யாதுமாகி நின்றான்
அவன் அவனாகவே இருக்கிறான்
காதலின் உரசல்களில்
அதிக அதிர்வெண்களை
அவன் எப்போதும் பதிந்ததில்லை
காதலின் சிக்கலான விதிமுறைகள்
அவனுக்குப் புரிந்ததே இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
அவன் உடல்மிகும் வெப்பம் என்னை
அணுப்பொழுதும் சூழ்ந்தே இருந்தாலும்
காதலிக்கிறானா தெரியவில்லை
காதல் மொழிகள் சொன்னதும் இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
என் முத்தங்களில் எப்போதும்
கண்மூடிக் கிறங்கியதில்லை
மற்றுமொரு முத்தம்
பதிலாக கிடைத்ததும் இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
திரை அரங்குகளின்
இருட்டு மூலைகளில்
என்னைத் தழுவிச்சுகம் கண்டதில்லை
என் சரிந்த முந்தானைகளில்
எப்பொழுதும்
சமநிலை தவறியதில்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
தவறிச் சரிந்த வேளை என்னை
இடுப்பணைத்து நிமிர்த்ததில்லை
சிறு சோகத்தில் அழுதவேளை
கன்னம் தொட்டு துடைத்ததில்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
அன்றொருநாள்
வீடு சேரும் வழி இருளில்
வீதி நாய்கள் பல குதறி
கற்பைத் தொலைத்து வெறும்
குப்பையாய் நிற்கின்றேன்
கூடவரும் தகுதியில்லை
கும்பிட்டுப் பிரிகின்றேன்
என
துடித்துதழுது துவண்டவளை
தோள்புதைத்து உச்சிமோந்து
கட்டியணத்து கண்ணீரால் புனிதமாக்கி
இறுதிவரை நம் உறவு
இப்படியே தொடருமென்றான்
இமயம் உருகி என்
கால் கழுவிச்சென்ற வேளை
பஞ்ச பூதங்களாய்
நாற்பெத்தெட்டாயிரம் ரிஷிகளாய்
முப்பத்து முக்கோடி தேவர்களாய்
நான் வணங்கும் தெய்வங்களாய்
யாவுமாகி நின்றபோது
அவன் அவனாக இல்லை