ஒரு நிரபராதி அபராதி ஆவது பற்றிய குறிப்பு

நான் பேசாமலிருக்க
நீங்கள் விடுவதில்லை.
கூப்பிடு தூரத்தில் நிகழ்த்தப்படும்
குரூருரங்கள்
ஒவ்வொரு கணத்திலும்
என் தவத்தை கலைத்து விடுகின்றன..

நேற்றைக்கு முந்திய நிகழ்வுகூட
இதையத்தை உரசி
இடித்து,உடைத்து நொறுக்கிற்று

சவால்கள் அடர்ந்த
சன நெரிசல்களில் சகவாசம் ஆனதால்
புத்துயிர் பெறவேண்டிய புத்த பூமி
சத்தியம் மரித்த சந்தடியாய்

நேர்மையை நிர்வாணப்படுத்தி
சந்தி சிரிக்கவைக்கும்
அநியாயங்கள் அரங்கேற
சட்டம்பித்தனம் காட்டும்
சந்தர்ப்பவாதிகள் மலிந்த மண்ணில்
வேர்தரித்து நிற்பது
வேதனைக்குரியதுதான்
யாரிடத்தில்முறையிட?

பூ விற்பவ”னா”(ளா)ய் இருக்கும்
நாருக்கே நாதியற்ற நான்
வாளேந்தி எவருடன் போர் தொடுக்க?

பின்புலம் அற்றவருக்கான நீதி
வாதிக்கப் படாத வழக்காக்கின்ற
மனிதர்களுடன் எப்படி
மல்லுக்கு நிற்பது?

வதைகளாலும்,வஞ்சித்தல்களாலும்
வலிதரும் வரமான காலத்தில்
வசிக்க பணித்திருக்கிறது
ஆயுள் என்னும் அவகாசம்

வாழ்க்கை இங்கு வரமா சாபமா-என்ற
கேள்வி எழுந்து தினம் கேலியாகின்றன

வல்லூறுகளின் வழித்தோன்றல்கள்
நாகரீகம் அற்ற நரகா சூரர்களாய்
வாழ்வை கனவு கண்ட பூக்கள் மேல்
வல்லுறுவுகள் செய்ய
நல்லுறவுகள் தேடி நான் எங்கு போவேன்?

பாசு படிந்த வழுக்குத்தரை வக்கிரங்கள்
பூமிப் பந்தில் புரையோடிப் போயிற்று
சாதி சாட்டைகளை கையில் எடுத்தபடி
கட்சிக் கொடியுடனும்,கதர் வேட்டியோடும்
நீதிக்கு புறம்பான நிர்வாகங்கள்

குதிரையோட்டிகளாயும், கொம்பு தீட்டிகளாயும்
மைதானம் நிரம்ப மனித முகங்களுடன்
கைதாக வேண்டிய கழிசடைகளாய்
நிலத்தின் பாதையெங்கும் சூழ
கொடும் விஷ கொடுக்கான்கள் (தேள்கள்)
அவர்தம் மண்ணென்று
அக்கிரமங்களை அவிழ்த்து விடுகின்றன.

இதன் அடுத்த கட்டமாய்
எங்கிருந்தாவது கொடுங் கரங்கள் நீண்டு
என் குரலை இறுக நெரிக்கலாம்
என்னிடம் கற்பிருந்தால் துளையிட்டு
உறுஞ்சி குடிக்கலாம்
என் மூச்சை இழுத்து வெளியே நிறுத்தலாம்
அப்போது நீங்கள் உணர்வீர்கள்
ஒரு நிரபராதி “அபராதி”யாவது எப்படியென்று.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : (31-May-15, 7:40 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 96

மேலே