வசமாகும் வானம்

ஒற்றைக்கால் இல்லையென
****ஒருநாளும் சோர்ந்ததில்லை
அற்றைக்கிரை தேடுதற்கு
****அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !

பெற்றமகன் துணையிருக்க
****பெருமகிழ்வு கூடிடுதே
விற்றிடுவேன் பலூனூதி
****விரட்டிடுவேன் வறுமைதனை !

உற்றதுணை யாயெனக்கு
****உதவுமிரு ஊன்றுகோலே
பற்றற்ற வாழ்க்கையிதே
****பழக்கமாக ஆயிற்றே !

கற்காத காரணத்தால்
****கவலையென்னை வாட்டுவதால்
கற்பிப்பேன் பிள்ளைக்கு
****கடமையது எந்தனுக்கு !

குற்றுயிராய்க் கிடந்தாலும்
****குனிவுவர விடமாட்டேன்
நற்பேரும் நானெடுப்பேன்
****நன்மைகளும் செய்திடுவேன் !

சுற்றியுள்ள பசும்வயலும்
****சுவர்க்கம்தான் எங்களுக்கு
வற்றாத வரமாக
****வசமாகும் வானமுமே ….!!

(படம் - வல்லமை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-May-15, 10:39 pm)
பார்வை : 147

மேலே