வெவரங் கெட்டவள்

பூப்பெய்தும் முன்னரே
நிறைய நிகழ்ந்திருந்தாலும்
அப்பத்தா சொல்லியிருந்த வெவரம்
தெரியாப் புள்ளையாகியிருந்ததால்
தெரிந்துகொள்ளவும்
ஆசைப்பட்டிருக்கவில்லை.....

அது நிகழ்ந்துவிட்ட பிறகும்
அப்பத்தாதான் சொல்லியிருந்தது...
சூதானமா இருந்துக்க கண்ணு......

செம கட்டை.... பதின்வயதுப்
பின் கூவல்களுப் பிந்தையதாய் வரும்
.... ஆனாலும்
நீட்டல்களுக்கான
வெவரம் என்பது புரியவில்லை.....

பற்கள் வெள்ளையெனச்
சொல்லிச் சிரித்த தோழிகளின்
இவளுக்கு அங்கே
எப்படியாகவோ எனும் நமுட்டல்களுக்கான
வெவரம் புத்தியில் ஏறியிருக்குமா
தெரியவில்லை ....

நேர்காணல்கள் பொழுதில்
இன்ன சாதியாக இருக்குமோ
அனுமானங்களில்
தொடர்பில்லாக் கேள்விகளுக்கு
மழுப்பியிருந்த போதும்
வெவரம் என்பது வெட்கப்படுவதோ
என அர்த்தப்படுத்திக் கொண்டும்
இருந்திருக்கலாம் ....


அனேகமாக மாதவிடாய்கள்
நின்றுபோகத் தீர்மானித்திருந்த ஒரு
சித்திரை நாளில்...
"ரெண்டாங் கட்டுக்காவது
ஒத்துக்கிட்டானே.... என்ன பண்ணித்
தொலைக்க.. கருப்பால்ல
பொறந்துட்ட.... வெவரமாப்
பொழச்சிக்கடி.....!


அப்பத்தா மீண்டும்
வெவரத்தைச் சொல்லியிருக்காவிடில்
வெவரங் கெட்டவளாகவே
செத்துப் போயிருக்கக் கூடும் அவள்...

எழுதியவர் : நல்லை.சரவணா (9-Jun-15, 9:49 am)
பார்வை : 108

மேலே