இட ஒதுக்கீடும் சாதீயமும்
இட ஒதுக்கீடு .... வேணாமுங்க.... அவர்களெல்லாம் நல்ல நிலைக்கு உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ?
பெரும்பாலான கருத்துகள் கேலிச் சித்திரங்கள் மேற்சொன்ன வாக்கியங்களையும் உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் உலா வருவதைப் பார்க்க முடிகிறது. என்னுடைய பார்வையில் இது மீண்டும் சாதி வெறியர்களால் ஒரு நசுக்கப்பட்ட சமூகம் மேலெழுந்து வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் அவர்களை நசுக்கும் ஒரு நவீன யுக்தியாகவே உணர்ந்துகொள்ள வேண்டியதாகி விடுகிறது.
இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ? எனக் கேட்டுக் கொண்டிருக்கும் நவீன சாதிமறுப்பாளர் சமூகத்திற்கு நடுவில்தான் ஒரு சவரக்காரனின் கவிதை மசுருகள் எல்லாம் சக்கைப் போடு போடுகிறது. பல அதிர்வலைகளை உண்டாக்குகிறது.
விவசாயம் காட்டுத் தொழிலென்று கைவிட்டு நன்கு படித்த தேறியவர்கள் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களில் கூட இன்னும் சாதி கேட்டுக்கொண்டு நட்பு வளர்க்கும் பழக்கம் இருக்கிறது என்று சொன்னால் எவரும் மறுப்பதற்கில்லை. அம்மாதிரியான குழுக்களில் ஒரு தாழ்த்தப்பட்டவர் இருக்கிறார் என்று தெரிந்தால் மற்றவர்களின் பழகும் விதமே வேறுமாதிரியாகிப் போகிறது. இது பன்னாட்டு நிறுவனங்களில் மட்டும் அல்ல.. பள்ளி.. கல்லூரி அரசு... தனியார் என எல்லா இடங்களிலும் புரையோடிப்போய் இருக்கிறது.
சரி.. இடஒதுக்கீடு வேண்டாம் என்று முழங்கும் நவீனச் சாதி மறுப்பாளர்களுக்கு ஒரு கேள்வி. மொத்தமாக தகுதியின் அடிப்படையில் எல்லா படிப்புகளுக்கும் எல்லா வேலைகளும் எல்லா ஆதாயங்களும் ஒதுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். எத்தனை நவீனச் சாதி மறுப்பாளர்கள் ஒரு தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் பெண் எடுத்தோ பெண் கொடுத்தோ உறவுகள் வைத்துக்கொள்ள முன்வருவார்கள்? இப்படிக் கேட்டால் பஞ்சுப் பால் குடிக்கும் முகங்களில் வெயில் குடித்த பாறைகளாகி விட்டதைப் போல ஒரு தோற்றம் சொல்லிக்கொள்ளாமல் வந்து ஒட்டிக் கொள்கிறது.
இட ஒதுக்கீடு படிப்பில்மட்டும், வேலைவாய்ப்பில் மட்டும்தான் நீக்கம் பெற வேண்டுமா? மனிதர்களில் வேண்டாம் அல்லவா? இது எந்த மாதிரியான கோரிக்கை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இன்னும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் “எந்தச் சாதிக்கும் சம்மதம் SC/ST” தவிர என்ற Conditions apply யோடு வரும் மணப்பந்தல் மணமேடை விளம்பரங்களைக் காண முடிகிறது. இப்படியான சூழலில் எந்த இடிந்த சுவற்றில் கொண்டுபோய் முட்டிக்கொண்டு சிரிக்க "இப்பல்லாம் யாரு சாதி பாக்குறா".... என்று ?
இன்னும் உச்சமாய் கௌரவக் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கொடுமை என்னவென்றால் கௌவரக் கொலையாளிகள் பின்புலம் பார்த்தால் அவர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்கிறார்கள். பிறகு படிப்பு என்பது வெறும் மதிப்பெண்களுக்குத் தானோ? அறிவு என்பதெல்லாம் குடும்ப உறவுகளும் ஏனைய சுற்றத்தாரும் சொல்லி விதைத்து விடுவதுதானோ என்று நினைக்கத் தோன்றுவதில் தவறொன்றும் இருப்பதாய்த் தோன்றவில்லை.
ஒரு விளிம்புநிலை சமூகம் தன்னை தன் சுற்றத்தாரை தன் சூழ்நிலையை உயர்த்திக் கொள்ள அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட இடஒதுக்கீடை மட்டும் நீக்கிவிட்டால் மீண்டும் ஆதிக்க சக்திகள் விளிம்புநிலை சமூகத்தை நசுக்கும் காலம் வந்துவிடும் என்பதை மறுக்கவே முடியாது.
இன்னும் வங்கிகளிலும் ஏனைய அரசாங்க அலுவலகங்களிலும் “ எனக்கெல்லாம் இது நெலம.... அந்தப் .....................பய கிட்டே எல்லாம் நின்னு பேசிட்டு வர வேண்டியது இருக்கு....! “ எம்புட்டு திமிரு பாத்தியா.... கேக்குற கெள்விக்கி எவ்வளவு அலட்சியமா பதில் வருது.... எல்லாம் சாதிப்புத்தி..... “ என்று இவர்களாகவே ஒரு அடையாளத்தை ஒரு சமூகத்தின் மேல் திணிக்கின்றனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் நபருக்கே இந்த நிலைமை என்றால் ஒரு சராசரி வாழ்க்கை நடத்தும் சாமானியன் எப்படியெல்லாம் பாதிக்கப் படுவான் என்று யோசிக்கும்போழுதே வன்முறைக் கொப்புளம் எப்படா என்னைக் குத்திவிடுவ....? என்பது பொல ஒரு மாயை நிகழ்ந்துவிட்டுப் போகிறது..
தன் வீட்டில் தன் தோப்பில்... தன் பண்ணையில் தான் ஆதிக்கம் செய்துவந்தவர்களின் வழித் தோன்றல்கள் .வாரிசுகள், தன் வழித் தோன்றல்கள் வாரிசுகளுக்கு இணையாக பொருளாதாரத்திலும் சமூக நிலைப்பாடிலும் இயங்குவது என்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத ஆற்றாமையின் வெளிப்பாடாகவே உணர்ந்துகொள்ள முடிகிறது.
அப்படியெல்லாம் இல்லை... என்று சப்பைக்கட்டு கட்டும் வாதிடுபவர்கள், பொருளாதார மற்றும் படிப்பு அளவில் தனக்கு உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு தலித்துவின் வீட்டில் பெண் கொடுத்து... பொருளாதார மற்றும் படிப்பு அளவில் தனக்கு தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு தலித்துவின் வீட்டில் பெண் எடுத்து சமூகத்துக்கு நாங்கள் சாதி பார்க்கவில்லை என்று உணர்த்தட்டும். வருடத்திற்கு ஊருக்கு குறைந்தபட்சம் 20 திருமணங்கள் அவ்வாறு நடைபெறட்டும். அதன் பிறகு இம்மாதிரியான கேலிச் சித்திரங்களையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கூச்சல்களையும் பரப்பட்டும்.
அப்போது அவர்களின் கேலிச் சித்திரங்களுக்கும் கூச்சல் கோஷங்களுக்கும் நிச்சயமாகவே தேவை இருக்காது. அதன் பிறகு இட ஒதுக்கீடு என்பதும் தேவை இருக்காது...