கொம்பு முளைத்த பிற்போக்குவாதி நான்

முற்போக்குக்குள் கொஞ்சம் பிற்போக்கும்... பிற்போக்குக்குள் கொஞ்சம் முற்போக்கும் இருப்பதுதான்... இந்த வாழ்கையின் நீட்சி... கச்சை கட்டாத காலத்தில் ஊருக்குள் வந்த மருமகள், கச்சை அதற்கு மேல் ரவிக்கை என்று கலக்கிக் கொண்டு வந்தது, முற்போக்குதான்.. ஆனால் அவளே தன் கணவனை விட்டு இன்னொருவருடன் ஓடிப் போனதையும் முற்போக்கு என்று கூற முடியுமா..? இன்று வரை கோவணம் கட்டிக் கொண்டு புல்லட்டில் போகும் விவசாயியை நீங்கள் முற்போக்கில் சேர்ப்பீர்களா.. பிற்போக்கில் சேர்ப்பீர்களா...?

பொருள்முதல்வாதத்தையும் கருத்து முதல்வாதத்தையும்... முற்போக்கில் சேர்ப்பீர்களா.. பிற்போக்கில் சேர்ப்பீர்களா...?

வாழ்வென்பதே வாழ்வதின் கதைதானே.. வாழ்வு வேறு, கதை வேறு.. என்று கூறவே முடியாது.. இரண்டுக்கும் வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம்.... இருப்பது இல்லாதது போல இல்லாததும் இருப்பது போல..... எல்லாம் இருக்கிறது, இல்லாமலே.......

மரணத்தின் கோரப்பிடியில் சிக்கி நித்தம் நித்தம் ஊர்ந்து மரணத்தையே நோக்கி போகும் வாழ்வுதனை கவ்வும் சூது ஒன்றும், ஒன்றுமேயில்லை...எல்லா இசங்களும், இலைமறை காயாக சாவதைப் பற்றிதான் கூறுகிறது.. சாவது கூட முழுமை இல்லாத போது... வாழ்வுக்கோ வாழ்வைப் போலவே உள்ள கதைகளுக்கோ இலக்கணம் எப்படி இருக்கும்.. எது தொடக்கம். எது முடிவு... எதுவும் தொடக்கம்.. எதுவும் முடிவு.. எங்கிருந்து வேண்டாமானாலும் தொடங்கலாம்.. எங்கு வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.....

காட்டாற்று வெள்ளத்திடம் போய்... "கரையில் கொண்ட கூழாங்கல் நிறமற்றது... கொஞ்சம் வர்ணம் சேர்த்துக் கொள்" என்று கூறுவது தகுமோ... தகுந்தால் அது நலமோ...?

35 மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்றவர் 34 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தவரிடம் (முதலில் இந்த வெற்றி தோல்வியே மன நலப் பிறழ்வின் முடிச்சு தான்...)...."நீ இப்படி படித்திருக்கலாம்.... நீ அப்படி படித்திருக்கலாம்..." என்று கூறுவது எத்தனை முரண்பாடோ அத்தனை, இந்த அறிவுரை கூறுவது.. காலம் முழுக்க யாரோ போட்ட பாதையிலேயேதான் போக வேண்டுமா.... பாதையை மாற்றுவதும் (பிரேக் தி ரூல்ஸ்....) பயணத்தை சுவாரஷ்யப் படுத்துவதும்தான் முழுமையை நோக்கி தள்ளி விடுகிறது.....தானாக போட்ட பாதையில் போனவர்கள்தான் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.....

"இலக்கல்ல வாழ்வு.. இலக்கை நோக்கிய பயணமே வாழ்வு"- என்பது புத்தனின் வாக்கு... ஆனால் அவனும் மனைவியை, குழந்தையை விட்டு வெளியே வந்தவன்தானே.. இதில் முற்போக்குத்தனம் எது.. பிற்போக்குத்தனம் எது...அவனும் படைக்க வந்தவனே..... படைக்க வந்த பின் தான் படிக்க முடிந்தது.. என்பதுதான் அவன் நமக்கு விட்டு போன செய்தி...

சாடுதல் ஒரு வகை தளும்பல்.... கொடுத்தல் ஒரு வகை தழுவல்... நமது சுபாவத்தையே நமது பால் உணர்ச்சிதான் தீர்மானிக்கிறது என்பது கசந்தாலும் உண்மைதானே... உண்மைக்காக கொஞ்சம் பொய் கூறுவதில் பிற்போக்குத்தனம் வந்தால் அதுவும் முற்போக்குத்தனமே... காதலுக்காக செத்து போகிறவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள்... அதை மறைத்து வைத்து இன்னொருவருடன் குடும்பம் நடத்துபவர்கள் (குடும்பம் நடுத்துவது?) முற்போக்கு வாதிகளா.....?

