ஆசையில் தேம்புமென் நெஞ்சு - கைந்நிலை 3

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

பாசிப் பசுஞ்சுனைப் பாங்க ரழிமுதுநீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட் டோடும் படுகன் மலைநாடற்(கு)
ஆசையில் தேம்புமென் நெஞ்சு. 3

பொருளுரை:

பாசம் படர்ந்த பசுமையான நீர்ச் சுனையை அடுத்து வழியும் பழமையான நீரில் வருங் கனிகளை மிகுந்த சினமுடைய மந்திகள் பழகி தொடர்ந்து எடுத்துத் தின்று சுவைத்திருக்கும் இயல்புடைய பாசமுண்டாகும் அளவு நீரோடுகின்ற உயர்ந்த கற்களையுடைய மலைநாட்டுத் தலைவனை எண்ணி என் நெஞ்சமானது காதலால் வருந்துகின்றது என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

விளக்கம்:

சுனை என்பது மலையருவி வந்து பெருகி நிற்கும் நீர் நிலை. அந்நீர்நிலை பாசம் படர்ந்திருப்பதும் நீரில் முளைக்கும் ஆம்பல் முதலிய கொடியிலைகள் படர்ந்து பசுமையாகத் தோன்றுவதும் இயற்கை. ஆதலால் ‘’பாசிப் பசுஞ்சுனை’’ என்றார்.

புது நீர் வந்து பாய்ந்தவுடன் அச்சுனையிலுள்ள முது நீர் புது நீருடன் கலந்து வெளிவரும் என்பது குறித்து ‘’அழி முது நீர்’’ என்றார். அழி என்பது சுனையின் மேல் பொங்கி வழிகின்ற எனப் பொருள் தரும்.

மந்திகள் காரணமின்றி ஒன்றோடொன்று சினந்து போரிடும் இயற்கையுடையன என்பது குறித்து, ‘’காய்சின மந்தி’’ என்றார்.

நீர் இடையறாது ஓடுவதால் கற்கள் பாசமுண்டாக்கி வழுக்கும் இயல்புடையன என்பதால் ’பாசம் பட்டு ஓடும்’ என்றார். பட்டு என்பதை பட எனத் திரித்துப் பொருள் கொள்ளவேண்டும். மலைநாடன் களவொழுக்கம் மலைநாட்டின் இயல்பு போல இருக்கின்றது எனக் குறிப்பாலுணர்த்தியது.

பாசிப் பசுஞ் சுனையைக் குறவர் குடியாகவும், அதன் பாங்கர் அழிமுது நீரை தலைவி பிறந்த மனையாகவும், அம்முது நீரில் வந்த கனி தலைவியாகவும், அக்கனியை மந்தி சுவைப்பது தலைவியைத் தலைவன் கூடி யின்புறுவதாகவும், பாசம் பட்டு ஓடும் படுகல் என்றது களவொழுக்கமாகவும் உள்ளுறை உவமை சொல்லப்படுகிறது.

கல் + மலை = கன்மலை, ஆசையில் தேம்பும் எனக் கூட்ட வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-15, 11:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே