அப்பாவின் கவிதை

என் சிறு பிராயத்தில்
விக்கல் வந்தது…
நினைக்கின்றான் என்னை என்றாய்..!
உன்மேல் சிறுநீர் கழித்தேன்…
பிரியம் மிக அதிகம் என்றாய்..!
காய்ச்சல் வந்தது…
பல் முளைக்கப் போகிறது என்றாய்..!
வயிற்றோட்டம் போனது…
நடக்கப் போகிறான் என்றாய்..!
தும்மல் வந்தது…
ஆயுள் நூறு என்றாய்..!
இப்படி என் கழிவுகளைக் கூட
களித்து ரசித்துப்
புதிய பொருள் சொன்னவன் நீ..!

நாட்காட்டியின் நாட்கள் கிழிந்து
நாட்காட்டிகள் பல மாறிய போது
உன் தந்தையின் வயோதிகம் உனக்கும்
உன் வாலிபம் எனக்கும் வந்திருந்தது.
நான் அலுவலக நாற்காலியில்
அமரும் வேளையில்
நீ சாய்வு நாற்காலிக்கு மாறியிருந்தாய்…!

காலம் உன் வாழ்க்கை அனுபவத்திற்குச் சான்றாய்
உன் சிகை பறித்து
முகத்தில் சுருக்கம் பதித்துச் சென்றிருந்தது.

என் மகனுக்குப் பல் முளைத்து
காய்ச்சல் வந்த போது
நீ பல் பிடிங்கி காய்ச்சல் கண்டிருந்தாய்…!

என் மகன் நடப்பதற்கு
வயிற்றோட்டம் போன போது
நீ வயிற்றோட்டம் போய்
நடை தளர்ந்திருந்தாய்….!

என் மகன் சிறுநீர் கழித்து…
நான் பாசம் என்று சொல்லும் வேளையில்
நீ படுக்கையில் சிறுநீர் கழித்து
பாசம் போய் விடுமோ ? எனப் பயந்திருந்தாய்…!
என் மகன் தும்மி
நான் ஆயுள் நூறு என்ற போது
நீ இருமலில் ஆயுள் தொலைத்திருந்தாய்…!

கால மாற்றத்தின்
மாற்றம் இதுதானா..?
இறைவனே உனக்கு நன்றி
எனக்கு இரு தோள்கள் படைத்ததற்கு
ஒரு தோளில் என் மகனையும்
மறு தோளில் உன்னையும்
தாங்குவேன் தந்தையே..!

ச.இளமாறன்

எழுதியவர் : ச.இளமாறன் (18-May-15, 8:17 pm)
Tanglish : appavin kavithai
பார்வை : 87

மேலே