பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி- புயலின் மறுபக்கம்
ஓர் கலவரப் புயல்:
என்ன புயல் இது? மதக்கலவரப்புயல். இதனால் "போய் வருகிறேன்" என்று பணிக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வராமலேயே போய் விட்டான். வெளியூரில் இருந்து பிழைக்க வந்து பிழைக்க முடியாமல் போய் விட்டான்.
அபியின் கூற்று சரிதான்:
"காதலித்து பெற்றோரின் வயிற்று எரிச்சலைக் கட்டிக் கொண்டு கரம் பிடித்த தேவகியின் கதியைப் பார்த்தீர்களா? ஜெயித்தது அவளின் சாபமல்ல! யாரோ சிலரின் சுயநலம் தான் என்று உணர்வாளா?" என்று அபி கூறுவது சரிதான். வாய்ப்பேச்சாக பெற்றோர் சாபம் இடுவார்களே தவிர மனதால் நன்றாக வாழட்டும், என்று தான் நினைப்பார்கள். சிலரது சுயநல செயல்கள் தானே கலவரங்கள்!
அபியின் சமூக சிந்தனை:
ஒன்பதாவது படிக்கும் போது ராமசந்திரன் சார் எடுத்த வரலாற்று பாடம் தேவகிக்கு மனதில் செதுக்கி வைத்த சித்திரம் ஆனதன் விளைவுதான் அவளது வேற்றுமதக் காதல் திருமணம். அதே போல் அவளது அண்ணனும் கல்லூரிக் காலத்தில் இருந்தே புரட்சிகரமான எண்ணம் கொண்டவனாக இருந்த போதிலும் தங்கையின் திருமணத்திற்கு உதவியதன் மூலம் செயல்வீரன் என நிரூபித்து விட்டான். இரு கதாபாத்திரங்களும் அபியின் சமூக சிந்தனையின் விழைவு தான்.
அபியின் உவமையும் சான்றும்:
திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்பட்ட குழந்தையாய், மருத்துவமனையில் தேவகி மிரண்டு போயிருப்பதாக சொன்னது அழகான உவமை! ஆனால் அவ்வளவு மன வருத்தத்திலும் "செந்திலு என் ராசாவே" என்று கதறிக் கொண்டே வந்த ஒரு தாயை தாங்கிப் பிடிக்கிறாள் தேவகி. போலீஸ் காரர் நீர் கொடுத்து உதவுகிறார். உதவி செய்யும் அருங்குணம் ஒன்றே மனிதத்துக்குச் சான்று என்பதை அபி காட்டுகிறார்.
அபியின் நெஞ்சை உருக்கும் தருணம்:
உயிரோடு இருக்கும் போது கணவனுக்காக காத்திராத தேவகி இறந்த பின் காத்திருப்பதை அபி விளக்கும் போது, நாமே அவளுடன் காத்திருப்பது போலத் தோன்றுகிறது.
அபியின் திறமைக்கோர் சான்று:
இறுதியாக உச்சக்கட்ட காட்சியே அபியின் திறமைக்குச் சான்றாக விளங்குகிறது. போலீஸ் அதிகாரி அவளது கணவன் பெயரைக் கேட்டதும் "அப்துல் காதர்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன பிறகுதான் அது வெறும் காதல் திருமணமல்ல அது இரு மதம் கலந்த சமரச சமாதானத்தை பறைசாற்றும் உன்னத திருமணம் என்று நமக்குப் புரிகிறது. ஆனால் மதக் கலவரத்தில் மனிதம் இல்லையே! அவற்றில் ஈடுபடுபவர்கள் மனிதர்களும் இல்லையே!
அபியின் தத்துவம்:
"சாதி மதத்துக்கு சண்டை போடறவங்க ஒண்ணா சுடுகாட்டுக்குப் போற பிணங்களைப் பார்த்தாவது சிந்திக்க வேண்டும். எல்லோருக்கும் ஆறடி மண் தவிர கடைசியில் சொந்தமாக எதுவும் இல்லை" என்பது அபியின் தத்துவம் மட்டுமல்ல. அது உலகின் தத்துவமும் கூட!