“சிலிர்ப்புக்கள்”

“சிலிர்ப்புக்கள்”
இரவு ஏழு மணிக்கு மேல் இருக்கும். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்து ஆழியாறு அணையை தாண்டி மலை அடிவாரத்தை நோக்கி செல்ல தொடங்கிய போதே இவளுக்குள் ஏற்பட்ட பரபரப்பு, அவளை இருக்கையில் உட்கார விடாமல் செய்தது.
இதோ இன்னும் சற்று நேரத்தில் பேருந்து மலை மேல் ஏறப்போகிறது, அதன் ஏற்றம் இவளுக்குள் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணபோகிறது என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது. அதற்கு தகுந்தாற்போல் வானம் திடீரென சாரலை அனுப்பி பேருந்தின் மேல் தட் தட்..என்னும் ஒலியுடன் வேகமாக மோத ஆரம்பித்தது.
எங்கிருந்துதான் அந்த குளுமை வருமோ தெரியவில்லை, மேற்கு தொடர்ச்சி மலை தொடர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இது. சட்டென்று வந்து சூழ்ந்த குளுமை பேருந்தில் இருப்பவர்களை “சில்லிட” வைத்தது. பேருந்தின் ஓரமாய் உட்கார்ந்திருவர்கள் ஒவொருவராய் சன்னலில் மாட்டப்பட்டிருந்த “சட்டரை” இறக்கி விட இவளுக்குள் தோன்றிய ஏமாற்ற உணர்வு.
பேருந்து மலை மீது ஏற ஏற சிலிர்த்திடும் காற்று வந்து முகத்தில் மோதும் சுகமும், மலை காட்டின் வாசமும், சன்னலை மூடியதால் கிடைக்காமல் போனதில் இவளுக்கு சொல்லொண்ணா வருத்தம். எல்லா சன்னல்களும் இறுக மூடியிருக்க மனித கூட்டத்தின் வெப்பமும் கசகசப்பும் சற்று முன் கிடைத்த குளுமையை காணாமல் ஆக்கியிருந்தது.
ஒரே ஆறுதலாய் மழையின் வேகம் கூடியிருக்க, பேருந்தின் வேகம் குறைந்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தது. ஒரு சிலருக்கு எரிச்சலை கொடுத்திருக்கலாம் என்பது ஆங்காங்கே உட்கார்ந்திருந்தவர்களின் “ச்” ச்” வார்த்தை ஒலிப்பிலிருந்து தெரிந்தது. அவர்களின் சலிப்பின் காரணத்தையும் இவள் அறிவாள், இந்த பேருந்தில் பயணிப்பவர்களின் முக்கால்வாசி பேர் அடுத்து அவரவர்களின் எஸ்டேட்டுக்கு செல்ல வேண்டும். போகும் நேரம் தாமதமானால் எஸ்டேட் செல்லும் பேருந்துகள் சென்று விடும். கடைசி பேருந்தும் போய் விட்டால் வால்பாறையில் தங்க வேண்டியிருக்கும். இந்த பனியிலும் மழையிலும் விடிய விடிய எப்படி பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருக்க முடியும்?
இவளுக்கும் அந்த அனுபவம் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் கிடைத்திருக்கிறது. அம்மாவுடன் வால்பாறை பேருந்து நிலையத்தில் கடுமையான மழையில் உட்கார்ந்திருந்ததும், கையில் ஒரு பைசா இல்லாமல் காலையில் யாரோ உறவுக்காரர்கள் பணம் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்னும் நம்பிக்கையில் பசி வயிற்றை சுருட்டி பிடிக்க அமர்ந்திருந்ததை இன்று நினைத்தாலும் கண்ணீர் வந்து விடும்.
“அம்மா” நினைக்கும்போதே அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு. எஸ்டேட் வீட்டில் காலை விடிந்து விடியாத நேரத்தில் காலில் அவசர அவசரமாய் புகையிலையை தேய்த்து தலையில் சாக்கு ஒன்றை போட்டு “கங்காணி” திட்டுவார் என்று வேக வேகமாக ஓடுவாள். இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்க அம்மாவை போல பெண்கள் அதை பற்றி சட்டை கூட செய்யாமல் தேயிலை பறிப்பதில் முழு கவனமாய் இருப்பார்கள். ஒரு நாளைக்கு ‘இத்தனை கிலோ’ இலை பறிக்க வேண்டும் என்னும் இலக்கும், அதையும் மீறி எடுக்கும் அளவுக்கு ஒரு தொகை கிடைக்கும் அன்றைய நாள் பொழுது செலவுக்கு சரிகட்டும் என்னும் ஆசையும் அவர்களை முடுக்கி விட்டபடியே இருக்கும்.
இவள் அம்மாவின் அவசரத்தையும் வேகத்தையும் பார்த்தபடியே இருப்பாள், அப்பொழுது அவளுக்குள் முட்டி கொண்டு வரும் இயற்கை உபாதையை இறக்கி வைக்க அம்மாவிடம் சொல்லி கூப்பிட முடியாமல் இருக்கும்.
அம்மா கிளம்பி சென்று அதன் பின் எழுந்து வரும் அக்காதான் இவளின் உதவிக்கு வருவாள்.
தான் இதுவரை அம்மாவுக்கு உதவியிருக்கிறோமா? எண்ணிப்பார்த்தாள், இல்லை பத்து வயது வரை அம்மாவுடன் இருந்திருக்கிறோம், நம்மால் அவளுக்கு கஷ்டங்களைத்தான் கொடுக்க முடிந்திருக்கிறது, திடீரென்று அவள் மனதில் ஒரு மின்னலாய் ஒரு காட்சி வந்தது. அம்மா அவளை கட்டிப்பிடித்து “என் ராசாத்தீ” தலை மீது முத்தமிட்டது. அது எதற்காக? அன்று அக்காவை பார்க்க அக்காமலை எஸ்டேட்டிலிருந்து மாப்பிள்ளை வருவதாக இருந்தது. அம்மா அவள் முன்னால் எடுத்து போட்ட வெங்காயங்களை உரித்து இவளுக்கு தெரிந்த வகையில் நறுக்கி கொடுத்தது, அதனால் அம்மாவுக்கு இவள் மீது ஏற்பட்ட மகிழ்ச்சி.
ஆனால்..அதன் பின் தான் இவளை பற்றிய சிந்தனை அம்மாவுக்கு வந்திருக்க வேண்டும். அன்று இரவு இவளை அணைத்து பிடித்து அழுது கொண்டிருந்தது, அதன் பின் காலையில் இதே போல் அம்மா வேக வேகமாக கிளம்பும் போது அக்காவிடம் ஏதோ சொல்ல அவள் அம்மாவை சமாதானப் படுத்தியதும் ஞாபகம் வந்தது.
அக்காவின் கல்யாணம் நடக்க இன்னும் பதினைந்து நாட்கள் தான் இருக்கிறது, அக்காவுக்கு முகம் எல்லாம் ஒரே சந்தோசம், என்றாலும் இவளை பார்க்கும்போது மட்டும் கவலையால் முகம் சுருங்கி கொண்டதும் ஞாபகம் வந்தது.
அம்மா கல்யாண வேலைகளோடு இவள் விசயமாக “கங்காணியிடம்” விடுமுறை கேட்டு அவரின் ஏச்சுக்களை கேட்டபடி விடுமுறையும் வாங்கி விட்டு விடியற்காலை பேருந்தை பிடித்து வால்பாறை டவுனுக்கு வருவாள். அங்கு தெரிந்தவர்கள் பலரிடம் இவள் விசயமாய் மன்றாடி மன்றாடி இறுதியாக கோயமுத்தூரில் இருந்த விசேச பள்ளியில் சேர்க்க சிபாரிசு கடிதம் வாங்கினாள்.
அக்காவின் கல்யாணத்தை இவளால் பார்க்க முடியாமலேயே போய் விட்டது. அக்கா கூட என்னம்மா அவசரம்? கேட்டவளிடம் உனக்கென்ன? நீ போயிடுவே, நான் இப்படி வேலையுன்னு பறந்திடுவேன், அப்புறம் அவளை தனியா விட்டுட்டு..? உங்கப்பன் உயிரோட இருந்திருந்தா…! சொல்லும்போதே குரல் கட்டிக்கொள்ளும்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் இவளை பாதித்ததாக தெரியவில்லை, அவள் பாட்டுக்கு வெளியில் அமர வைத்து விட்டால் வீட்டை சுற்றி இருக்கும் தேயிலை செடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு, அப்பொழுது பெய்யும் மழை சாரல்லில் நனைந்து கொண்டு.. சந்தோசமாகத்தான் இருந்தாள். அம்மா அவளை அன்று இரவு வால்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து காலையில் வேறொருவரிடம் ஒப்படைப்பது வரை.
“அண்ணே” உங்களை நம்பித்தான் சொல்லி கொண்டிருக்கும் போதே அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோட அவர் பதறிபோய் அம்மா கவலை படாதே “கர்த்தரின் கருணையால் எல்லாம் நல்லபடியாய் நடக்கும்” நீ நிம்மதியாய் வீடு போய் சேர்ந்து உன் பெரிய பொண்ணு கல்யாணத்தை கவனி.
