பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வு போட்டி ==கதை அவள் அப்படித்தான்

ஒரு விதை மண்ணில் விழும்போது அது இப்படித்தான் அரும்பவேண்டும் இப்படித்தான் வேர்விடவேண்டும் இந்த வரையரைக்குற்பட்டுத்தான் கிளைகள் பரப்பவேண்டும் பூக்களுக்கு இத்தனை இத்தனை இதழ்கள் இருக்கவேண்டும் இலைகள் இஷ்டம்போல இருக்கக்கூடாதென்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒரு பெண் மண்ணில் பிறந்துவிழும்போது அவள் இப்படித்தான் வளரவேண்டும் ,.வாழவேண்டும் இந்ததொழில்தான் செய்யவேண்டும் என்று ஏகப்பட்டக் கட்டுப்பாட்டுக்குள் பூட்டிவைக்கிறது எமது சமூகம். கட்டாயத்தின் பேரில் கட்டுப்பாட்டுக்குள் வாழும் அவள் தன் வாழ்க்கை போராட்டத்தில் கட்டாயங்கள் தாண்டி வாழ வேண்டிய கட்டம் ஒன்று வரும்போது கட்டுப்பாடுகளை உடைக்கும் கட்டுக்காளையாகவும் மாறவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. கட்டுக்கோப்போடு வாழ்ந்த ஒரு பெண் சூழ்நிலை நிமித்தம் மாறவேண்டிய கட்டாயத்தில் அவள் எதிர்கொள்ளும் துன்பங்களும் ஏளனங்களும் அதை அவள் சமாளிக்கும் உத்வேகங்களையும் கதையின் கருவாகக் கொண்டு உருவானதுதான் அவள் அப்படித்தான் என்னும் இந்த சிறுகதை.
பெண் என்பவள் பூவுக்கு நிகரானவள் என்று சொல்லி சொல்லியே கசக்கிப் போடும் உலகில் பெண் என்பவள் போராடப் பிறந்த பூகம்பம் என்பதை புரியவைக்கும் முயற்சிக்காக சாதரணமாக பெண்கள் செய்யத் துணியாத தொழிலை செய்யவிட்டுப் பார்த்திருப்பது எண்ணப் புரட்சி.
பெண் என்பவள் ஆணுக்கு நிகராக நாசாவில் பணியாற்றலாம், நாட்டுக்குத் தலைவியாகலாம். விண்வெளிக்குப் போகலாம் விமானம் ஓட்டலாம் என்றால் ஏன் அவள் காலகாலமாக ஆண்கள் மட்டுமே செய்து கொண்டிருக்கும் ஆடுவெட்டும் தொழிலை செய்யக் கூடாது என்று கதாப்பாத்திரத்தின் மூலம் மறைமுகமாக ஒரு போடுபோட்டிருக்ககும் கதாசிரியர், பெண்களை விற்றுப் பிழைக்கும் பிழைப்பாளர்களுக்கு முன் பெண்ணே ஆடுவெட்டியாவது பிழைப்பு நடத்தும்போது பெண்ணையே பிழைப்பாய் நடத்தும் பிழைப்பின் பிழையை ஆண் சமுதாயத்திற்கு மிகவும் நாசூக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்
பேனையும் மையையும் தூக்கி எரிந்துவிட்டு கத்தியால் தன்புத்தியைத் தீட்டி ஆட்டின் உடம்புத் தாள்களில் ரத்தத்தால் எழுதிய உயரின் கதை.(வதை) இது சோறு போடுவான் என்று வளர்த்த பெற்ற பிள்ளையே சோறு போடாதபோது .சோறு போடாமல் வளர்த்த ஆடுகளை கூறு போட்டு சோறு தேடும் வயோதிபத்தின் துணிச்சல் வாலிபத்தின் முதுகெழும்புகளைப் பார்த்துக் கேலி செய்திருக்கிறது. பந்தக்கால் போடுவதற்கே சொந்தக்காலில் நிற்காதவர்கள் பெண்ணுக்கு வாழ்க்கை துணையாகும் இந்தக் காலத்தில் வாழ்க்கைத் துணை கைவிட்டாலும் வாழ்வதற்கு துணையாக சுயதொழில் என்ற மூன்றாம் காலிலும் நிற்கவேண் டும் என்று பொதுப்படையாய் கதையின் மூலக்கரு மூலம் பெண்களுக்கு நல்லதொரு தகவல் வழங்கியுள்ளார் கதாசிரியர்.
பொதுவாக இரக்கம் மிகுந்தவர்களாயிருக்கும் பெண்கள்,இது போன்று உயிர்களைக் கொல்வார்களா..?அதையும் ஒரு தொழிலாகவே செய்வார்களா..?’ என்னும் வரிகளுக்குப் பதிலாய் “அடப் போடா..எங்கப்பனும்,என்வீட்டுக்காரரும் சாகுறவரை செஞ்ச தொழிலுதான். இத வெச்சுத்தான் எம் பையனைப் படிக்க வெச்சோம்.கவருமென்ட்டு வேலை வாங்கிக் கொடுத்தோம். அவனுக்கு கல்யாணமும் செஞ்சு வெச்சோம்.