கேட்க ஆரம்பித்தால் பதில்களே இல்லை.. அப்படித்தான் கிடைத்திருக்கிறது நமது பரிணாமம்.. ஆனால் கேட்டு கேட்டுதான், பச்சைக் கறியை உண்டவன்.. இன்று ரோஸ்ட் பண்ணி உண்ணுகிறான்... புத்தி இல்லாத போது கொன்று தின்ற அதே ஆட்டை, மாட்டை, மானைத் தான் புத்தி வந்ததாக சொல்லிக் கொள்ளும் இன்றைய முற்போக்குத்தனங்களும் செய்கின்றன....... அப்படி என்றால்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..... இரண்டுமே காலப் போக்கில் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு வகையான போக்கு..... அவ்வளவே ....

"ஒரு ஆரம்பம்.. ஒரு இடைவேளை.. ஒரு முடிவு.. இடையில் கொஞ்சம் தமாசு, பாட்டு, கட்டிப்பிடி வைத்தியம்... மரத்தை சுற்றி ஓடுவது... இறுதியில் கண்ணீர் மல்க சுபம்...." இதைத்தானே வாழ்விலும்.. படைப்புகளிலும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறோம்... கொஞ்சம் மாற்றி யோசித்தால்தான் என்ன...? ஆரம்பமே இல்லாத ஒரு கதை.. முடிவே இல்லாத ஒரு கட்டுரை... இடைவெளியே இல்லாத ஒரு கவிதை... வசனமே இல்லாத ஒரு படம்...நிறங்களின் பிரிவுகளாய் ஒரு ஓவியம்..."

ஏன் படைப்புகள் என்ன ஒரு வழிப் பயணமா....? இது இப்படித்தான் என்று கூற.... அது பல வழி சிறகுகள்.. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..மரபுக் கவிதைக்கு பின் புதுக் கவிதை... அதையும் உடைத்து விட்டு ஒரு கவிதை வரும்..... வந்தால் தான் என்ன.. வரட்டுமே...எல்லா கால கட்டங்களிலும் ஒன்று உடைந்து ஒன்று உருவாகும்... அது அப்படித்தான்..

வாழ்வென்று எடுத்துக் கொண்டாலும்....இப்போது உலக நாடுகளில் பரவலாகப் பேசப் படுகிற ஓரினபாலர்களின் திருமணம்..... கடந்த வாரம் கூட ஒரு பெண் தன் மகனுக்கு வரன் தேடிய செய்தி காட்டு தீயாக பரவி இருந்ததே.(அதிலும் என் இனத்துக்கே முன்னுரிமை....). அது முற்போக்குத்தனமா....எல்லா இடங்களிலும்..எல்லா காலங்களிலும் இந்த ஓரின பாலர்கள் இருந்திருக்கிறார்கள்.... இப்போதுதான் வெளியே தெரிவது போல பாவனை செய்கிறோம்...(அந்தந்த கால கட்டத்திலும் எல்லாருக்கும் தெரிந்தேதான் இருந்திருக்கிறது....அப்போது அது மறைக்கப்பட்ட முற்போக்குத்தனமா..அல்லது ..... பேச அஞ்ச, கண்டும் காணாமல் விட்ட பிற்போக்குத்தனமா...?) ஓரினபாலர்களின் திருமணம் இங்கும் வந்தே தீரும்... வரட்டுமே...... என்ன ஆகப் போகிறது..... பிற்போக்குத்தனம்.. முற்போக்குத்தனம் என்று பேசிக் கொண்டு வெற்றிலை போட்டு குதப்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .... இன்றைய அறிவாளிகள்......ரயில்கள் வந்து நின்று போய்க் கொண்டேதான் இருக்கும்...

