அகால மரணத்தின் மனிதர்கள் -ரகு

நொடிகளில்
மரணங்களைப்
பிரசவித்துத்
தள்ளுகின்றன
தார் சாலைகள்

வலியில்
துடிக்கிறோம் நாம்

ரத்தக் கறையில்
புழுதி பரப்பிப்
பழையனவாக்கி
அழுக்கோடு சேர்த்து
அழுகுரலையும்
ஏந்திவரும் காற்றில்
கனக்கிறது சுவாசம்

ஒரு தெருவில்
சாவுப் பந்தல்
மறு தெருவில்
மணப் பந்தல்
பிழைத்துக்
கொள்கிறான்
பந்தல்காரன்

அலறல் நிறுத்தியப்
பிண ஊர்தியின்
மயான அமைதியில்
அன்றைய ராத்திரியில்
பாடையில்
ஏறுகிறது தூக்கமும்

வாகன மோதல்களின்
விவரிப்பில்
விழிகளின் வழியில்
இதயம் நுழைகிறது
வெவ்வேறு கால வலிகள்

காதல் கவிதைகள்
ஊற்றெடுக்கும்
பேருந்தின் ஜன்னல் வழி
கோர விபத்தொன்று கடந்து
அடித்துச் செல்கிறது
கவிதையின் நாணல்களை

இன்னும்
தோள்களில் இறுக்கும்
அலைபேசியும்
மதுவில் நிறைந்த
வயிறுகளும்
குறி பார்த்தே
இருக்கின்றன
அகால மரணத்தின்
மனிதர்களை

108-வந்து போன
பரபரப்பு நிமிடங்கள்
கடந்து தேய்ந்த
அமைதி
புரிவிக்கிறது

தெருவுக்கும்,வாசலுக்கும்
வெகு தூரமில்லை......!!

எழுதியவர் : சுஜய் ரகு (2-Jun-15, 11:11 am)
பார்வை : 93

மேலே