அழகி

நாங்கள் அப்போதுதான் மேலூருக்கு மாற்றலாகி வந்திருந்தோம். மருத்துவ மனைக்கு அருகிலேயே அம்மாவிற்கு வீடு பார்த்திருந்தார்கள். அருகிலேயே என் பள்ளிக் கூடமும் இருந்தது. நாங்கள் இருந்தது லைன் வீடுதான். ஒரு விசாலமான ஹாலை மரத்தடுப் பலகைகளால் தடுத்து ஒரு சிறிய அறை. அதற்கடுத்து சமையல் அறை. அங்கு நின்றபடி சமைக்க மட்டும்தான் முடியும். மற்றபடி நாங்கள் சாப்பிடுவது தூங்குவதெல்லாம் ஹாலில்தான். வீட்டின் பின் புறம் ஆறுவீட்டிற்கும் பொதுவான நீளவாக்கில் ஒரு முற்றம்.
தெருவைப் பார்த்தபடி இருக்கும் ஜன்னலிற்கு அருகில்தான் என் வாசிப்பு மேஜை இருந்தது. அங்கிருந்து பார்த்தால், அக்கிரஹாரத்தின் பின்புறம் பசியடங்கிய மலைப் பாம்பு போல ஒரு குறுகலான நீண்ட நாற்ற சந்து. அனைத்து வீடுகளின் கழிப்பறையும் அந்தச் சந்தில்தான் முடிவடைகிறது. கழிப்பறைகளின் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் துருவேறிய துத்தநாகத் தகடு ஜதி பிசகாமல் காற்றின் விசைக்கேற்ப “கிரீச்” ஒலியை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும்.
அம்மாதான் அவளின் நீண்ட பெயரை சுறுக்கி ‘அழகி’ என்று முதலில் அழைக்க ஆரம்பித்தாள். அழகிக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடித்திருக்க வேண்டும். அம்மாவைப் பார்க்க எப்போது வந்தாலும் “அழகி வந்திருக்கேம்மா” என்றுதான் குரல் கொடுப்பாள். மீறியபடிக்கு இல்லாமல் ஒரு சுற்று குறைவான பருமனான உடல் வாகு. மிகவும் நேர்த்தியான புடவைக் கட்டு. நெற்றியில் இரண்டு ரூபாய் அளவிற்கு பெரிதான அடர் சிகப்பு குங்குமப் பொட்டு. நிரந்தரமாக முகத்தில் தேங்கியிருக்கும் புன்னகை. உண்மையான வயதிலிருந்து தாராளமாக ஐந்து வயது குறைவாகவே அவளை மதிப்பிடலாம். இவள்தான் எங்கள் அழகி.
முந்தானையை இழுத்து இடுப்பில் சொறுகிக்கொண்டு ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து பரிச்சயமான புன்னகையுடன் “அம்மா வேலைக்கு போயிட்டாங்களா ராசா?” என்று என் பதிலுக்குத் துளியும் காத்திராமல் குறுகலான சந்தில் இருக்கும் கழிப்பறைகளை சுத்தம் செய்யக் கிளம்பி விடுவாள். துளியும் முகத்தில் அருவருப்பை காட்டிக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருக்கும் துத்தநாகத் தகட்டைத் திறந்து, முதலில் தாராளமாக சாம்பலைத் தூவி ஒரு சிறிய தகரத்தால் மனிதக் கழிவுகளை வழித்தெடுத்து அருகில் இருக்கும் துறுப்பிடித்த வாளியில் சரித்திடுவாள். பத்து நிமிஷத்திற்கு ஒரு முறை தெரு முனைக்கு வந்து நெற்றியில் படர்ந்த முடியை புறங்கைகளால் சரிப்படுத்தி, நழுவிய ஆடைகளை சீர்படுத்தி யாருக்காகவோ காத்திருப்பதான பாவனையில் சிறிது நேரம் நின்று மீண்டும் பணியினை மீண்டும் தொடருவாள். எட்டு மணிவாக்கில் அழகியைக் காண அந்த ஆள் வந்துவிடுவான். ஒரு கையில் அலுமினியத் தூக்கில் சால்னாவையும், மற்றோரு கையில் பேப்பரில் சுற்றி நான்கு புரோட்டாக்களையும் எடுத்து வருவான். அவனைக் கண்டதும் தன் கையில் இருக்கும் தகரத்தை வாளியின் ஓரமாக வைத்துவிட்டு தெருமுனைக் குழாயில் யாரும் காணாதவாறு வேகமாகக் கைகளையும் முகத்தையும் கழுவித் தயாராகி விடுவாள். சுவரில் சாய்ந்து கொண்டே அவனிடமிருந்து புரோட்டாவை வாங்கி குவளையில் இருக்கும் சால்னாவில் தோய்த்து அவனிடம் பேசியபடியே சாப்பிட்டுவிட்டு, தன் இடுப்பில் சொறுகி வைத்திருக்கும் வெற்றிலைக் கட்டில் பாதியை எடுத்து மிகவும் அக்கரையுடன் சுண்ணாம்பு தடவிக்கொண்டே அவன் கைகளின் உரிமையுடன் திணித்திடுவாள். இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அழகியின் முகபாவங்கள் நொடிக்கொறு தடவை மாறுவதை கண்கொட்டாமல் அவன் பார்த்து வியந்தபடி இருப்பான். அவன் அவளது கைகளை தன் இரு கைகளால் பற்றி அவன் பக்கம் ரகசியமாக இழுக்கும் போது, தன் கைகளை விடுவிக்கும் முயற்சியில் போலியாகத் தோற்றுப் போனது போல அபினயிப்பாள் அழகி. அவளுக்கும் அது மிகவும் பிடித்திருக்க வேண்டும். அவனும் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருப்பான்.
ஒரு நாள் அம்மாதான் அழகியிடம் அவனைப் பற்றி விசாரித்தாள். “என்னம்மா கிண்டல் பன்றீங்க! டைவரும்மா, அவரைத்தான் கலியாணம் செய்துக்கப் போறேன்” என்று அளவிற்கு அதிகமாக வெட்கப்பட்டுச் சிணுங்கினாள்.
ஒரு வாரத்திற்கு மேல் அழகியைக் காணவில்லை. துப்புறவுப் பணிக்கு வேறோரு பெண்ணை அனுப்பியிருந்தார்கள். புதிதாக வந்த பெண்ணிற்கு அழகியைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. நாட்கள் ,வாரங்கள், மாதங்கள் என கடந்து போனது.
ஒரு நாள் இரவு மணி இரண்டிருக்கும். மருத்துவ மனையில் இருந்து அம்மாவிற்கு அவசர அழைப்பு வந்திருந்தது. பாதித் தூக்கத்தில் இருந்த என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு விரைந்தாள். உள்ளே நுழைந்ததும் வரவேற்புப் பகுதியில் இருக்கும் விசாலமான பெஞ்சில் இரண்டு பேரை ரத்தக் கரையுடன் கிடத்தி இருந்தார்கள்.
“ஒரு மாசத்துக்கு முன்னேதான் கலியாணம் ஆச்சு. இப்படி பண்ணிட்டாங்களே பாவிங்க!”
“பாவிச் சிறுக்கி, ஆசைப்படரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?”
“அவனுக்கு எங்கே போச்சு புத்தி, ஜாதி ஜனம் சும்மா இருக்குமா?”

