அவரது சொந்தங்கள் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
"சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம்.., “இதோ அழுதுவிடுவேன்..” என்பதைப்போல,வானம் தன் முகம் கறுத்து நின்றிருந்தது. அதனை உறுதிப் படுத்துவது போல,மேற்குத்திசையிலிருந்து ஈரத்தை சுமந்து வந்துகொண்டிருந்தது காற்று..........,பல வண்ணங்களில் பூத்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள்,இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன."மேற்படி கதையின் தொடக்க வருடல்கள் அஸ்தமனத்தின் உதயத்தோடும் வண்ண மலர்களின் உதிர்வோடும் கருவில் பிறந்த மனிதர்களெல்லாம் மரணத்தை ஒரு நாள் சந்தித்தே தீரவேண்டும் என்ற இறைநியதியை மதியில் புகுத்த இயற்கையை ஒப்பிடு செய்த விதம் கலை ரசனைக்குரிய அம்சமாகும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தோடு போராடுகின்ற ஞானபாரதியின் உடல்நிலையை மிக வருத்தத்துடன் கதையில் நேரும் காட்சிகள் படம்பிடிக்கின்றது என்பதன் மூலம் நோய்களோடு போராடும் மனிதர்களின் இயலாமையின் போதுதான் தம்முடன் உறவாடும் சொந்தங்கள் மற்றும் பகையான பந்தங்கள் சேர்ந்து கொள்கின்றனர் என்பதை கதாசிரியர் அபி அவர்கள் சொல்லாமல் மதியில் உணர்த்துகின்றார்.
ஞானபாரதியின் உடல் படும் வருத்தத்தால் அவரையே அறியாமல் இதழ்கள் முனகுதல் அதற்கேற்றால் போல் மாரியப்பன் பாசத்தோடு பணிவிடை செய்தல்,அவரின் கடந்து சென்ற நினைவுகளை எண்ணி அழுதல் ,தாய்,தோழன் மற்றும் சமையல்காரனாக பணி புரிந்தாலும் இருவருக்கிடையிலான பந்தம் சிநேகிதம் என்பதன் மூலம் நல்ல உள்ளங்களில் ஒரு போதும் பொறமை,இன,மத,குல வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதை உரைக்கின்றார்.
மஞ்சுளாவின் கண்களில் வழிந்தோடும் விழிநீரின் பாரத்தை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றமை போற்றத்தக்கதாகும்.ஞானபாரதிக்கு முதுமை அண்டக்கூடாதென்று ஆசை,தினமும் முகத்தை மழித்தல்,இளைஞர்கள் போல் உடை அணிதல்,நடைபயிற்சி,உடற்பயிற்சி என்பவற்றை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ நினைத்தாலும் எம்மை கருவில் உதிரக்கட்டி வடிவில் வைத்து படைத்த இறைவன் எமக்கு வழங்கிய காலம் முடிந்தால் எம் வாழ்க்கை மண்ணறையில் தான் என்ற இறைநியதியை கதையை படிக்கும் பொது உணர்ந்து கொண்டேன்.
ஞானபாரதி ஒரு சிறுகதையாசிரியர் அவரின் வாழ்க்கையில் புகழ்,பணம்,மரணம் எல்லாமே அவசரவசரமாக நடந்தேறியது என்பதன் மூலம் ஒரு கலைஞனின் வாழ்க்கையை மெய்யாய் படம்பிடிக்கின்றார்.குறிப்பாக இருபத்தைந்து வயதில் முதல் சிறுகதை இதழில் வெளிவருதல்,அதன் மூலம் பரவலான அறிமுகம் சமுதாயத்தில் கிடைத்தல்,தொடர்ந்து இதழ்களில் எழுதுதல்,படைப்பிலக்கியங்களை பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குதல்,இருமுறை சாகித்திய அகடமி விருது கிடைத்ததன் மூலம் பிரபல எழுத்தாளர் வரிசையில் வலம் வருதல் என்று கதையில் சொல்லப்படுவதன் மூலம் ஒரு படைப்பாளனின் வாழ்க்கை எப்படி தொடங்குகிறது,எப்படி வளர்கிறது,அது எப்படி முடிகிறது என்பதை கதாசிரியர் நிதர்சனமாக படைப்பிலக்கியத்தில் வரையறுத்துள்ளார்.