திடீரென்று ஏற்பட்ட சத்தம் இவளை சுய நினைவுக்கு கொண்டு வர யாரோ “அட்டகட்டி” அட்டகட்டி என்று சப்தமிடுவது கேட்டது. அதற்குள் இத்தனை தூரம் வந்து விட்டதா? மழை இன்னும் வலுத்திருந்ததை அதன் இரைச்சலை வைத்து உணர்ந்து கொண்டாள்.
இனி சிந்தனை எல்லாம் இல்லாமல் இந்த பயணத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும் முடிவு செய்து கொண்டவள் சன்னல் ஓரமாய் இருந்த பெரியவரிடம் “கொஞ்சம் சன்னலை திறக்க முடியுமா? என்று கேட்டாள்.
அவளை ஆச்சர்யமாய் பார்த்தவர் தாயி மழை சாஸ்தியாயிருக்கும் திறந்தா பின்னாடி உக்காந்திருக்கறவங்க சத்தம் போடுவாங்க என்றார். “அஞ்சு நிமிசம்”
அவளின் கெஞ்சலுக்கு செவி சாய்த்தவர் சன்னலை அடைத்திருந்த சட்டரை மெல்ல தூக்கி விட்டார்.
அதற்குள் பின்னால் உட்கார்ந்திருந்தவர்களிடமிருந்து முணுமுணுப்பு “சன்னலை சாத்துப்பா” மழை அடிக்கறது தெரியலையா? அவர் சட்டென்று தெரியுதப்பா வாந்தி வர்றமாதிரி இருக்கு, அதான் திறந்திருக்கேன், அடைச்சிடறேன், சத்தமாய் பின்புறம் திரும்பி சொன்னார்.
இவள் நன்றியுடன் அவரை பார்த்தாள். நீ வேணா இங்கன ஓரமா உக்காந்திக்கறயா தாயி? அவள் சரியென்று தலையாட்ட அவள் தன் இடுப்பை மட்டும் நகர்த்தி ஓரமாய் உட்கார்ந்தாள்.பெரியவர் அவளை பரிவாய் பார்த்தபடி அவள் கொடுத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
மழை கொஞ்சம் கொஞ்சமாக தன் வேகத்தை குறைத்து கொள்ள சில்லென்ற காற்று மட்டும் அவள் முகத்தில் வந்து மோதியபடியே இருந்தது. அவளுள் ஒரு “சிலிர்ப்பு” என்னை விட்டு இத்தனை வருடங்கள் எங்கு சென்றாய் பெண்ணே? கேட்டபடியே அவள் முகத்தை வருடுவது போல் தோன்ற இவள் மனதுக்குள் இந்த மலை அரசனின் மேல் வெட்கம் வந்தது.
வால்பாறையை வந்து அடைந்த போது முழுவதுமாய் மழை நின்று போயிருந்தது. காற்று மட்டும் சிலு சிலுவென அடித்தபடி இருந்தது. எல்லோரும் இறங்கிய பின்பு இறங்குவதற்காக காத்திருந்தாள்.
பெரியவர் இறங்குவதற்காக எழுந்தவர் அவள் இன்னும் எழாமல் இருப்பதை பார்த்து “இறங்கலாமா?” கேட்டார்.
மேல இருக்கற என்னோட கட்டைய எடுக்கணும், இந்த பைய கீழே வரைக்கும் கொண்டு வந்து தரமுடியுமா?
அவர் சீட்டுக்கு மேலிருந்த பை வைக்கும் இடத்திலிருந்து கட்டையை எடுத்து கொடுத்தார். அவள் மெல்ல உட்கார்ந்திருந்த இருக்கையின் இடப்பக்க கடைசிக்கு வந்து தன் “இடது கையின் அக்குளில்” கட்டையை வைத்து இடுப்பை துக்கி நின்றவள் அந்த கட்டையை மெல்ல மெல்ல வைத்து படிக்கட்டருகில் வந்தாள்.
பின்னால், இவளின் கைப்பையை கையில் வைத்தபடியே தயங்கி தயங்கி வந்த பெரியவர் ‘இரு தாயி’ நான் முதல்ல இறங்கிக்கறேன் சொல்லும்போது இவள் புன்னகையுடன் எனக்கு இது பழக்கம்தான் இறங்கிக்குவேன். இலாவகமாய் கட்டையை ஒரு மூலையில் அழுத்தி பிடித்து சுலபமாய் கீழே இறங்கினாள்.