வாழ்விலும் படைப்பிலும் எல்லாருக்கும் இடம் வேண்டும்... வாத்தியார் மட்டும் பேசிக் கொண்டே இருந்தால் பிள்ளைகள் மக்காகத்தான் போவார்கள்.. பிள்ளைகளும் குறைந்த பட்சம் கேள்விகளாவது கேட்க வேண்டுமே... வாசகனுக்கு இடமில்லாத படைப்புகள் யாருக்காக.....அவன் சிந்தனையை கிளறி விட வேண்டும்.... ஒரு கேள்வியையாவது அவன் கேட்க அனுமதிக்க வேண்டும்.... பதிலி பதில்களைக் கூட அவன் இட்டு நிரப்பிக் கொள்ள இடம் அளிக்க வேண்டும்...... அவனுக்குள் படைப்பு சொல்லாமல் விட்ட வெளிகளைக் கூட நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு சூட்மத்தை பொதிந்து வைத்திருக்க வேண்டும்.... அதை விட்டு... இது சோறு.. இது குழம்பு.. இது பொரியல்.. இது வாய்.. இப்போது பிசைகிறேன்...... இப்போது உருட்டுகிறேன்... இப்போது வாய்க்குள் போடுகிறேன்.. இப்போது உனக்கும் சேர்த்து சாப்டுகிறேன்னு சொல்வதில் உடன்படாத படைப்புகளில் எல்லா தனங்களும் இருக்கத்தான் செய்யும்....வாசகனாய் படிக்கையில் புரியும் எதார்த்தம்... ஒரு படைப்பாளியாய் படிப்பதில் கிடைப்பதில்லை........ படைப்பாளி எல்லா நேரங்களிலும் கொம்பு முளைத்த படிப்பாளியாகவே இருக்கக் கூடாது.. இன்னொருவர் இயக்கத்தில் ஒரு இயக்குனரே நடித்தாலும் ஒரு நடிகனாகத்தான் நடிக்க வேண்டுமே தவிர ஒரு இயக்குனராகவே நடிக்க கூடாது.. அப்படி நடிக்கும் போது கெட்டது சுண்ணாம்பு.... அது தான் இங்கு நடக்கிறது...

பெண்ணுக்கு தாலி கட்டுவது பிற்போக்குத்தனம் என்றால், இனி ஆணுக்கும் தாலி கட்டுவோம் என்பது முற்போக்குதனமா... இல்லை.. இனி நாங்கள் தாலி கட்டிக் கொள்ள மாட்டோம் என்பது முற்போக்குதனமா...?.....இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்து கொண்டே தான் இருக்கும்.... கை மீறிய வாழ்வுக்குள் மானுட சமூகம் போய்க் கொண்டிருப்பது சரியோ தவறோ... அதையும் சொல்ல முடியாத தூரத்தில்தான் பேனா பிடித்துக் கொண்டு கிறுக்கிக் கொண்டு இருக்கிறோம்.. இதில், எல்லாம் தெரிஞ்ச மனநிலை எங்கிருந்து வருகிறது... யாருக்கு என்ன தெரியும்.... "எனக்கு எதுவுமே தெரியாதுங்கறேன்னு"- சொன்ன ஐயா காமராஜ் அவர்கள் போட்ட திட்டம்தான் இன்னைக்கு நம்மல்ல நிறைய பேர் வாய் கிழிய பேசறதுக்கும்,தாள் கிழிய எழுதறதுக்கும் காரணம் ..........

உலமயமாக்களின் குடிசைக்கு வெளியேதான் இன்னும் எங்கள் ஊர் சிறுவர்கள் செங்கல் சுமக்கிறார்கள்.....(உங்கள் இசங்களைத் தூக்கி குப்பையில் போடுவீர்களா.... அகப்பையில் போடுவீர்களா...?)

நாலு பேர் பாராட்டி விட்டால் கொம்பு முளைத்து விடும் மனப் பான்மையை என்னவென்று சொல்வது....... உடனே நாலு பேருக்கு உபதேசம்.... கவுண்டமணி அவர்கள் சொல்வது போல.... "புத்தி சொல்றாராமா..."- என்று சிரிக்கத்தான் தோன்றுகிறது... அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அற்புதமான விஷயம்... ஆனால் சட்டாம்பிள்ளைத்தனமாக பேசுவதுதான் பிற்போக்குத்தனம்.... அது கூட அதையும் கண்டு கொள்ளா மனதில் முற்போக்குத்தனமாக மாறி விடுவதில் இரண்டு போக்குகளும் மல்லுக்கு நின்று தோற்று , ஜெய்த்து... கடையில் மண்ணாப் போகிற, யாருமே படிக்காத சூழலுக்குள் கொண்டுதான் செல்கிறது... பார்ப்பவனை விட படைப்பவன் பெருகிற அபாயம் இது...

