எதுவரை என் கணக்கு
வாசல்வரை நான்வந்து
வா என்று கேட்காத
கோபத்தில் சென்றுவிட்ட
குமரேசன் கணக்குவிட்டு
அழைத்ததெல்லாம் போக
அழையாரும் வந்திருக்க --
அமர்களமாய் இருந்தது வீடு
குழந்தைகளும் சுட்டிகளும்
குதூகலம் குறைவில்லை
செத்துப்போனாலும் மூஞ்சில்
முழிக்கமாட்டேன் என்று சொல்லி
சண்டையிட்டுப்போன சண்முகசுந்தரிதான்
இழுத்துப்போட்டுச் செய்கிறாளத்தனையும்
நாகலாபுரம் மாமா
நகைச்சுவைகள் அள்ளிவிட
நாலுதெரு கேட்க
நகைக்கிறார்கள் எம் பெண்டிர்
சூழலின் களம் மறந்து
நான்
கண்டபடி சிரித்துவைக்க
காட்சிகள் முரண்பட்ட
கவிதைஏன் செய்தாய் என
கருத்துப்பகுதியில் வந்து
கழுத்தை நெறித்திடுவீர்
அதனால்
வந்த சிரிப்பை
வயிற்றுக்குள் புதைத்துவைத்து
வாய்க்கட்டு போட்டிருந்தேன்
கண்டுபல நாளான
கனகராசு அண்ணனோடு
வாயாரப் பேசிக் கொஞ்சம்
காலார நடந்துவர
கால்கட்டும் போட்டது
பாவி இந்த கவிதைக்களம்
சரக்கடித்த போதைக்கூட்டம்
சலம்பிச்செய்த சில
சம்பவங்கள் நீங்களாக
சுமூகமாய் முடிந்தது
ஒரு சுபதினம்போல்
கொண்டாட்டம்
அவசர உலகம் பாவம்
ஆளுக்கொரு வேலை
இதுவரை சுமந்த உடல்
இட்டநொடி கலைந்து செல்ல
ஆட்டம் முடிந்து நீட்டிக்கிடக்குமென்னை
அடுத்து நிற்க யாருமில்லை
கொடுத்த காசுக்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கும்
காரியங்களத்தனையும் கருத்துடனே செய்துவைத்து
இறுதிவரை துணையிருந்து நான் எரியும்வரை உடனிருந்து
கடமையாய் பிடிசாம்பல் கலயத்தில் எடுத்துவைத்தான் ----
இடுகாடுகாக்கும் வெட்டியான் எனும் தோழன்