ஞானபாரதி அவர்கள் ஒரு கலைஞர் என்பதால் கலைப்பூக்களான காதல் அவரது வாழ்வில் வாசம் வீசினாலும் காலத்தால் வீசிய புயலில் தன மனைவி முதல் பிரசவத்தில் சேய்யோடு இறந்து விடுதல் மூலம் சதிகார எழுத்தாளனான கடவுளின் திருவிளையாடல் காட்டப்படுகின்றது.'பாத்திரங்களை பிறப்பித்து மக்களிடையில் வாழவைத்தவர் தன் மனைவியையும் குழந்தையையும் நிலைக்க வைக்க முடியவில்லை'என்ற வினா பதில் இல்லாமல் தொடர்ந்து கொண்டிப்பதன் மூலம் அபி அவர்களின் கலை ரசனை சிகரத்தில் நட்டப்பட்ட வெற்றிக் கொடியாய் காட்சியளிக்கிறது.
இறுதியாய் அவரின் உடல்நிலை அறிந்து அவரின் கதையால் வாழ்க்கையை அறிந்து உண்மையாக வாழப்பழகியவர்கள்,அவரது கலையுலக நண்பர்கள்,மற்றும் முகம் அறியாத ரசிகர்கள் சந்திக்க வருதல் என்பன மூலம் ஒரு கலைஞனின் இறுதிநேரம் கூட அவன் விழிகள் எழுதும் காவிய நினைவுகளாகவே காணப்படும் என்பதை கதாசிரியர் அபி மீண்டுமொருமுறை தெட்டத்தெளிவாய் உணர்த்துகின்றார்.
உயிர் போக நிமிடமுள் அங்குமிங்கும் தள்ளாடிக்கொண்டிருக்கும் போது வரண்டு போன குரலில் மெலிதாக தண்ணீர் என்று முனகுதல்..,இறுதி நொடியில் ஏற்படும் தாகத்தை போக்க கடல் கூட போதாது என்ற திருக்குர்ஆன் உண்மையை எடுத்துரைப்பதோடு இருமுறை நீர் அருந்திவிட்டு அடுத்த நீர் அவரின் இதழுக்குள் செல்ல அடம்பிடித்து வாய்வழியே வழிந்தோடி உயிர் போதல் என்ற வருடல்கள் ஒருவரின் இறுதித்தருணத்தை அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்து பார்த்தால் போல் உணரச்செய்கிறது என்றால் மிகையாகாது இதற்காகவே படைப்பாளர் அபிக்கு எனது பலத்த கைதட்டல்கள்.
ஒரு கலைஞன் வாழ்வில் ஆண்,பெண் மற்றும் திருநங்கை ஆகிய மூவகை பாலினமாக கற்பனையை ஏற்றிக்கொள்பவன் என்பதை நிருபிக்கும் பொருட்டு இறுதியாய் கதை முடிவு பெறும் "இனி அவர்கள் எந்தப் பாத்திரமாக,எந்தக் கதையில் வாழ்ந்து வந்தார்களோ..அங்கேயே மீண்டும் சென்றிருக்கலாம்..!"
மேற்படி வரிகள் மிக அருமையாக சொல்வதால் 'அவரது சொந்தங்கள் 'என்ற தலைப்போடு கருவும் பொருந்திக் காணப்படுவதோடு கதையின் தொடக்கத்தில் வெட்டிய மின்னலும் முழங்கிய இடியும் அவர் உயிர் நீத்த மறுகணமே மண்ணை நனைப்பதால் மரண நியதியை இயற்கையோடு ஒப்பிட்டு முற்றுப்பெறச்செய்வதன் பொருட்டு இச்சிறுகதையை ஆசிரியர் அபி தனக்காகவே எழுதியது போலும் என்னால் உணரச்செய்திற்று.