அகதியான நிலவு

வான் குளத்தில்
வறட்சி
வானம் தாண்டி
மண் குளத்தில்
குதித்தது நிலவு

குதித்த நிலவு
குடித்தது
குளித்தது
குளத்துக்குள் குடியேறியது

கொஞ்சத்தில்
சட்டென கொட்டியது
வான் கொட்டாரம் இருக்கும்
வட்டாரத்திலிருந்து
வாராது போல் வந்த
மா மழை

குள குடிசைக்குள்
நீட்டிப் படுத்த நிலவுக்கு
காட்சி அதிர்ச்சி

தண்ணீர் வறண்ட
வானில்
மழை திரண்டது எப்படி
மூண்டது சந்தேகம்

சந்தேகத்தின் பந்தியில்
ஆரவாரத்துடன்
ஓர் அறிவிப்பு

எல்லை தாண்டியவர்கள்
எல்லை திரும்பலாம்
இனி
இல்லை எனும்
நிலை இல்லை
எல்லாம் மீட்டுத் தரப்படும்
என
மீட்க முடியாத பேச்சை
காட்டியது
கொள்ளைகார அரசியல்
மன்னிக்கவும்
உயிர் மெய் பிழை
கொள்கைகார அரசியல்

தூவானத்தையுமா
தூக்கி மறைத்து அரசியல்
என தூக்க கலக்கத்தில்
துக்கமாய் நிலவு

பக்கத்தில்
பழகியது போல்
ஓர் குரல்

இங்கே
குளத்தையே
குடித்து முடித்து
நடக்குது அரசியல்
என்றது
போன நூற்றாண்டில்
குதித்து குடியேறிய நிலவொன்று ...!

எழுதியவர் : Raymond (28-May-15, 4:05 pm)
பார்வை : 155

மேலே