மணற் பூக்கள்

பாலையின்
மணல் முழுவதிலும்
பதியம் போட்டிருந்த
வெயிலின் கொடிகள்
வேர்விட்டு
சூரியப் பூக்களை
மொட்டுவிட்டிருந்த
முன்வெயிலில்-
பயணியர் விடுதிகளேதுமற்று
காய்ச்சிப்பழுத்த
சுடுமணல் மேடுகளில்
நிழல்களின் நெகிழ்வுகளையும்
வெயிலின் காயங்களையும்
அசைபோடும் ஒட்டகத்தின்
அடிவயிற்று நிழலில்
ஆசுவாசப் படுத்திக்கொண்ட
உனக்கானயெனது
கவிதையின் வரிகளில்
ஒளித் துளியாய்
முளை விட்டிருக்கும்
வியர்வைத் துளிகளைக்
கேட்டுப்பார் !

மணல் மழை சொரியும்
கொடும்பெரும்
சூறைக் காற்றிலும்
ஈச்சமர ஊசியிலையடுக்குகளில்
கன்றிச் சிவந்திருக்கும்
பொன்சிவப்புப்
பேரீச்சம் பூக்களைப்
போல் -
உயிர் வாதையிலும்
சேதாரமின்றி
தக்கவைத்திருக்குமெனது
வெளியறியா
இதயக் கொப்பளங்களில்
காற்று ஓயப்போவதையும்
ஒரு ராட்சச பாலைவனப்
பருந்தின் அலகிலிருந்து
உயிரோடு சூரியன்
கொழுந்து விட்டு எரிவதைப்
போல் குமிழியிடும்
காதலை
என் செய்வதாய் உத்தேசம் ?

எழுதியவர் : பாலா (25-May-15, 7:47 pm)
பார்வை : 153

மேலே