இது பட்டினத்தார் புலம்பலல்ல… பட்டும் படாமல் வாழும் மகனுக்கு…
முலையெடுத்துப் பாலூட்டி, முத்தமிட்டுத் தாலாட்டி
சிலைவடித்த சிற்பம்போல், சிறுவயதில் ஆளாக்கி
தலையெடுக்க வைத்தேனே; தனியாளாய் ! - அவனெனக்கு
விலைகொடுத்துப் போனானே விறகிலிட…!!
மொத்தமென ஈரைந்து மாதங்கள் தான்சுமந்து
பித்தனென இருந்த உன்னை பெரியவனாய் ஆளாக்கி
அத்தனையும் அளித்தபின்னே அனாதையாய் நானிங்கு
செத்தபின்னே எரியூட்டச் சந்தனமா?!
சராசரிக்கும் மேலுன்னை சாதிக்க வைத்த என்னை,
தராதரம் அறியாமல் தாரமவள் சொல்கேட்டு,
நிராகரித்த பின்னெனக்கு நீயனுப்பி வைக்கும்
பராமரிப்புத் தொகையொன்றே, பாசமடா..!!
இறுதிச் சடங்கனைத்தும் இடுகாட்டில் படமெடுத்து
இல்லத்துக் காப்பாளர் இணையத்தில் அனுப்பிவைக்க
ஸ்கைப்பிற்க்குள் எந்தன் ஸ்பரிசத்தைத் தேடுகின்ற
மரணந்தான் எனக்கீந்தான் மகன்….!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
