ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் வரலாறு

ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் வரலாறு.
தாய், தந்தை, குரு, இறைவனுக்கு வணக்கம்.
அடியேனுக்கு உடல் கொடுத்த அன்னைபிராட்டியின் திருவடிகளையும்
அடியேனுக்கு உயிர் நல்கிய தந்தையாரின் திருவடிகளையும்
அடியேனுக்கு எழுத்தறிவித்த குருமார்களின் திருவடிகளையும்
அடியேனுக்கு ஆசிபுரியும் மகாபெரியவரின் பாதாரவிந்தங்களையும்
அடியேனுக்குத் திருவருள் புரியும் பரப்பிரம்மத்தையும் பணிந்து வணங்குகிறேன்!!
கணபதி வணக்கம்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் & உருவாக்கும்
ஆதலால் வானோர்கள் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை!!
குரு வணக்கம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் சிந்தித்தல் தானே!!
திருவடியுந் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப்
பெருவடி வேலும் கடம்பும் தடல்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க் கண்களும்
குருவடிவாய் வந்து என்னுள்ளங்குளிர குதிகொண்டணவே!!
பரம் பொருள் வாழ்த்து.
ஒன்றாய் பலவாய் உளவாய் இலவாய் உரைப்போர்க்கு,
அன்றாகி ஆமாம் அருவாய் உருவாகி மெய்ம்மை
குன்றாத ஞானக் கொழுந்தாய்க் குணம் மூன்று இறந்து
நின்றான் யாவன் அவன் நீள்கழல் நெஞ்சில் வைப்பாம்!!
நால்வர் வணக்கம்.
பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன் தொண்டன் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!!
ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்.
திருக்கோயிலின் வரலாறு.
‘ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ சுவாமியை நம’’
மகாராஷ்டிரா புண்ணிய தீர்த்தங்களாகிய தடாகஙக்ளும் நதிகளும் தேவாலயமும் கடவுளின் மூர்த்திகரமும் ஒருங்கே விளங்கும் திவ்ய தேசமானவிட்டல பாண்டுரங்கன் எழுந்தருளி அருள்பாலிக்கும் பண்டரிபுரத்தைத் தன்னகத்தேக் கொண்ட மாநிலம். இத்தகு பெருமையும் புகழும் கொண்டு திகழும் புண்ணிய பூமி இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எங்கும் இருந்ததுமில்லை; இருக்கவும் இல்லை.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா எனப்படும் நகரம் உள்ளது. அதனைச் சுற்றி ஏழு மலைகள் இருப்பதால் அப்பெயர் பெற்றது. சதாராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடத்தில், 1985ம் ஆண்டு, தென்னிந்தியாவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பிரதிபலிக்கும் வகையில் ‘‘ஸ்ரீ உத்திர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்’’ கட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் நகலாக மகாராஷ்ட்ராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடமும் மற்றும் மிக முக்கியத்துவம் பெற்ற மாவீரர் சத்தியபதி சிவாஜியின் பிறந்த பூமியும் சாது சமர்த்தர் இராமதாசர் சமாதியும் உள்ள சஜ்ஜின்கார்டுக்கு அருகாமையிலும் உள்ள சதாராவில் உள்ளது.
கோயில் அடித்தளம் மே 1981இல் நல்ல நாளில் பதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் நிதி உதவியையும் மற்றும் கேரள அரசு கொடிக்கம்பம் உட்பட கட்டுமானப் பணிக்குத் தேவையான உயர்தர மரப்பலகைகள் அனைத்தையும் அளித்தன. மகாசுவாமிகளின் கருணையாலும் மனித நேயம் மிக்கவர்கள் வாரி வழங்கிய நன்கொடைகளாலும் நடராஜர் திருக்கோயில் (கோபுரங்கள் மற்றும் தெய்வ சன்னிதானங்கள் அனைத்தும்) கம்பீரமான தோற்றத்துடன் தமிழ் நாட்டுக் கோயிலின் அசல் பிரதியாக, அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு சதாராவின் புகழைப் பரப்பியது.
