கனவு மெய்ப்படும்

இருவது வருஷங்களாக நான் வேலை பார்த்துவரும் வங்கியை கொள்ளையடிப்பதற்கு நானே உதவி செய்யப்போகிறேன் என்று நீங்கள் இன்று காலையில் சொல்லியிருந்தால் கூட நான் பெரிதாகச் சிரித்திருப்பேன்.

என் பெயர் ஆதிமூலம் என்று கேட்டதும் மெலிதாக மனதுக்குள் சிரிக்கும் நீங்கள் நான் MBA(Finance) என்று தெரிந்தால் புருவத்தை உயர்த்துவது நிச்சயம். இதனால் எல்லாம் நான் பெரிதாகச் சாதித்துவிட்டதாக எனக்கொன்றும் கர்வம் இல்லை. ஒரு மீடியம் சைஸ் வங்கியின் ஒரு மீடியம் சைஸ் கிளையின் சீனியர் மேனஜராக இருப்பவனுக்கு கர்வம் என்ன கெத்து என்ன?

சத்தியமாகச் சொல்றேன் சார், ரொம்ப சாதரணமான ஆசைகள் தான் எனக்கு. பல் தேய்க்கும் பிரஷ்ல பேஸ்ட் சரியான அளவு வந்தாலே ராஜேந்திர சோழன் போல பீல் பண்ணும் சாதாரணன். தேடாமலே கிடைக்கும் சாக்ஸ், ட்ராபிக் சிக்னலில் மாட்டாமல் பேங்க் போய்ச் சேருவது, சாயந்திரம் வீட்டுக்காரிக்குத் தெரியாமல் போடும் தம், அன்னிக்குப் பார்த்த பெண்களிலேயே அழகானவளுடன் ராத்திரி கனவில் காஷ்மீர் போய் வருவது.. இதெல்லாம் என் அன்றாட சராசரி நாளின் சின்னச் சின்ன வெற்றிகள். மொத்தத்தில் “பார்க்கு மண்ட மெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே” என்று தாயுமானவர் பாடிய அண்ட சராசரத்தில் ஒரு non-descript புள்ளி நான்.

இப்படிப்பட்ட என் வாழ்வில் ஒரு பூகம்பம் வெடித்தது. அன்று மாலை. சிவசுப்ரமணிய சந்திரசேகரனின் (எதுக்கு இவ்வளவு பெரிய பெயர்?) வடிவத்தில்.
“சார், உங்களப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்” என்று அறிவித்த ப்யூன் முனுசாமியைத் தள்ளிக்கொண்டு என் கேபினில் நுழைந்த டபுள் எஸ் (இனிமேல் இப்படித் தான் கூப்பிடப்போகிறேன். கதை முழுக்க வரப்போகிறார் சார்! முழுப்பேர எழுதினா கை வலிக்கும்) நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தார். அதற்கே சற்று அதிகமான நரை. பெரும்பாடியான தேகம். மீசையை மழித்து, வாய் நிறைய வெற்றிலையுடன் “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி...” என்று பாடியபடியே (வாய் நிறைய வெற்றிலையுடன் எப்படித்தான் பாட முடிகிறதோ?) வந்து என் எதிரில் இருந்த விசிட்டர் சேரில் சரிந்தார். பாடி முடித்து ‘திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“பிஸினஸ் அவர்ஸ்’ முடிஞ்சு போச்சே சார்..” என்று இழுத்தேன்.

“அதனாலென்ன? என் பிஸினஸ் உங்களோடதானே!”

“சொல்லுங்க”

“நாங்க ஒரு நாலு பேர் உங்க பேங்கக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருக்கோம். நீங்கதான் உதவி செய்யணும்” என்று ரெண்டு மசால் தோசை ஆர்டர் பண்ணுவது போல ரொம்ப நார்மலாகச் சொன்னார்.

மதியம் வீட்டுக்காரி செஞ்சு குடுத்த சிக்கன் குழம்பு ஒரு கை கூடுதலாக சாப்பிட்ட மயக்கத்தில் இருந்த எனக்கு முதலில் புரியவில்லை. பின்னர் புரிந்தவுடன் ஜிவ்வென்று அசிடிட்டி ஏறியது.

“யாருய்யா நீ? கலாட்டா பண்ணறியா? போலீசக் கூப்டுவேன்” என்று கத்தினேன்.

“ஆதிமூலம்! ரொம்ப கத்தினா மூலம் தள்ளிக்கும்” என்று ஏதோ பெரிய ஹாஸ்யம் சொன்னது போல சிரித்த டபுள் எஸ், “Look here, don’t under estimate us. We are a determined gang and we will achieve what we want. As we don’t want any bloodshed, we are requesting you. Don’t stretch your luck too far” என்று சொல்லிவிட்டு, “நல்ல யோசனை பண்ணி வைங்க! நாளைக்கு வாரேன்” என்றபடி வெளியே சென்றார்.

என் உலகம் இருண்டது. யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று மனது துடித்தது. சாயந்திர தம் கூட போட மனதில்லாமல் வீடு போய் சேர்ந்தேன். தங்கமணியிடம் (மனைவி) சொல்லலாம் என்று பார்த்தால், ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முழுகியிருந்த அவளுக்குப் புரியும் என்று தோன்றவில்லை. மனப் போராட்டத்துடன் தூங்கிப் போனேன்.

