சில்லறை மனிதர்கள் -கார்த்திகா AK
சில்லறை இல்லையேம்மா !
அடுத்த நிறுத்தத்தில் இறங்க
ஐந்து ரூபாய்க்கு பதில்
இருபது தந்தபோது
ஒலித்த நடத்துனரின் குரல்..
கடைசி வரை காசு வாங்காத
கண்ணியவான் அவன்
உடல்முழுக்க
பார்வை மேய விட்டான் ...
நீ முதல்ல வாங்கிட்டு போம்மா!
கொஞ்சம் தடவலுடன் கையில்
பால் பாக்கெட் திணிக்கும்
ரொம்ப நல்லவர்....
செல்லம் கொஞ்சும் பூவே !
காதைக் கிழிக்கும் பாடலை
அலறவிடும் மானமுள்ளவன்
மல்லிகையைக் கண்டான் அந்தக்கணம் ..
திரைப்படத்தின் சத்தங்களைவிட
முத்தச் சத்தத்தால்
குமட்டலிடச் செய்யும்
செல்லாக் காதலன்...
கொஞ்சம் கவனிக்கலாமே
கண்சிமிட்டும் இந்தக் கேவலத்திற்கு
ஒளி தந்தவன் யாரோ ?
வக்கிரக் கறை படிந்த
பற்களின் இளிப்பிற்கு
எதிராய் சத்தியமாய்
முகமூடி உரிக்கத் தோன்றுகிறது ...
வெறியேறிய போதையுடன்
கொடுத்த காசுக்கு மிஞ்சி
விலைமகள் உடல் குதறும்
இற்றுப் போனவன்
எல்லோரும் ஒரே மாதிரியாய்
மார்கழி மாத நாயாகவே
தெரிகிறார்கள்!!