மருமகளுக்கும்,எனக்கும் ஒத்துவர்லே.மாசாமாசம் செலவுக்கு பணம் கொடுக்குறேன் ஆத்தா..ன்னு சொல்லிட்டு,தனிக் குடித்தனம் போன எம்மகன், கொஞ்ச நாள்லே, சோத்துக்கே திண்டாட வெச்சுட்டான்..” வந்தவளின் குரலில் பெண் என்பவள் கருவை சுமப்பவள் .அப்படிப்பட்டவள் உயிரைக் கொள்வது பாவம் என்ற எழுதப்படாத சமூக சட்டத்திற்கு அதே பெண் சுமந்த ஆண் பணத்துக்கும் பொருளுக்கும் ஏன் பெண்ணுக்கே ஆசைப்பட்டு பெண்ணையே கொலைசெய்யும் உலகில் வயிற்று பாட்டுக்கு யாரிடமும் கையேந்தாமலும் எவர் பொருளையும் களவேடுக்காமலும் உழைத்து சாப்பிடவேண்டும் என்ற காரணத்துக்காகவும் பெற்றப் பிள்ளை துரத்தினாலும் கடைசிவரை செய்யும் தொழில் கைவிடாது என்றே ஆடறுப்பது நியாயமாகப்பட்டிருக்கிறது.
பெற்ற பிள்ளை கைவிட்ட ஆதங்கம் கற்றுக் கொடுத்தப் பாடத்தால் சமூகத்தை அளந்து சமூகத்துக்கு முன்மாதிரியாகத் திகழும் பெண்ணாய் ஆத்தா படைக்கப்பட்டிருந்தாலும் அவளுக்குள்ளே ஒரு சாதாரண பெண்ணுக்குரிய அன்பு பாசம் சமூக அக்கறை அடுத்தவருக்கு உதவுதல் அடுத்தவர் நலனில் அக்கறை சமூகத்திடமிருந்து விழிப்பு என்று சின்னச் சின்ன விசயங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது ஆட்டுப் பிரியாணியின் மேலே இருக்கும் சில அலங்கார இலைகளாக அழகூட்டுகிறது கவனிக்கவேண்டிய ஒன்று உதாரணத்துக்கு கீழ்கண்ட வரியை சொல்லலாம். ‘அதே போலத்தான்,காய்கறிக்காரன் ஒருநாள் சிக்கினான்.“தராசை சரியாப் புடிக்கலை.. குடுக்குற காசுக்கு மரியாதையா பொருள் குடுக்குறதுன்னா குடு.. இல்லேன்னா உன் யாவாரமே வேண்டாம்..”என்று குதித்தாள்.
கண்ணு,கிட்னி,இதயம்,கல்லீரலுன்னு என்னென்ன உறுப்பெல்லாம் எடுக்க முடியுமோ,அதை எல்லாத்தையும் எடுத்து, மத்தவங்களுக்கு பொறுத்திடுங்கன்னு.. எழுதிக் கொடுத்திருக்கு.மிச்ச ஒடம்பையும் கவருமென்ட் ஆசுபத்திரிக்கு தானமா கொடுக்கச் சொல்லிருக்கு தம்பி..!”
வாழும்போது நாலு பேர் நாவு ருசிக்க தொழிலை நிதானமாக செய்தவள் சாவில் தன் உடம்பையும் தானமாக கொடுத்திருப்பதென்பது கூறு போட்டவள் உடம்பும் கூறு போடவேண்டியதே என்ற தத்துவமாக்கப் பட்டிருந்தாலும் ,மண்ணுக்கு போற உடம்பு நாலு மனிதருக்கு உதவட்டுமே என்ற மனிதாபிமானத்தையும் பறைசாற்றுகிறது. மொத்தத்தில் அவள் அப்படித்தான் பெண்களை சொந்தக்காலில் நிற்கக் கூறும் அறிவுரை.

மெய்யன் நடராஜ்

இதுவும் எனது படைப்பே என்பதை உறுதி செய்யும் நான். திறனாய்வு என்பதால் கதையின் திறன் மட்டும் ஆய்வுக்குள்ளக்கப்பட்டிருகிறது என்பதையும் கூறுகிறேன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Jun-15, 3:53 am)
பார்வை : 168

மேலே