மஹாசுவாமிகளுடன் மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்களின் வாயிலாக இக்கோவில் அவர் தெய்வீக ஆற்றலால் கண்டகாட்சியின் பிரதிபலிப்பே என்பதனைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. மஹாஸ்வாமிகளின் கவனை நனவாக்கிய இவ்வாலயத் துவக்கப்பணி முதல் இறுதிவரை மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் திட்ட வரைபடத்தின் நுணுக்கங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். அவரது வழிக்காட்டுதலைப் பின்பர்றி அவர் விருப்பப்படிக் கோவிலை நிர்மாணித்து அவரது கனவை மனநிறைவுடன் நனவாக்கினர். எனவே இது மஹாசுவாமிகளின் உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஸ்ரீ ஆனந்த நடராஜர், தர்மபத்தினி. ஸ்ரீ சிவகாம சுந்தரி இவர்களின் அருளினாலும், மகாசுவாமி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியினாலும் மற்றும் முன்னாள் ஸ்ரீ கே.ஷாமன்னா ஷன்பக் அவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பேராதரவினாலும் பக்த பெருமக்களின் நேசக்கரங்கள் அளித்த உதவிகளாலும் ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் நிர்மாணம் செய்யப்பட்டது. 1985ஆம் ஆண்டு ஜூன் 9ம் நாள் ஏனைய தெய்வங்களின் உருவச்சிலைகளின் பிராணப்ரதிஷ்டை செய்யப்பட்டன. மகாசுவாமிகளின் 91ஆம் வயதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களால் செய்விக்கப்பட்டு, கும்பாபிஷேஹம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ நடராஜர் ஆலயம் காஞ்சி காமகோடி பீட நிர்வாகத்தின் கீழ் பொதுமக்கள் அறக்கட்டளை எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை, நேசமிக்க பக்தர்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாகக் கோயிலின் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறது.
ஸ்ரீ நடராஜப் பெருமான் திருக்கோயில் மகிழ்ச்சிகரமாக தனது ஆன்மீக சேவை செய்து 25 வருடங்களை முடித்து வெற்றிகரமாக வெள்ளி விழாவினைக் குதூகலமாகக் கொண்டாடியது. வேத பாராயணம், வேத சம்ஸ்க்ருத பாடசாலை, வேத விற்பன்னர்களின் மத சார்பான போதனைகளின் பிரசங்கங்கள், இசை மற்றும் பக்திரசம் நிறைந்த கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், கோசாலை ஆகியவற்றிற்கானக் கூடங்களை நிறுவியதோடு மட்டுமல்லாமல் மகாபிஷேகங்கள், ரதோற்சவம், அந்தந்த பருவ காலத்தில் இடம்பெற வேண்டிய திருவிழாக்கள், விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பணி ஆகிய செயல்பாடுகளையும் நிர்வாகம் செவ்வனே நடத்தி வருகிறது.
அறங்காவலர்கள், ஆன்மிகம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பக்தர்கள் பலனடைய வழிவகுப்பதோடு மத விழிப்புணர்வையும் தெய்வீகத் தன்மையையும் அவர்களிடையே பரப்பி வருகின்றனர்.
ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் பிரசித்திப் பெற்றுள்ளதோடு மட்டுமின்றி மிகவும் பிரசித்திப்பெற்ற இத்திருக்கோயிலினால் ஈர்க்கப்பட்ட இலட்சக்கணக்கான பகதர்களும், யாத்திரிகர்களும்ஸ்ரீ நடராஜப் பெருமான், ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மாள் மற்றுமுள்ள ஸ்ரீமஹாகணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராதா கிருஷ்ணன், ஸ்ரீ மூலநாதேஸ்வரர்- உமாதேவி, நவக்கிரகங்கள், ஐயப்பன் ஆகியோரைத் தரிசனம் செய்து அவர்களின் அருளைப் பெறுவதற்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளின் பாதுகைகளுக்கு மரியாதை கலந்த வணக்கங்களை அர்ப்பணம் செய்வதற்கும் நம் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.
திருக்கோயில் அமைவிடம்:
சதாரா மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.
திருக்கோயிலின் அமைப்பு:
இத்திருக்கோயில் சுமார் 2 1/2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் நுழைவாயில் கோபுரங்கள் அமைந்துள்ளன. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர் மற்றும் அம்பிகையின் பெயர்கள்.
மூலவர் : ஸ்ரீ ஆனந்த நடராஜர்
அம்பிகை : ஸ்ரீ சிவகாம சுந்தரி.
தல விநாயகர் : சித்தி விநாயகர்.
திருக்கோயிலின் தலமரம் : அரச மரம்.
திருக்கோயிலின் தலதீர்த்தம் : கிருஷ்ணா , வெண்ணாறு.
திருக்கோயிலினுள் நடைபெறும் பூஜைகளின் விவரம்:
அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாள்தோறும் பூஜைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் நடைபெறுகின்றன.
ஸ்ரீநடராஜர் அபிஷேகங்கள் :
ஸ்ரீநடராஜ பெருமானுக்கு ஓராண்டில் ஆறுநாட்கள் அபிஷேகம் நடைபெறுகின்றன.
1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.
2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்.
3. ஆவணி மாதத்தில் பூர்வபட்ச சதுர்தசியில் மாலையில் அபிஷேகம்.
4. புரட்டாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்தசியில் மாலையில் அபிஷேகம்.
5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
6. மாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்தசியில் மாலையில் அபிஷேகம்.
திருவிழாக்கள்:
நடராஜ மூர்த்திக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளை முன்னிட்டு 5 நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. 5 நாட்களும் 4 வேதங்களும் உத்ஸவத்தை முன்னிட்டுப் பாராயணம் செய்யப்படுகின்றன.
