொடுத்து
என் கண்ணீர் துளிகளையே
அதற்கு சில்லரையாக வாங்கிகொண்டு
நடந்தேன்....
என்னைப்போல்
இன்னும் எத்தனை பேரோ
கண்ணீரோடு கடையினைவிட்டு
கிளம்பியவர்கள்...