மறு நாள் வங்கிக்குச் சென்றதும் முனுசாமியைக் கூப்பிட்டு “நேத்து வந்தவர் வந்தாருன்னா உள்ள விடாதே” என்று எச்சரித்தேன். அப்புறம் வேலையில் பிசியான எனக்கு திரும்பவும் சாயந்திரம் நாலு மணிக்கு “சார்! இன்னா சொன்னாலும் கேக்க மாட்டேன்றார் சார்” என்று புலம்பிக் கொண்டே வந்த முனுசாமியைத் தள்ளியபடி உள்ளே வந்த டபுள் எஸ்ஸைப் பார்த்ததும் தான் எல்லாம் நினைவுக்கு வந்தது.

இனிமேலும் பொறுத்தால் தப்பு என்று போலீசுக்குப் போன் போட நான் முயன்ற போது “ இந்த ஹீரோ வேலையெல்லாம் வேணாம் ஆதி! அம்பது வயசாவப் போவுது உனக்கு. நல்ல புள்ளையா நா சொல்றதக் கேளு. இந்தா அதுக்குமின்ன இந்தப் போட்டோ பாரு” என்று தன் மொபைல் போனில் இருந்த ஒரு போட்டோவைக் காட்டினான் டபுள் எஸ்.

என் பெண் மாலதி. என் ஒரே பெண் மாலதி. ஒரு குண்டன் பிடியில் சிக்கி அன்றை ஹிந்து பேப்பரைப் பிடித்தபடி. “ஐயோ” என்று அலறினேன்.
“இதுக்குத் தான் சொன்னேன். கம்முனு சாவிய எடுத்துக்கிட்டு வா”

சரியாக இவனிடம் சிக்கிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. மூளை வேலை செய்ய மறுத்தது. சரி ஆனது ஆகட்டும், என்று சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தேன். டேபுளுக்குக் கீழே வைத்திருந்த என் brief caseஐக் கவனிக்காது செல்லும் போது கால் தடுக்கி விழுந்தேன். திடீரென்று ராத்திரி ஆனாற்போல இருட்டு சூழ்ந்தது.

கண் விழித்துப் பார்த்தால் என் வங்கி ஸ்டாப் என்னை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். டபுள் எஸ் இல்லை.

“என்ன சார்! ராத்திரி தூக்கம் சரியில்லையா? இல்ல ஒடம்பு சரியில்லையா? தூங்கிட்டீங்க போல. தூக்கத்துல எழுந்து நடக்கையிலே கீழ விழுந்துட்டீங்க. நல்ல வேளை. அடி பலமா படல. நீங்க வீட்டுக்குக் கெளம்புங்க சார்! கேஷ் கூட வச்சாச்சு. க்ரில் சாவி என்கிட்டே இருக்கு.” என்று சப் மேனேஜர் குருராஜ் சொன்னான்.

கனவா? ஈஸ்வரா! இவ்வளவு விவரமா கனவு வருமா? சரி தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விட்டேன்.
மனைவியடம் எல்லாம் சொன்னேன். பெரிசாகச் சிரித்தாள். ஒரு அவமான உணர்வுடன் தூங்கிப் போனேன்.

மறுநாள் வங்கியில் என்னை எல்லாரும் பரிதாபமாக பார்த்தார்கள். ஒன்றிரண்டு கஸ்டமர்கள் கூட வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். பொழுது மெதுவாக நகர்ந்தது. மாலை நாலு மணி.

“சார், உங்களப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்” என்று அறிவித்த ப்யூன் முனுசாமியைத் தள்ளிக்கொண்டு என் கேபினில் நுழைந்தார் டபுள் எஸ்!

“என்ன ஆதி! சௌக்கியமா? அடி ஒண்ணும் பலமா படலியே? சரி, சாவிய எடுத்துக்கிட்டு வாங்க. எனக்கு நேரமாச்சு” என்றான்.

நான் உடனே மொபைல் எடுத்து மனைவிக்குப் போன் செய்தேன். மறுமுனையில் “ என்னங்க! நீங்க நேத்து கெனாக் கண்ட மாரியே யாரோ ஒருத்தன் நம்ம மாலதியக் கடத்திக்கிட்டுப் போய்ட்டாங்க! ஸ்கூல்ல கூப்பிட்டுச் சொன்னாங்க. நீங்க ஒடனே கெளம்பி வாங்க” என்று அழுதாள் தங்கமணி.

அந்த சூழ்நிலையின் அழுத்தம் தாங்காமல் நான் நார்மலான குரலில் “ கேஷ் எடுக்க ரெண்டு சாவி வேணுமே” என்றேன்.

“உங்க கிட்ட பேசி நான் புரிய வச்ச மாதிரி, எங்காளு உங்க ஆபீசர் கிட்ட பேசி புரிய வச்சுட்டாரு. தோ, வெளில பாருங்க! அவரும் சாவிய எடுத்துக்கிட்டு வந்து நிக்கிறத” என்று சிரித்தான் டபுள் எஸ்.

கேபினுக்கு வெளியே மருண்ட முகத்துடன் கையில் சாவியுடன் குருராஜ். அவன் அருகில் வாயில் வெற்றிலை குதப்பியபடி ஒருவன்.

நான் மெளனமாக ஸ்ட்ராங் ரூம் நோக்கி நடந்தேன்.

எழுதியவர் : வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் (30-May-15, 6:18 pm)
Tanglish : kanavu meippadum
பார்வை : 300

மேலே