பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வுப் போட்டி - தல புராணம்
கதை : தல புராணம்
ஆசிரியர் : தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள்
ஒரு சிறுகதைக்குள் இன்னும் சில கதைகள்.. அந்தச் சில கதைகளுக்குள் சில பயணங்கள்.. அந்தப் பயணங்களுக்குள் சில அனுபவங்கள்.. அந்த அனுபவங்களுக்குள் சில வாழ்வியல்கள்.. இதுவே தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகள்...
ஒரு கதை என்பது , சில நேரங்களில் வாழ்வில் இருந்து எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் கொண்டு சற்று மிகைப் படுத்தப்பட்டு ஒரு கதை வடிவில் கூறப்படும்.. சில கதைகள் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் முறையைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.. இன்னும் சில கதைகள் முழுக்க முழுக்கக் கற்பனை வடிவில் அமைந்திருக்கும்..
'தல புராணம்' போன்ற மிகச் சில கதைகளே , முழு வாழ்க்கையைச் சொல்லும் கதைகளாக அமைந்து விடுகின்றன...
சிறு வயதில் நாம் அனைவருமே அறிந்திருந்த 'பாட்டி வடை சுட்ட' கதை , இன்று வரையிலுமே 'பாட்டி வடை சுட்ட கதையாகவே தான் இருந்து வருகிறது... ஆனால் என்றோ நடந்த ஒரு உண்மைச் சம்பவம் சில மனிதர்களைக் கடந்து வேறு மனிதர்களிடம் செல்லும்போது , அதன் உண்மைத் தன்மையில் சில மாற்றங்களைப் பெற்று விடுகிறது.. அதே நிகழ்வு சில தலைமுறைகளைக் கடந்து செல்லும்போது இன்னும் கொஞ்சம் வண்ணங்கள் பூசப்பட்டு வேறு ஒரு வடிவமாக மாறி விடுகிறது.. அப்படி , தலைமுறைகள் கடந்து போய் வேறு வடிவம் பெற்று விடும் கதைகளில் , பழமை வாய்ந்த கோவில்களின் வரலாறுகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு...
அப்படி ஒரு வரலாற்றினைச் சுமந்த கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தினருக்கு , கோவிலுக்குச் செல்லும் வழியிலும் அந்தக் குறிப்பிட்டக் கோவிலுக்குள்ளும் ஏற்படும் அனுபவங்களே காட்சிகளாக விரிகிறது 'தல புராணம்' கதையில்...
பொள்ளாச்சியைத் தாண்டி இருக்கும் அங்கலக் குறிச்சி அம்மன் கோவிலுக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறது , அப்பா அம்மா இரண்டு குழந்தைகள் கொண்ட அந்த அழகான குடும்பம்... அந்தக் குடும்பம் கோவிலுக்குச் செல்லும் பாதையில் நடுவழியில் சாலையில் மயங்கிக் கிடக்கும் ஒரு கிழவியைச் சந்திக்கிறது... அந்தக் கிழவி இந்தக் குடும்பத்தினரால் காப்பாற்றப்படுகிறார்... பின் ஒரு வழிப் போக்கனாய் இவர்களோடு பயணிக்கிறார்...
தார்ச்சாலையில் மயங்கிக் கிடந்த அந்தக் கிழவி இந்தக் குடும்பத்தினரோடு பயணிக்கத் தொடங்கிய நிமிடம் முதல் , நாமும் 'அடுத்து நிகழப் போகும் ஏதோ ஒன்று'க்குத் தயாராகி விடுகிறோம்... ஒரு கட்டத்தில் , தன்னைப் பற்றிய எந்த ஒரு விபரத்தையும் இவர்களிடம் தெரியப்படுத்தாமல் இவர்களிடம் விடை பெற்றுச் சென்று விடும் அந்தக் கிழவியின் மொத்த வரலாற்றைத்தான் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பதை அறியாமல் அந்தக் கோவிலுக்குப் பயணிக்கிறது அந்தக் குடும்பம்...
கோவில் காட்சிகளை விவரித்த விதத்தில் காட்சிகள் கண் முன்னே விரிகிறது.. கோவிலின் ரம்மியமான சூழல் அதோடு அங்கிருக்கும் பூசாரியைப் பற்றி எடுத்துரைத்த விதமும் தெளிவு... அந்தக் கோவில் பூசாரி சொல்லுவதாக விரிகிறது அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் மகேசுவரி அம்மனைப் பற்றிய 'தல புராணம்'..
“ஒரு ஐநூறு வருஷங்களுக்கு முன்னாலே..” என்று தொடங்கும்போது படிக்கும் வாசகனும் கதையோடு பயணிக்கப் போவது உறுதி..
கொடுமைக்கார அரசன் ஒருவனால் மக்கள் அனைவரும் சொல்லொனாச் சித்ரவதைக்கு உள்ளாகும் ஒரு ஊரில் வாழ்ந்து வருகிறாள் மகேசுவரி என்ற அந்தக் கன்னிப் பெண்.. சந்தர்ப்பங்கள் செய்த சூழ்ச்சியால் மகேசுவரி அந்தக் கொடுங்கோல் அரசனின் சித்ரவதைக்கு ஆளாக நேரிடுகிறது... அந்த அரசனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள , காளியாகவே மாறி அந்த அரசனை வதம் செய்து மின்னல் வெளிச்சமென வானத்தில் மறைந்து விடுகிறாள்...
அம்மனே அவதாரம் எடுத்து வந்து தான் ஊரையே கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த அந்தக் கொடுங்கோல் அரசனை வதம் செய்து பின் மறைந்து விட்டாளென்று நம்பப்பட்டு , அவளுக்கென்று அந்தக் குறிப்பிட்ட கோவிலில் ஒரு மண்டபமும் சிலை வடிவமும் நிறுவப்பட்டு அந்த ஊர் மக்களால் தெய்வமென வணங்கப்படுகிறாள்...
பின் அந்த அரச வம்சத்தவரின் அரண்மனை முதல்கொண்டு களையப்பட்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள் அரச வாரிசுகள் எனும்போது அந்த மகேசுவரி அம்மனின் வீரியம் புரிய வருகிறது... ஊர் மக்கள் இன்றளவிலும் வணங்கி வரும் ஒரு கன்னித் தெய்வமாகவே மாறி விட்டிருக்கிறாள் மகேசுவரி அம்மன்...
பூசாரி சொல்லி முடிக்க , கோவிலின் கதை கேட்டு முடித்த முடிவில் ஆர்வம் மிகுதியால் அந்தக் கன்னித் தெய்வத்தின் சிலையைப் புகைப் படமெடுக்கச் சென்ற கதையின் நாயகன் , சிலையின் அருகே கண்ணீரோடு நின்று கொண்டிருந்த அந்த இன்னொரு பெண் உருவத்தைக் கண்ட நொடியில் கண்டறிகிறார் காரில் தங்களோடு பயணித்த அந்தக் கிழவியே மகேசுவரி அம்மன் என்று...
இவ்வாறாக நிறைவு பெறுகிறது கதை... நிறைவான கதை...
கதையைப் படித்து முடித்த நொடியில் , இன்றும் நம்மிடையே எத்தனை மகேசுவரி அம்மன்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை...
///// “அட மண்டூ..,இன்னுமா உனக்குப் புரியலே..!,ஐநூறு வருஷம்கிறதை,ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்..னுங்கிற மாதிரி யோசிச்சு பாரு..எல்லாம் சரியா வரும். அம்பது வருஷத்துக்கு முன்னேன்னு தலபுராணம் சொன்னா,அது வெறும் சம்பவமாப் போயிடும்.ஐநூறு வருஷத்துக்கு முன்னே..ன்னு சொன்னாத்தான் அது தல வரலாறாகும். இவங்களுக்கு இப்படி சொன்னாத்தான் வசதி.மரியாதை..தெரிஞ்சுக்கோ..!” /////
மேற்கண்ட வரிகள் , மகேசுவரி அம்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது படிக்கும் வாசகருக்கு ஏற்புடையதாய் அமையும் நோக்கிலும் , தலைமுறைகள் கடந்து கொண்டு செல்லப்படும் கதைகள் எவ்வாறு மாற்று வடிவம் பெற்று விடுகின்றன என்பதை எடுத்துரைக்கும் நோக்கிலுமே அமைக்கப்பட்ட வரிகளாகப் பார்க்கிறேன்..
கதையின் தொடக்கத்தில் அந்தக் குடும்பத்தின் உரையாடல்கள் இனிமை சேர்க்கின்றன... குடும்பத்தினரின் குணங்களையும் எண்ணங்களையும் குடும்பத்துக்குள் நிகழும் சிறு கண்டிப்போடு கூடிய இனிமையினையும் கதையோட்டத்தில் இணைத்தது ரசிக்கும் வகையில் உள்ளது...
கதை நெடுகிலும் அறிவுரை வடிவத்தில் சொல்லாமல் கதையின் ஓட்டத்தோடு சொல்லிச் சென்ற சில கருத்துக்கள் நன்று.. உதாரணமாக வாகனம் ஓட்டும்போது கவனம் சிதறாமல் இருக்க அருகில் உள்ளவர் பேசக் கூடாது , குளிர்பானம் தவிர்த்து இளநீர் பருகுவது , கிழவி மயங்கிக் கிடக்கும்போது வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்வது போன்று...
கதையின் நாயகன் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை , கோவில் காட்சிக்கு முன்னதாகவே எங்கேனும் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தால் கதையின் ஓட்டத்தோடு இன்னும் ஒன்றி இருந்திருக்கும்... உதாரணமாக கதையின் ஆரம்பக் காட்சியே , அவர்கள் பயணிக்கும் வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாகக் கதையைத் துவங்கி இருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்...
கோவில் காட்சிகளில் , அந்தக் குழந்தைகளைத் தவிர்த்து விடுதல் போல் ஆற்றுக்குள் அவர்கள் விளையாடச் சென்று விட்டதாக இல்லாமல் கோவில் காட்சி உரையாடல்களில் அந்தக் குழந்தைகள் இடம் பெற்று இருப்பது போல் காட்சிகளும் வசனங்களும் இருந்திருந்தால் இன்னும் வண்ண மயமாக இருந்திருக்கும்...
மின்னல் வெளிச்சமென வானத்தில் மறைந்து விட்டாளென ஊர் மக்களால் நம்பப்பட்ட மகேசுவரி , அங்கிருந்து எங்கு போனாள் , இத்தனை காலம் எங்கு எப்படி வாழ்ந்தாள் போன்ற நிழல் கதைகள் இருள் வெளிச்சமாய் மனதில் விரிகின்றன...
ஒரு பக்தனின் வேண்டுதல்களைப் பேசும் கதைகளுக்கு மத்தியில் ஒரு தெய்வத்தின் கண்ணீரைப் பேசுகிறது இந்தக் கதை... தலைமுறைகள் கடந்து வாழும் இதுபோல் எண்ணற்ற கதைகள் உலவிக் கொண்டிருக்கக்கூடும் நம்மிடையே.. ஒரு மனிதனின் கதை அவன் பிறப்புக்கு முன்பிருந்தே துவங்கி விடுகிறது... அவனின் மறைவுக்குப் பிறகும் தொடர்கிறது.. சில நேரங்களில் அவன் மறைந்து விட்டதாக நினைத்துக் கொண்டும் தொடர்கிறது..
தல புராணம் - இது ஒரு தனி மனுஷியின் கண்ணீர் , புராணமாக மாறிய கதை...
- கிருத்திகா தாஸ்...
இது என் சொந்தப் படைப்பே என்று உறுதியளிக்கிறேன்...