வருடாந்திர விழாக்களான, சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, 2 பிரதோஷம், திருவாதிரை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவில் உற்சவம் நடைபெறும்.
சிவராத்திரியை முன்னிட்டு மாஹாருத்ரம் நடைபெற்று வருகிறது. சிவராத்திரிக்கு இரு நாட்களுக்கு முன்னர், 121 வைதிக வேத விற்பன்னர்களால் 121 கலசங்களில் தல தீர்த்தத்தை நிரப்பி மஹன்யாஸ ஆவாஹனம் 1 1/2 மணி நேரம் செய்வித்துப் பின்னர் 11 முறை ருத்ர ஜெபத்தை பாராயணம் செய்வர். சிவராத்திரி அன்று 12 வைதிக வேத விற்பன்னர்களால் ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் 121 கலசங்களில் ஆவாஹனம் செய்விக்கப்பட்ட புனித நீரை மூலவர்க்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வைபவங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் செவிக்கும் இன்பமும் புத்துணர்ச்சியும் தருவனவாக அமையும்.
இக்கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள பிற சன்னதிகள்:
ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதி.
ஸ்ரீ ராதா&கிருஷ்ணர் சன்னதி
ஸ்ரீ மூலநாதர் சன்னதி
ஸ்ரீ உமையபார்வதி சன்னதி
ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியாரின் சன்னதி
ஸ்ரீ அய்யப்ப சுவாமி சன்னதி
ஸ்ரீ நவக்கிரஹ சன்னதி
ஸ்ரீ திருமுக சண்டிகேஸ்வரி சன்னதி
ஸ்ரீ ஆஞ்சனேயர் சன்னதி
திருக்கோயில் பராமரிப்பு விவரம்:
நன்றாக பராமரிக்கப்படுகின்றது.
திருக்கோயில் நிர்வாகம் குறித்த விவரம்:
ஸ்ரீ நடராஜர் ஆலயம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட நிர்வாகத்தின் கீழ் பொதுமக்கள் அறக்கட்டளை எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை நேசமிக்க பக்தர்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாகக் கோயிலின் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறது.
கோயில் அமைவிடம்:
நெடுஞ்சாலை NH4 இணைக்கும் சதாரா மற்றும் கோலாப்பூர் மார்க்கத்தில் அமைந்துள்ளது.
வரம்பு: சதாராவிற்கு தொலைவு:
சங்கிலியில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
கோலாப்பூரில் இருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
பூனாவில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
மும்பையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சதாராவை அடையும் வழிமார்க்கம் :
சாலைமூலம் :
NH4 நெடுஞ்சாலை; எம் எஸ் ஆர் டி சி சதாரா மும்பை, பூனா ஆகியவற்றில் இருந்து நகரங்களுக்கு இடையிலான பஸ் சேவை இயங்கும்.
புகைவண்டி மூலம் :
சதாரா இரயில் நிலையம்: சதாரா எக்ஸ்பிரஸ் இரயில்கள் மூலம் அகமதாபாத், பெங்களூர், மைசூர், பரோடா, சூரத், தில்லி, மும்பை, பூனா, நாக்பூர், சங்கிலி, மிராஜ் மற்றும் கோவா இணைக்கப்பட்டுள்ளது.
மகாசுவாமிகளின் ஆசியுடன் இம்மீச் சிறுத் தகவல் தொகுப்பினை வரிவடிவில் படைக்கும் வாய்ப்பினை நல்கிய எல்லாம் வல்லநடராஜப் பெருமானின் திருவருளுக்குக் கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஜகத்குரு மஹாபெரியவர் விந்தங்களைப் பணிவன்புடன் வணங்கி நடராஜ பெருமானின் திருப்பாதக் கமலங்களில் அர்ப்பணம் செய்கிறேன்.
பத்தராய் பணிவார்கள் எல்லாருக்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூப் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூடின் அம்மானுக்கும் ஆளே!!
திருச்சிற்றம்பலம் !!
முனைவர் வெ.வசந்தா.
பின்குறிப்பு :
"அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும், தமிழ் நாட்டு சிதம்பரம் கோயிலின் அசல் பிரதியாக, மகாசுவாமிகளின் கனவை நனவாக்கிய உத்தர சிதம்பரம் திருக்கோயிலினை நாம் தரிசனம் செய்து இறை அருளைப் பெறுவதோடு நேசமிக்க பக்தர்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாகக் கோயிலின் நிகழ்வுகளைக் கவனித்து வரும் அக்கோவிலின் அறக்கட்டளை நிறுவனம் தன் பணியைச் செவ்வனே ஆற்ற நம்மால் முடிந்த சேவையைச் செய்வோமாக!"
ஓம் நம சிவாய!!