முதுகெலும்பி 14

“இஞ்சாருடா ஒடுநண்டு...ஒம்பாட்ட அப்பறமா ஓட்டிக்க.. நடக்கப் போறது எங் கலியாணம்......”

அப்பறம் என்னங்க.. கல்யாண வேலை பாக்க ஒத்தாசையா நில்றான்னு இவனை கூட்டிக்கிட்டு வந்தா இவம் என்னடான்னா அந்த நீலாப் புள்ள பின்னாடியே தாவிக்கிட்டுத் திரியிறாம்....

அச்சொவ்வ்... அப்படி பாக்காதீய... நீ எங்கடா போனே இம்புட்டுநாளான்னு நீங்க கோவமா மொறைக்கிறது எனக்கு வெளங்குது..

தையில அறுப்பு அறுத்ததோட கட்டிப்புடணும்ன்னுதா நெனச்சது. அம்மா வழி ஒறவுல ஒரு ஆத்தா செத்துப்போக... அம்மாவுக்கு லேசா சங்கட்டம்... அதுதெங் கொஞ்சம் ஆறப்போட்டு பண்ணுனா நல்லா இருக்குமேன்னு ஒரு வாகா வைகாசில வச்சிப்புட்டோம்... அதுக்கு இன்னும் ரெண்டு நாளுதாங் கெடக்கு..நானும் நடுவால வெளஞ்ச வயக்காட்ட எதுக்கு சும்மா போடணும்ன்னு நாலு கடலய வெதச்சி கொடி ஆஞ்சிப் புட்டேம்.. சும்மா சொல்லக்கூடாது.. கொழலி காலடி வச்சா.... நல்ல வெளச்சலுங்க... கலியாணத்துக்கு கையில நாலு காசு பொழங்குது...

"பாலுபுடிச்ச பச்சப்பயிரா நீயுங்
பாதங் காட்டி நடந்துபோக....
பாசிபுடிச்ச மதகுத் தொறையா..
பரிதவிக்குது எம்மனசு...
ஒம் செவப்புக் கொசுவத்துக்கு
சிரிச்ச இடுப்புச்சத..... எங்
கண்ணுக்குக் காட்டிப் போகும்...
கட்டிலு முடிச்சு அவுக்குங் கத.... "

இப்படியா இந்தக் காலத்துல பாட்டெல்லாம் பாடி... அவ கடலைக்கி களகொத்த... நாங் கண்டமேனிக்கி அவளக் கொத்த.... காதலிச்சிக் கெடந்தோம்.....

நானா தேடித்தேடி நல்ல செமந்த ரோசாப்பூ நேரத்துல அவளுக்கு கூரப் பொடவ எடுத்திருக்கெம். அவா அப்பாரு நாலு வெரக்கட சரிக அளவுவச்ச பட்டுவேட்டி எடுத்துருக்காகளாம்.

எப்படி இருக்குந் தெரியுமா எங்க ஊரு கலியாணம்..? தாலிகட்டுக்கு அஞ்சி நா முன்னாடி மாப்ள பொண்ணு வீட்டுல மூர்த்த காலு (முகூர்த்தக் கால்) ஊனுவாக. ஒரு வாகான பூவரசங் கம்ப வெட்டி வெள்ளென அதக் கழுவிப் போட்டு மாவெல வேப்பல எல்லாங்கட்டி கலியாணம் ஆன ஊருசனம் மொத்தம் வந்து மஞ்சளு குங்குமம் பூசுவாக.. மாமம்மொற.. பங்காளி மொறைன்னு வரிசையாப் பூசணும். இல்லையின்னா அதுக்கு வேற பஞ்சாயத்து வைக்கணும்... அப்படியே பூசி பந்தலோட ஈசானி மூலைப்பக்கமா நட்டுவைப்பாக..