இப்படியான மக்களின் குரல்களைக் கடந்து பெஞ்சில் கிடந்தவர்களைப் பார்த்தவுடன் அம்மா திடுக்கிட்டுப் போனாள். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருக்கும் முறுக்குக் குறையாத மஞ்சள் கயிறு ரத்தத்தில் தோய்ந்திருந்தது. அவசரச்சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் பம்பரமாகச் சுழன்று இருவரையும் காப்பாற்ற இரவு முழுவதும் போராடினார்கள். எவ்வளவு முயன்றும் அழகியின் கணவரை காப்பாற்ற முடியவில்லை. காலை ஐந்து மணி வாக்கில் அழகியை அறுவைச் சிகிச்சை அறையிலிருந்து தள்ளு வண்டியில் வார்டுக்கு கொண்டு போனார்கள். அழகியின் கண்கள் மட்டும் வெளியே தெரிய முகம் முழுவதும் கட்டு.
அந்த நிலையிலும் அழகியைக் காண யாருமே மருத்துவமனைக்கு வரவேயில்லை. அம்மாதான் அவளைக் கவனிக்க தனி ஆயாவை நியமித்திருந்தாள். அழகியின் முகம் பார்க்கவே மிகவும் அச்சமாக இருந்தது. முகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நெருக்கமான தையல் வடுக்கள். இரண்டு மூன்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் அவர்களால் அழகியின் பழைய முகத்தை மீட்டுக் கொண்டு வர முடியவே இல்லை.
மூன்று மாதங்கள் கழித்து மறுபடியும் வேலைக்கு வந்தாள் அழகி. “என்ன அழகி, உன்னை எப்போ திரும்ப இப்படி பாப்பேன்னு ஆயிடுச்சு” என்று அம்மா அவளைப் பார்த்துக் கூற, முகத்தில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் வடுக்களைக் காண்பித்து “நானாம்மா அழகி?” என்று கண்களில் தேங்கிய நீருடன் கேட்டாள் அழகி. “நீ வெறும் அழகியில்லை... நீதான் எங்களின் உலக அழகி” என்று அம்மா அழுத்தமாகக் கூற, முதன் முறையாக வாய்விட்டுச் சிரித்தாள் அழகி. எப்படியும் இந்த அழகிக்கு மீண்டுமோர் அழகன் நிச்சயம் வருவான் என்று அனைத்து கடவுள்களையும் மனமார வேண்டிக்கொண்ட அம்மாவால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை, எல்லாவற்றையும் மீறியபடிக்கு அழகியின் முகத்தில் தெரிந்த கருவுற்ற தாயின் முக மினுமினுப்பை.
அடுத்த மாதமே நாங்கள் மதுரைக்கு மாற்றல் ஆகி வந்து விட்டோம். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அழகியை சித்திரைத் திருவிழா பொருட்காட்சியில் பார்த்தோம். கணவருடன் வந்திருந்தாள். எங்களைக் கண்டவுடன் “”அம்மாவுக்கு வணக்கம் சொல்லு” என்று அவனிடம் கூற, குழந்தையை இறுக அணைத்திருந்த வலது கையை விடுவிக்காமல் தடுமாறியபடி அவன் வணக்கம் சொன்னான். அம்மா குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டு” குழந்தை பேரு என்ன?” எனறு கேட்க ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு “அழகி” என்றான்.

எழுதியவர் : பிரேம பிரபா (30-May-15, 7:57 pm)
Tanglish : azhagi
பார்வை : 507

மேலே