இனி எழுதமாட்டேன் என்றவனின் சில எழுத்துக்கள்-1
பிடுங்கி எறியப்பட்ட
பசுமரத்தாணியிலிருந்து
அதன் நுனி தாங்கி நின்ற
சில வார்த்தைக்குவியல்கள்
உதிர்ந்த பின்னரும்
உவமைப் பூக்கள்
காய்ந்த பின்னரும்
கற்பனைக் கிடங்கில்
இன்னும் இருக்கிறது சில
இடதுகளுக்கு தெரியாத
வலதுகள்...
முதல் முறை
சில கிறுக்கல்களை
எழுதத்தூண்டிய
இரு விழிகளின்
இளமை மாறா
நிரந்தர பிரிவுக்குப்பின்..
தாடி தடவும்
ஒரு புகைப்படத்தோடு
என்ன எழுதுகிறார் இவர் என்ற
சில ஆட்டுக் கண்களின்
நுனிப்புல் மேய்ச்சலுக்கு பின்..
கிணறு தோண்டி
பூதம் பார்த்து
தாகம் தீர்த்தவர்களால்
கிடைத்த ஒரு
விருதுக்குப் பின்..
போதும்..
பல முறை
தோன்றியிருக்கிறது
இனி எழுதக் கூடாதென்ற
ஒரு எண்ணம்..
ஆனாலும்
அதன் பின்னும்
தடவிப்பார்த்த
சில அருவங்களும்
கடந்துப் பார்த்த
சில துருவங்களும்
மூச்சுத் திணறிய
சில புகைச்சல்களும்
மேலும் கொஞ்ச தூரம்..
ஒரு நாள் கனவில்
பேனா தவறி
முனை உடைந்து
வந்த விழிப்பால்
அந்த நாளிலிருந்து
எழுதுவதை நிறுத்தினேன்..
பல வருடங்களுக்கு பின்
இனி சாவின் எல்லை
தூரமில்லை என்றதும்
மீண்டும் ஒரு எண்ணம்
கடைசியாய் ஒரு
பத்துப் பாட்டோடு
முடித்துக்கொள்ளலாம்..
--கனா காண்பவன்