புலம்பவைக்கும் புதுமைகள்

பச்சை போர்வை போர்த்திய மலைகள்
பாறை கண் கொண்டு, போர்வை கிழிசல் வழியே,
பார்வை வீசியதே என்மீது - வெட்கத்தோடு
பாவையை நினைவு கூர்ந்தேன்.

என்னைவிட பலமடங்கு வளர்ந்த மரங்கள்
எண்ணிக்கையில் மட்டும் தளர்ந்து இருக்க,
எண்ணங்கள் தடம் மாறி, தேடி நகர்ந்தேன்..,
என் நினைவிலிருந்த நிறங்களை.

மச்சம் போல, பூங்கிளை அமரும் வண்டுகளும்,
பிச்சை பாத்திரம் ஏந்தி வேறு ஊர் சென்றதோ?
மிச்சம் மீதி இவைதான் என்றால் - என்
இச்சை தீர்க்கும் காட்சிகள் எங்கே?

ஒற்றையடி பாதையை புற்கள் மேய்ந்துகொண்டிருக்க,
பற்றை துறந்த துறவியாய், சிந்தித்து நான்நகர,
நேற்றை நினைவுகூறும் தூரத்து பனை மரம்,
நேர்ந்தவற்றை கூறியது அசைவுகளால்.

கன்றை துரத்தி ஓடிய மைதானம்,
இன்றை எதிர்கொண்டு உயிர் பிழைத்திருந்தது..,
குன்றாய் மீண்டும் மழலை நினைவுகள் வளர,
சென்றேன் வயல்வெளி நோக்கி.

தக்காளிக்கும் வெண்டைக்கும் இடம் பிரித்து,
தற்காலிக சண்டைக்கு இடம் சேர்த்து,
தலையில் மிதிபடுவதே விதி என்றிருந்த,
தலைமை வரப்புகளின் விரைப்பெங்கே?

நீருண்ட காற்று பூமணம்சூடி, பெரும்
வேர்கொண்ட மரங்களை பிடுங்க எண்ணி,
போர் செல்லும் வீரனாய், இடும் சத்தங்களை,
யார்கொண்டு போனது இன்று?

காட்சியில் அன்றிருந்த ஈரம், இன்று
கண்களில் தோன்றி நிறைந்ததே - வறண்ட
காற்றில் திரண்ட மணற்துகள்கள் மோதும்முன்னே,
கண்மணிகள் ஏனோ கலங்கியதே?

எழுவதும், உழுவதும், தொழுவதும் என்றிருந்தோரை,
எழுதுவதும், உணருவதும், தொடருவதும் வீணென்று
எண்ணி, மூன்றாம் தேவைக்கென முதலாம் தேவையை,
எட்டி உதைத்த என்போன்றோரே..,

புதுமைஎன்பது பழமையை பழுதுபார்பதாய் இருக்கவேண்டும்..,
இதுதான் உண்மையென்று, எப்போதாவது தெரியவந்தால்,
மெதுவாக சென்றாவது சேர்ந்திடுங்கள்.., திருத்தப்பட்ட
புதுமைகளை தேடி சென்று.

எழுதியவர் : சாய நதி (5-Jun-15, 5:22 pm)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 141

மேலே