பிரசை இரும் பிடி பேணி வரூஉம் - கைந்நிலை 5

'கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

இரசங்கொண் டின்றே னிரைக்குங் குரலைப்
பிரசை யிரும்பிடி பேணி வரூஉ
முரசருவி யார்க்கு மலைநாடற் கென்றோள்
நிரையம் எனக்கிடந்த வாறு. 5

பொருளைப்புரிந்து கொள்ள சொற்கள் பிரித்துத் தரப்படுகிறது.

இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும் பிடி பேணி வரூஉம்
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள்
நிரையம் எனக் கிடந்தவாறு! 5

பொருளுரை:

இனிய வண்டுகள் சுவையுடன் கூடிய இன்பம் பெற்றுப் பாடுகின்ற ஒலியைக் கேட்டு, தேன் கூட்டினை கரிய பெண் யானைகள் விரும்பி வருகின்ற, முரசு முழங்குவது போல அருவி ஆரவாரம் செய்கின்ற மலை நாட்டையுடைய என் தலைவனுக்கு எனது தோளிற் கூடும் இன்பமானது நரகம்போல நினைக்குமாறு இருக்கும் இயல்புக்கு என்ன காரணம் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

விளக்கம்:

முன் என் தோளிற் கூடும் இன்பத்தை விரும்பி இரவும் பகலும் இடையறாது வந்து திரிந்தவர் இப்பொழுது நரகம் போலத் கருதி வெறுத்து வராது இருப்பதற்குக் காரணம் யாது என்று அறியாது கலங்குகிறேன் எனத் தோழியிடம் கூறினாள் எனப்படுகிறது.

வரூஉ மலைநாடன், ஆர்க்கு மலைநாடன் எனத் தனித்தனி கூட்டவேண்டும்.

தேனீயின் குரலைக்கேட்டு, தேன்கூடு இருக்கும் இடமறிந்து அக் கூட்டினை யெடுக்கப் பெண் யானை வருவது போல நமது குரலைக் கேட்டு நாமிருக்கும் இடமறிந்து வந்து என்னைக் கலந்து இன்பம் நுகர்ந்த தலைவன் என அவனியல்பு கூறப்படுகிறது.

நாட்டினியல்பு உடையவன் அவன் என நயப்புக் கூறியவாறு இது.

முரசருவி ஆர்க்கும் நாடன் என்றது, இவன் நாடு போலவே அவனைக் குறித்து அலர் பரவி யெங்கும் ஒலிக்கும் என்ற குறிப்பை விளக்கியது.

இரசம் - சுவை. அது இன்பத்தை உணர்த்தியது.

பிரசம் - தேன். இது அம் குறைந்து பிரசு என நின்று ஐ யுருபு புணர்ந்து பிரசை என்றாயிற்று. தேன் கூட்டினைக் காட்டியது.

இலக்கணக் குறிப்பு:

இனிமை + தேன் - இன்றேன். இருமை + பிடி = இரும்பிடி. பண்புத் தொகைகள்.

வரும் வரூஉம் என அளபெடுத்தது. இசை நிறையளபெடை

முரசருவி : உவமைத்தொகை; முரசு போல என உவமை உருபு விரிக்கப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-15, 9:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே