பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி -- புயலின் மறு பக்கம்
புயலின் மறுபக்கம் கதையை ஒரு சிறந்த வர்ணனை இலக்கியத்துக்கு உதாரணமாக சொல்லலாம் ! சொன்னால் அது மிகையாகாது. முதல் இருபது வரிகளில், மதக்கலவரம் கோர தாண்டவமாடி முடித்திருந்த முழு நகரக் கோலத்தையும் நம் உள்ளத்தால் உணர வைத்திருக்கிறார் கதாசிரியர் அபி
ஆகா! கீழ்க்கண்ட அவரது வர்ணனைகளைப் பாருங்கள் .
மனித நடமாட்டமற்ற பிரதான வீதிகள் ; கண்ணாடி சிதறல்கள் ; ரத்தக் கறைகள் ; எலும்புக் கூடாய் வாகனங்கள் ---( இந்த வர்ணனைகள் வீதிகளின் நிலையைப் பற்றி ;)
கடைகளுக்குள் மிச்சமிருக்கும் கருகிய நெடி .(கட்டிடத்துக்குள் எப்படி இருக்கிறது என்பதையும் விட்டு விடாமல் சொல்கிறார் )
மருத்துவ மனையில் ஒப்பாரிகளும் கேவல்களுமாய் சந்தடிகள் (இதை நகரத்தின் உயிரற்றுப் போன அமைதியுடன் ஒப்பிட்டுக் காட்டுவது மிக அழகு )
அதிகரித்துக் கொண்டே போகும் வெய்யில் அவ்வளவு பெரிய மரத்தின் நிழலையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது என்னும் வர்ணனை மிக அருமை !
ஒரு சிறுகதையை இதை விட சிறந்த வர்ணனை இலக்கியமாக படைக்க முடியுமா ? நாவலை வர்ணனை இலக்கியமாகப் படைப்பது அவ்வளவு கடினமில்லை . ஆனால் சிறுகதையை வர்ணனை இலக்கியமாகப் படைக்கும்போது கதையில் சொல்ல வந்ததை விட்டு விடாமல் இருப்பது கடினம் !
ஆனால் கதாசிரியர் அபி அவர்கள் கதையின் போக்கிலோ அமைப்பிலோ அல்லது பாத்திரப் படைப்பிலோ எந்தக் குறையும் ஏற்படாதபடி எழுதியிருக்கிறார்..கதை சம்பவங்களையும் , வர்ணனைகளையும் சமநிலையுடன் அழகாகக் கையாண்டிருக்கிறார் !
தங்கை தேவகியின் காதல் திருமணம் வெற்றிகரமாக நடக்க அண்ணன் தரும் ஆதரவு , வாசகர் நெஞ்சத்தைத் தொடுகிறது .
கதாசிரியர் அபிக்கு என் மனதார்ந்த பாராட்டுகள் !
இது என் சொந்த படைப்பே என்று உறுதி கூறுகிறேன் .
ம .கைலாஸ்