அப்பறம் வந்தவகளுக்கு பாலு.. பச்சரிசி எல்லாங் குடுப்பாக...
அன்னையிலேர்ந்து வீட்டுல கோலாகலந்தெம்.. பந்தப் போட... அரிசிமாவு இடிக்க.. சுண்ணாம்பு வெள்ளையடிக்க.... பாத்திரங் கழுவன்னு ஊருசனம் மொத்தம் கலியாண வூட்டுலதாங் கெடக்கும். இப்ப எங்க வூடு ஒங்க வூடுன்னுல்லாம் பிரிச்சிச் சொல்ல முடியாது.

இந்த அமளிக்கு நடுவாலதா இந்த ஓடுநண்டுப்பய நீலாவுக்குத் தூது விடுறாம்.அதெங் கொஞ்சம் லேசாத் தட்டிவிட்டெம்.
அப்பறம்...........”
கற்பூரங் கொண்டவனே
களமோட்டு முனியய்யா..
கருவேப்பலக் கொத்தா ரெண்டு....
கருவேலம்பூப் பதமா ரெண்டு...
ஒங் காவ எல்ல மண்ணுக்குள்ள
கட்டப் போகும் குருவி ரெண்டு...
காத்துநிக்க வேணுமையா..
கர தூக்கிச் சேக்க வேணுமையா....

களமோட்டு முனிக்கு பாட்டுப்பாடி படையப் போட்டு சாமி கும்பிடுவம்..மொத்தமா ஊருசனமா இருந்தாலும் இந்த மாதிரி கலியாணங் காச்சி வாறப்போ... அவுகவுக ஒறமொறவச்சி மாமம் மச்சான்னு பிரிஞ்சிக்கிருவாய்ங்க..கிண்டலு கேலி பேச்சில வேலைக் களப்பு தெரியாது...
மாறி சித்தப்புதா எல்லாரையுங் வெளுப்பாரு... அவரு கிண்டலு பேச ஆரம்பிச்சா பொம்பள ஆளுக எல்லாம் காதப் பொத்திக்கிருவாக.. அவுக காதப் பொத்திக்கிறதப் பாத்தா இவரு வாயப் பொத்திக்கிருவாரு.. அம்புட்டு நயந் தெரிஞ்ச மனுசன்.

இந்த மயிலம் பயலையும் விட்டுவைக்கல மாமம் மச்சா மொற... வூட்டுக்கு வாடான்னா.... “ நீ எந்தங்கச்சியக் கட்டப் போற... என்னதாங் கூடித் திரிஞ்சாலும் எனக்கு நீ மச்சினம் மொற... இப்ப ஒம்வீட்டுல கைநனைக்கிறது ஆகாது.. பொண்ணு அழச்சிவுட்டுட்டு அப்பறமா வாறம்”ன்னுட்டாம்...
இந்தால இங்கிட்டு பலகாரக் கொடத்துக்கு மாவு இடிக்க ஆரம்பிச்சிருவாக...

“சந்தையில சலவக் கல்லு.... சைங்...குங்கும் ஒரு அக்கா...
ஆமா... சமஞ்சிவந்த சீமக்கல்லு... சைங்...குங்கும் இன்னொரு அக்கா....

ரெண்டுபேரும் மாத்து ஒலைக்க போடுவாக.... அரிசி இடிஞ்சி பூ மாதிரி குதிக்கும் ஒரலுக்குள்ள.... நம்ம மனசு மாதிரியே....

இனி கலியாண வேல அம்புட்டு கெடக்கு..... நாம் மித்த கதை எல்லாம் சொல்லிருக்கேம்.. இனி மாப்புள வேசங் கட்டி மணமேடையில உக்காரணும்..... கலியாணம் எப்படி நடக்குதுன்னு இந்தக்கதை நாஞ் சொல்லக் கேட்டவுக சொல்லுவாக....

நாந் தாலியக் கட்டிப்புட்டு பொறவு வந்து பேசுறம்....

எழுதியவர் : நல்லை.சரவணா (19-May-15, 7:41 pm)
பார்வை : 153

மேலே