தான்கலந்து உள்ளாத் தகையனோ நேரிழாய் - கைந்நிலை 4

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

ஓங்கல் விழுப்பலவி னின்பங் கொளீஇய
தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன்
தான்கலந்(து) உள்ளாத் தகையனோ நேரிழாய்
தேங்கலந்த சொல்லிற் தெளித்து. 4

பொருளுரை:

அழகிய என்னுயிர்த் தோழீ! உயர்ந்த சிறந்த பலா மரத்தில் பழுத்த இன்பத்தைக் கொள்வித்துத் தருகின்ற இன்சுவைக் கனியை, மாமரத்திலிருந்து கருங் குரங்குகள் பாய்ந்து கவரும் மலைநாடன் ஆகிய தலைவன் தேன் போன்ற இனிமை பொருந்திய சொற்களால் சூளுரை கூறித் தெளிவித்து முன் தானே வந்து கூடிப் புணர்ந்து மகிழ்ந்ததை நினையாது மறக்குந் தன்மையுடையவனோ கூறுக என்றாள் தலைவி.

விளக்கம்:

தகையனோ என்றது அத்தகையன் அல்லன், மறவாது வந்து மணப்பான் எனக் கருதுகின்றேன்; உன் கருத்து யாது என்று வினவுவது போல கேள்வி உள்ளது. மலைநாட்டினியல்பு போல அவனியல்பும் இருந்தது என்று குறிப்பினால் தோன்றும்படி தோழிக்குக் கூறியது இது.

மாமரத்திலிருந்து குரங்கு தாவிப் பலாப் பழத்தைக் கவர்ந்தது போல் மலைநாட்டிலிருந்து வந்த தலைவன் குறவர் குலத்திற் பிறந்த என்னைக் கூடிக் கலந்து இன்பம் நுகர்ந்தான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

முசு என்பது குரங்கின் ஒருவகைச் சாதி. கருங்குரங்கு எனவும் கூறுவர்.

கொளீஇய என்பது கொள்வித்த என்ற பொருளில் வந்தது.

பலவின் கனிக்குப் பல அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தது,

உயர்ந்த சிறந்த ஓர் குடியில் தோன்றி இன்பந்தரத் தக்க கன்னி எனத் தன்னையுயர்த்திக் கூறியதாம்.

மாவின் முசு என்றது வேறொரு குடியிற் பிறந்து வந்த தலைவன் எனக் கூறப்படுகிறது.

தெளித்து என்றது இயற்கைப் புணர்ச்சியின் நின்னிற் பிரியேன் பிரியினும் தரியேன் என்று சூளுரை கூறித் தெளிவித்ததைக் குறித்தது.

இலக்கணக் குறிப்பு:

கொளீஇய - சொல்லிசையளபெடை

நேரிழை என்பது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி;

நேரிழாய் என விளியாயிற்று. நேர்மையான அணியணிந்தவள் என்பது பொருள்.

தகையனோ - ஓகாரம்; எதிர்மறை. நாடன் தெளித்து கலந்து உள்ளாத் தகையனோ எனக் கூட்ட வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-15, 1:46 pm)
பார்வை : 77

மேலே