வயதுக்கு வந்தவன்

அணை போடத் துடித்தும்
பயனற்று வழிந்த விழிநீரை
துடைக்காமலே
வேதனை கௌவிய
உடல் மொழிகளோடு
அதிபரிடம் விளக்கம் கேட்டான்
அந்தப் பதின்ம வயதை நெருங்கியவன்.

இத்தனை அகவைகள்
இனிக்கும் தேன் குரலினால்
காலைப் பிரார்த்தனையை
கட்டிப் போட்டிருந்தான்
பால்யத்தை தொலைக்க
ஆயத்தமானவன் .

உச்சரிப்பின் சுத்தத்திலும்
சுருதியின் ரிதத்திலும்
திருவாசகமும்
அவனிடத்தில்
மயங்கி நின்றது .

பள்ளியின் பாராட்டை விட
தினம் கிள்ளும் மாற்றாந்தாய்க் கொடுமை
மறந்து விடுதலால்
பாடும் நேரமே
பரவசமாய்
உயிர் வாழும் கணங்களாய்
தெரிந்தது அவனுக்கு,

சக மாணவியை
சபையில் பாடலிசைக்க அனுப்பிய
சங்கீத ஆசிரியர்
சங்கேத பாஷையில் விவரித்தார்
உடையும் குரலும்
அரும்பும் மீசையும்
காளையாகப் போகும் உனக்கு
இனி மேடையில் என்ன வேலை ?

பருவ மாற்றமே! பக்கத்திலேயே வராதே !
பால்யமே !! என்னை விட்டுப் போகாதே
தாயாய் நேசிக்கும் தங்கக் குரலே !
தவிக்க விட்டுப் போய் விடாதே!
இறைஞ்சி நிற்கின்றான் அவ் விளம் பருவத்தினன்.

-வளர்மதி சிவா

எழுதியவர் : வளர்மதி சிவா (8-Jun-15, 6:15 pm)
பார்வை : 84

மேலே