கதவேழம் இனன்நோக்கி, பாய்ந்துஎழுந்து ஓடும் - கைந்நிலை 9

கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

காந்தள் அரும்புகை என்று, கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்(து), இனன்நோக்கி,
பாய்ந்(து)எழுந்(து) ஓடும் பயமலை நல்நாடன்
காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? 9 - பல விகற்ப இன்னிசை வெண்பா

பொருளுரை:

சினம் பொருந்திய யானை செங்காந்தள் மலரைக் கொடிய தீ யென்று கருதி உயர்ந்த தன் கொம்புகளினிடையே துதிக்கை உயர்த்தி நீட்டிக்கொண்டு தன் இனமாகிய யானைக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து ஓடுகின்ற அச்சத்தைத் தரும் மலைகளை உடைய நல்ல நாடனாகிய நம் தலைவன் நம்மிடத்தில் வந்து கூடிக் கலந்து செல்லும் இன்பத்தை வெறுத்து விட்டானோ? நானறியேன் என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

விளக்கம்:

காந்தள் என்பது மலரையும், புகை என்பது நெருப்பினையும் உணர்த்தியது. காந்தட் பூக்கள் பல நெருக்கமாக மலர்ந்திருந்தால் அது தீயெரிவது போலத்தோன்றும். யானைகள் தீக்கு மிகவும் அஞ்சும். யானைகள் வராமல் தடுப்பதற்கு மலையில் வாழ்வோர் பரண் கட்டி அதன்மேல் படுத்துச் சுற்றிலும் மரக்கட்டைகளைப் போட்டுத் தீ மூட்டி விடுவர். இரவு முழுவதும் எரியும். அது கண்டு, நெருப்புத் தோன்றும் இடத்திற்கு யானை வராது.

நெருப்பைக் கண்டு அஞ்சுவது யானைகளின் இயற்கை. யானை அஞ்சி ஓடும்போது துதிக்கையை இரு கொம்புகட்கும் நடுவில் நிமிர்த்திக் கொண்டே செல்வதும் இயற்கை. இதனையறிந்து கவிஞர் இவ்வாறு கூறினர்.

யானைகள் வீறிட்டோடுவது கண்டார்க்கு அச்சந்தரும் ஆதலால் ‘’பயமலை’’ என்றார்.

பயம் - பயன் என்று பொருள் கொண்டு பலவகைப் பயன்களையும் மக்கட்குத் தரும் மலை என்றுங் கூறலாம்.

யானை ஓடும் இயற்கையுடைய மலை, பயன் தருமலை என்று தனித்தனியாக கொள்ள வேண்டும்.

யானை காந்தள் மலரைக்கண்டு தீயென மருண்டு வெருண்டோடுவது போல அந்நாட்டுத் தலைவனும் நம்மைத் தீயோர்கள் எனக்கருதி வெருண்டு ஓடி மறைந்தான் போலும் எனவும் கொள்ளலாம்.

பிரிந்து சென்ற காதலன் வராததால் வெறுத்தானோ? வெறுத்திலனோ என்று ஐயமுறுகின்றேன். உன்கருத்து யாது எனக்கேட்பவள் போல வினவினள். தோழியிடம் கூறியது தன் துயரத்தை மாற்றுவாள் என்று கருதியே ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-15, 7:04 am)
பார்வை : 110

மேலே