திரு பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வு - இன்னொமொரு கண்ணி

படைப்பு எந்த வடிவமானாலும் படைப்பாளி அதை சமுதாயத்தின் முன் பதிவிட்டு சமர்பிக்க பல காரணங்கள் இருக்கலாம். பொழுதுபோக்கு என்கிற ரீதியில் கூட படைக்கப் படலாம். மாந்தர்களின் மனத்தில் ஏதாவது ஒரு வகை தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்பது ஒரு முக்கியமான நோக்கமாக இருக்கலாம். எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் "இன்னுமொரு கண்ணி" சிறுகதை ஒரு சீரிய சமுதாய சீர்திருத்த நோக்கோடு எழுதப் படுகின்ற வகையில் சேரும்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் இருந்தே மனித இனத்துக்கு ஒரு பெரும் சவாலாக இருந்து கொண்டு வரும் ஒரு கொடிய நோய்தான் எயிட்ஸ். இதை எப்படி எதிர்கொண்டு அழித்து மனித இனத்தை அந்த நோயின் பிடியிலிருந்து விடுவிப்பது என்பதில் உலகத்து நாடுகள் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து மொழி இலக்கிய துறைகளும் மருத்துவ துறையோடு தோள் கொடுத்து முதலில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரிய தொண்டில் ஈடுபடத் துவங்கின. அந்த நல்ல நோக்கத்தில் உலகம் முழுமையும் துவங்கிய ஒரு இலக்கியச் சங்கிலி யின் ஒரு கண்ணியாகவே இந்த சிறுகதையை நான் பார்க்கிறேன்.

சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் அதன் முயற்சிகளை எங்கு எப்போது எவ்வாறு செய்தால் நல்ல தாக்கம் ஏற்படுத்துமோ அங்கு அப்போது அவ்வாறு செய்ய வேண்டும். அதைத்தான் ஆசிரியரும் சிறுகதையின் முக்கிய கதாபாத்திரமான கணேசன் அவனது அப்பாவிடம் தான் கொண்ட முயற்சிகளை விளக்கும் உரைநடையாக சொல்ல முயல்கிறார்.

சிறுகதைக்கு இலக்கணமாக ஒருசில கதாபாத்திரங்களையும் ஓரிரு நிகழ்வுகளையும் வைத்து இறுதிவரை வாசகரை ஆர்வத்தின் முள்முனையில் உட்காரவைத்திருக்கிறார் ஆசிரியர். நிகழ்வுகளூடே அடுத்த தலைமுறையை இந்த சமுதாயத்துக்கு நல்ல முறையில் விட்டு செல்ல வேண்டுமென்கிற ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தின் பெற்றோரின் ஆதங்கங்களும் பயங்களும் எதிர்பார்ப்புக்களும் வெளியாகின்றன.

கணேசன் என்கிற மகன் ஒரு விலைமாதுவின் வீட்டிற்க்கு நள்ளிரவில் சென்ற செய்தியை நண்பர் மூலமாக அறிந்த கணேசனின் அப்பாவின் ஆதங்கம் இதை வாசிக்கும் வளர்ந்த பிள்ளைகள் உள்ள எந்த ஒரு அப்பாவும் ஒரு கணம் தனது பிள்ளையை கண்முன் கொண்டு வந்து ஒரு பெருமூச்சு விட்டவாறே அடுத்த வரிகளை வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

//// வரது நடுங்கிப்போனார்.பதட்டத்துடன் வார்த்தைகள் தந்தியடித்தன. “கணேசனா..?..அவன்தானா..? நல்லாப்பாத்தியா..? இருக்காதுப்பா..”
பாலு,வரதுவின் கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்.“///
ஒரு பண்பட்ட குடும்பத் தலைமகன் தன் மகன் மீது கொண்ட நம்பிக்கை வெளிப்படும் வரிகள்.
ஒரு உண்மையான நண்பர்கள் தங்களிகிடையே கொள்ளும் அக்கறையும் வெளிப்படுகின்றது அந்த நண்பரின் பதில் மூலம்.

எயிட்ஸ் என்கிற கொடிய நோய் பாலியல் சம்பந்த பட்டது என்றும் அது பள்ளி மாணவர்கள் அறியத் தகுந்ததல்ல என்கிற அறியாமையை சுட்டிக் காட்டும் சிறுகதை, விழிப்புணர்வு அங்கிருந்துதான் தொடங்க வேண்டும் என்கிறதை வலியுறுத்தும் வண்ணம் நிகழ்வுகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.
//பெரியவுங்க சொல்றதை விட எங்களை மாதிரி பசங்களே இதையெல்லாம் பேசும்போது நிறையப்பேரு இந்தப் பசங்களுக்கு இருக்கற தெளிவு நமக்கும் வரணும்னு திருந்தியிருக்காங்கப்பா..”// கணேசன் அப்பாவிடம் அளிக்கும் விளக்கம்.

கணேசன் என்கிற அந்த மாணவன் பாலியல் தொழிலில் சந்தர்ப்பவசமாக ஈடுபட்ட சுந்தரிக்கு ஆணுறைகள் கொடுக்கிறான். ஓட்டுனர்களுக்கு அந்த நோயைப் பற்றிய நோடீஸ் மற்றும் ஆணுறைகள் அதுவும் சரியான சமயத்தில் அதாவது இரவு நேரங்களில் சென்று விநியோகிக்கிறான். இந்த நிகழ்வுகளை எழுதும் ஆசிரியர் ஒரு சிறுகதை மூலம் விழிப்புணர்வின் மனோரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை அழகாக விவரித்திருக்கிறார்.

கணேசனின் தந்தையும் அந்த விழிப்புணர்வு இயக்கத்தில் சேர முன்வருகிறார் என்று முடிவு கதைக்கு முத்தாய்ப்பு,

இந்த கதையை ஆசிரியர் எழுத்து தளத்தில் பதிந்திருப்பது நவம்பர் கடைசி வாரம். அதாவது எயிட்ஸ் விழிப்புணர்வு தினமான டிசம்பர் ஒன்றாம் தேதி நெருங்கும் சமயம். ஒரு சமுதாய சீர்திருத்த நோக்கில் எழுதப் பட்ட அருமையான கதை !

திரு பொள்ளாச்சி அபி அவர்களே ...தொடரட்டும் உங்கள் பணி....

=====================================================================================
இந்த திறனாய்வு கட்டுரை முற்றிலும் எனது படைப்பே.
- ஜி ராஜன்

எழுதியவர் : ஜி ராஜன் (4-Jun-15, 1:03 pm)
சேர்த்தது : ஜி ராஜன்
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே