இமை மூடிய நேரம்
அன்புத்தாயே!
என்னை உன் மடியிலிட்டு
நான் உறங்கியபோது
நீ விழித்திருந்தவள்
மீளாத்துயிலில் உற்ங்கத்
தவிக்கும் உன்னை என்
மடியிலிட்டு உறங்காமல்
உன்னையே பார்த்திருந்தேன்
நீ எனக்குச் சொல்லிய
தாலாட்டு என்
நினைவிற்கு வந்தது
மரணத்தின் பிடியிலிருக்கும்
உனக்கு நான்
என்ன சொல்லி தாலாட்ட
நீ என் கண்களைப் பொத்தி
விளையாடியதைப் போல்
நான் உன் கண்களை மூடவா
வேண்டாம்! வேண்டாம்!
தாயே நீ விழித்திரு!
உன் உயிர் உறங்கும் வரை
என்னையே நீ பார்த்திரு!
உன் உதிரத்தைப் பாலாக்கித்
தந்தவள் நீ - இன்று உனக்கு
ஒரு மிடறு பால் தருகின்றேன்
அதுவும் வெளிவந்துவிட்டது
குழந்தைப் பருவத்தில்
நான் செய்ததையே
நீயும் செய்தாய்!
ஆதர்சனமாய் உன் தலை தடவி
கன்னம் வருடி
கேசம் கோதினேன் -நீயோ
ஏக்கப் பெருமூச்சுடன்
என்னையே பார்த்திருந்தாய்
உன் கரங்களைப் பிடித்து நான்
ஆதரவாய் இருப்பதாய் என்
கண்களால் உணர்த்தினேன்
நீயோ என்னை நிராதரவாய்
விட்டுச் செல்வதாய் நினைத்துக்
கண் கலங்கினாய்
என்னைப் பார்த்திருந்த உன்
பார்வைகள் மெல்ல மெல்ல
நிலைகுத்தி நின்றன
உன் கண்களை மூட
எனக்கு மனமில்லை
நான் என் கண்களை
மூடிக்கொண்டேன்
உயிர் மரத்தனின்று பூ ஒன்று
ஓசையின்றி விழுந்தது
மரம் விழுந்ததைப்போல்
மனம் அதிர்ந்தது
உன்னைத் தாங்கிய எனக்கு
உன் உயிரைத் தாஙக
முடியவில்லையே !
தாயே உன் பாசமும் பரிவும்
இனி எங்கு நான் காண்பேன்!
ஜெ.பி

