வெண்பாக்கள்

காண்கின்ற வெற்றிதோல்வி கண்டதுமே மாறிவிடும் .
மாண்பைத்தான் மானிடனே மண்ணுலகில் --- காண்பாய்நீ
தீங்கில்லை என்றுமினி தீதிலா வீரர்காள்
தூங்காத நம்பிக்கை தூண்டு.

போனவரை விட்டுவிடு போகட்டும் என்றுமிங்கு
ஆனவரைப் போற்றுவோம் ஆதரித்தே ---- ஊனமிலை
ஊரினிலே போராடு உய்த்துவிடும் வெற்றியுமே
பாரினிலே உண்டிங்கு பார் .

தீரமிகு ஞானத் திறவுகோல் நீதானே
நேரமிக ஓய்வின்றி நேயமுடன் ---சீரறிந்து
ஊக்கமுடன் யாப்பினையே ஊட்டும் முகம்காண
ஏக்கமுடன் காத்திருப்பேன் இங்கு.

பாவலரும் உன்புலமை பாட தமிழ்மொழியின்
காவலனாம் உன்னிடம் காமுறுவர் --- ஆவலுடன்
பற்றியுன்னைப் பாசத்தால் பற்றுகொள்ள வேண்டுவர்
கற்றவர்கள் யாவரும் காண்.

மன்னுபுகழ் வாழ்வதனை மண்ணுலகில் நீபெற்றாய்க்
கன்னலொத்தப் பேச்சால் கவருகின்றாய் ---- இன்னலெலாம்
நீங்கிடவே ஆறுதலும் நீதான் உரைப்பதனால்
தாங்கிவரும் கொம்பாகத் தான்.

நானுந்தான் தெய்வமாய் நாவால் புகழ்வதால்
தேனுண்ட வாய்போலத் தித்திப்பில் - வானுந்தான்
மேகத்தில் சூல்கொண்டு மெய்சிலிர்க்கும் மாரிபோல
தேகத்தில் இன்புறு தே.

சிறப்புடன் சொல்லெடுத்துச் சீர்த்தமிகு செய்யுள்
பிறந்திடும் சொற்கள் பிறழாத் ---- திறனுடன்
பாலகரும் ஏற்கின்ற பாக்கள் வனைகின்றீர்
வேலவனும் காத்திட வே.

கருவறையில் என்னைக் கவனமாய் அன்னை
அருமையுடன் தாங்கிய அந்தப் - பெருமையுடன்
கற்பிக்கும் உன்றன் கவலைகளை யானறிந்து
நிற்கின்றேன் என்றும் நினைத்து.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-May-15, 3:59 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 59

மேலே