“வசந்தி” அம்மாவின் குரல் அவளை அப்படியே “சிலிர்க்க” வைத்தது. ஏத்தனை வருடத்திற்கு முன்னால் கேட்ட குரல், திரும்பினாள், அம்மா வயதாகியிருந்ததை தோற்றம் சொல்லியது. கூட அது யார் அக்கா? ஆம் அக்காதான் அருகில் சிறிது வயதானவர் போல், அடுத்து இளைஞன் ஒருவனும், சிறு பெண்ணும்.
அம்மா அவளை தடவி தடவி பார்த்தாள். “என் மகள்” என் மகள் ஒவ்வொரு தடவலிலும் அவளின் பரிதவிப்பும் பாசமும் புரிந்தது. எழுந்து நடமாட முடியாமல் ஒரு கால் சூம்பிய நிலையில் இருந்த பெண் இன்று கட்டையை வைத்து நடமாடியபடி இவள் முன்னாள் நிற்கிறாள்.
இவளிடம் அதுவரை திடமாய் இருந்த மனம் கரைந்து எங்கே அழுகை வந்து விடுமோ.. ! என்னும் பயத்தில் முகத்தை கவிழ்த்து கொண்டாள்.
சட்டென தன்னை திடப்படுத்தியபடி அருகில் இருந்த, பின்னால் நின்றிருந்த பெரியவரை ஐயாதான் எனக்கு உதவியா இருந்தாரு என்றாள், அம்மா அவரிடம் கை கூப்பி நன்றிங்க ஐயா என்றாள். “அய்யோ அம்மா இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி, நான் இங்க நடுமலை எஸ்டேட்டுக்கு போகணும், வரட்டுமா? வணங்கி விட்டு கிளம்பினார்.
“அக்கா மாமாவை ஒரு காரை ஏற்பாடு பண்ண சொல்லு, எல்லாம் எஸ்டேட் வீட்டுக்கு போயிட்டு பேசிக்கலாம். நாளைக் காலையில நான் கிளம்பணும், மள மளவென அவளின் பேச்சு அவர்களை ஒரு நிமிடம் பிரமிப்புக்கு கொண்டு சென்றாலும், உடனே சுதாரித்து ஏங்க போயி ஒரு காரை கூட்டியாங்க, அக்கா மாமாவை விரட்டினாள்..
அவர்கள் எஸ்டேட் போய் சேர்ந்த போது, அந்த இரவு நேரத்திலும் வீட்டு முன்னால் ஏகப்பட்ட கூட்டம் “வசந்தி” வந்துருக்கா, இங்க “கை கால் விளங்காம படுத்து கிடந்தவ” இப்ப கட்டையோட நடக்கறா”
மறு நாள் அனைவரிடமும் விடைபெறும்போது நான் இன்னும் ஒரு வாரத்துல டெல்லி போயிடுவேன், அதுக்குள்ள உங்களை எல்லாம் பாக்கணும்னு தோணுச்சு, அதுமட்டுமில்லாம நம்மோட பூமிய பார்த்து அனுபவிக்கணும்னே பஸ் ஏறி வந்தேன், அவள் கண்களில் தெரிந்த அந்த “ஒளி” தன் பூமியை தரிசித்து விட்ட மகிழ்ச்சி.
அவள் கட்டையை ஊன்றி வீட்டு முன்னால் இறங்கி சென்ற மலை சரிவு பாதையில் லாவகமாய் நடப்பதை அங்கிருந்த அத்தனை பேரும் வியப்பாய் பார்த்து கொண்டிருக்க, அம்மா மட்டும் மீண்டும் அவளை எப்பொழுது பார்க்க போகிறோம் என்னும் ஏக்கத்தில் கண்களில் அழுகையுடன் நின்றிருந்தாள்.
அங்கு மலை சரிவில் நின்று கொண்டிருந்த அரசாங்க ஜீப்பில் அவள் வருவதை பார்த்து இறங்கி நின்று சல்யூட் வைத்த ஓட்டுனர் அவளிடம் ஏதோ மரியாதையாக பேசியபடி அவள் முன்புறமாய் ஜீப்பில் ஏறுவதை பார்த்தபடி நின்றிருந்தனர். .
“கால் விளங்காம” நம்ம எஸ்டேட் குடிக்குள்ள இருந்த மாரியம்மா பொண்ணூ, இப்ப அவளை கவர்ன்மெண்டு ஆபிசராக்கிட்டா.சுற்றி நின்று பார்த்து கொண்டிருந்தவர்களின் பேச்சில் தெரிந்த பெருமை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Aug-25, 2:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 18

மேலே