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் ஒரு படைப்பாளிதான்...படைப்பும் வாழ்வும்...ஒரே நேர்கோட்டில் செல்லும் இருவேறு பயணங்கள்..பயணங்கள் தாமதமாகலாம்.... ஆனால் பயணம் தொடர்ந்தே தீரும்.... பாரதியை விமர்சிக்க யாவருக்கும் தகுதி உண்டு.. ஆனால் அவன் எழுதிய கால கட்டதோடு சேர்த்துதான் அவன் படைப்புகளை புரிந்து கொள்ள வேண்டுமே தவிர... சில இன்றைய சூழலுக்கு பொருந்தாத படைப்புகளை படித்து விட்டு கத்திரிக்காய் மாதிரி முந்திக் கொண்டு கத்திக் கொண்டு இருப்பதில் நகைப்புதான் இருக்கிறது ஒரு பிற்போக்குத்தனமாக...

விமர்சனம் தேவை... கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு... படைப்பவனுக்கும் உண்டு... படைப்பவன் என்ன ஆகாயத்தில் இருந்தா குதித்து விட்டான்.. எல்லாம் தாங்க...?..... அவனுக்கும் கோபம் வரும்... கோபம் பிற்போக்குத்தனமாகக் கூட இருக்கலாம்.. முற்போக்குவாதிகள் மன்னித்து விட்டு போங்களேன் பார்க்கலாம்... இங்கிருந்து எடுக்கப்பட்டவை... இங்கேயே கொடுக்கப் படுகின்றன..... தெரியாமலா சொல்கிறார்கள்.... "பாராட்டுவதை எல்லோர் முன்னாலும் செய்.. குறைகளை தனியாக சொல்" என்று.. இது கூட புரியாத முற்போக்குவாதிகளின் வரிகளில் முற்போக்குத்தனமே இருந்தாலும்.. அது பிற்போக்குத்தனம்தான்....

ஒரு கதையில் கூட... விபசாரத்தில்(உடனே விபசாரமே தவறு என்று கொடி பிடிப்பவர்கள், ஜன்னலை திறந்து கொண்டு வெளியே வந்து பாருங்கள்)(சரி என்றும் நான் கூறவில்லை....) ஈடுபடும் தன் அரவாணி நண்பனுக்காக அவனுக்கு முடியாத ஒரு நாளில் ஒரு குடும்ப பெண், (தன் தோழன் அரவாணியின் அம்மாவைக் காப்பற்றும் நோக்கில்) தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக் கொள்வாள்.... இதற்கு மௌனமாய் கடும் விமர்சனங்கள் வந்தனவே.... அப்போது எங்கு போனார்கள் முற்போக்குவாதிகள்...(அப்போ... பசிக்காக விபச்சாரம் செய்வது தான் முற்போக்குதனமா என்றும் கேட்பது கேட்கிறது..... கொலை செய்வதை விட விபச்சாரம் தேவலை என்றும் ஒரு முற்போக்குத்தனம் பிற்போக்குத்தனமான சூழலுக்கு தகுந்தார் போல யோசிக்கிறது...) அதாவது முற்போக்குத்தனம் என்பது நமது வட்டத்துக்குள் ஒரு கட்டம் போட்டு அதற்குள் நிகழும் செயல்பாடுகள் என்று மட்டும் நினைத்துக் கொண்டும்.. விவாதித்துக் கொண்டும் இருக்கும் சில அறிவாளிகளுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால்... நாம் நினைக்கும் உலகம் வேறு... இருக்கும் உலகம் வேறு... 12 வயசு சிறுமி காசுக்கு தன்னை விற்கும் நிலைமை எங்கோ இல்லை.. இதே ஊரில் இருக்கிறது.... வெறும் பிற்போக்குதனத்தையும் முற்போக்குத்தனத்தையும், அறிவு சார்ந்த விவாதங்களையும்... மொக்கை சாடல்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது.... கருவை கூட கலைக்க முடியாது.......

உங்களுக்கு புரியாதது போல இருந்தால் நான் சரியாக எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்று அர்த்தம்.... புரிந்து விட்டால் மிகச் சரியாக எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்று அர்த்தம்...

தொடர்ந்து எழுதுவேன்.... அது முற்போக்கோ.... பிற்போக்கோ.... என்னை சுற்றி இருக்கும்... வாழ்வியலை.. எனக்கென்று வகுத்த பாதையில்.... தொடர்ந்து எழுதுவேன்.... கடுமையான விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.......

இப்படிக்கு பிற்போக்குவாதி...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (4-Jun-15, 2:04 pm)
பார்வை : 263

சிறந்த கட்டுரைகள்

மேலே