பொன்விழா வாழ்த்து
புதுவைப் புகழைப் புவனத்தில் நாட்டும்
மதுரத் தமிழ்மொழி மன்னா !- செதுக்கி
வனைந்த கவிகள்நின் மாண்பினைப் பேசும்
நினைக்கும் உலகே நெகிழ்ந்து .
கவிக்கம்பன் காதலனே கற்பனை யூற்றே
செவிக்குணவுந் தந்தாய்ச் சிறப்பாய் - தெவிட்டாத
சொற்பொழிவால் உள்ளத்தின் சோர்வினை நீக்கினாய்
பொற்புடன் ஓங்கும் புகழ் .
அயல்நாட்டில் வாழ்ந்தாலும் அன்னைமொழிப் பேணும்
இயற்றமிழ் தொண்டரே! என்றும் -தயவாய்
வளர்ச்சிக்குப் பாடுபட்டு வையம் பரப்பி
தளர்வின்றிக் காப்பாய்த் தமிழ் .
காதலுக்காய் ஆயிரம் கற்கண்டு வெண்பாக்கள்
சாதனையாய் நீபடைத்தாய் தாசனே!- சீதனமாய்
மின்வலைப் பூக்கள் விதைத்தனையே நெஞ்சினில்
தன்னிக ரில்லாத் தகவு .
ஐம்பதை எட்டிய அய்யனே! ஒண்டமிழில்
பைம்பொழில் பாயியற்றும் பாவலனே !-கைம்மாறு
செய்வதே நின்பணியோ? செம்மொழியாம் தேன்தமிழை
தொய்வின்றிக் காப்பாய்த் தொடர்ந்து .
எண்ணற்ற நூல்கள் எழுதிய கோமானே!
வண்டமிழில் வண்ணமுற வாழ்த்துவேன் - விண்ணவரும்
பூத்தூவி போற்றிடுவார் பொன்விழா நாளினிலே
ஏத்திடுவேன் வெண்பாவில் இன்று .
முத்தமிழும் வாழ்த்தும் முகவுரைச் சொல்லிடும்
வித்தகனே நின்பணி வென்றிடும்! -இத்தரணி
மீதினிலுன் சேவை மிளிர்ந்திடும், பொன்விழா
போதினிலே வாழ்த்தொலிக்கும் பூத்து .
அற்புதமாய் தண்டமிழில் அந்தாதி பாடினாய்
சிற்பமெனத் தீட்டினாய்ச் செய்யுளை! -நற்றமிழ்
ஞானத்தால் சீர்மிகு ஞாலத்தில் பேறுபெற்றாய்
வானகமும் கூறிடும் வாழ்த்து