மாடும் காகமும்

ஓர் ஊரில் ஒரு மாடு இருந்தது. ஒருநாள் அதற்கு பயங்கரமாக முதுகு அரித்தது. வாலைக் கொண்டு சொறியலாம் என்றால் லாவகம் போதவில்லை அதற்கு. அரிப்பு வேறு ஞம ஞம ஞம என்று பிறாண்டித்தொலைக்க அது, "எனக்கு அரிக்கிறது யாராவது வந்து சொறிந்துவிடுங்களேன் ப்ளீஸ் ." எனும் அர்த்தத்தில் ம்மா ம்மா என்று கத்தியது. யாரும் வரவில்லை. அதனுடைய சக மாடுகள் பக்கத்துத் தெருவில் புதுப்பட சுவரொட்டிகள் ஒட்டியிருக்கிறார்கள் ஒரு கை பார்க்கலாம் என்று சென்றிருக்க ..இந்த மாடு மட்டும் " இந்த மாடு பசித்தாலும் சுவரொட்டி தின்னாது " என்று தன்னைத்தானே பெருமை பீத்திக்கொண்டு இருந்ததில் நல்ல பசி வேறு அதற்கு.

அப்போது ஒரு காகம், பக்கத்தில் இருந்த பிரியாணிக்கடை சிக்கன் வறுவலில் தனக்கு ஒரு துண்டாவது கிடைக்கும் என்கிற நப்பாசையில் ரொம்ப நேரம் கடை முன்பு அமர்ந்து கா கா என்று கத்தியதில் கடைக்காரன் காண்டாகி, " ஏய் ச்சூ போ " என்று விரட்ட " போடா பேமானி ..நான் வேற கடை பார்த்துக்கறேன் " எனும் அர்த்தம் வரும்படி கா கா கா என்று அதன் பாஷையில் உரக்கக் கத்திவிட்டுப் பறந்து வந்தது. வரும்வழியில் அந்தக் காகம் இந்த மாட்டைப் பார்த்தது. இந்த மாடோ, தனது முதுகைச் சொறியும் முயற்சியில் தன்னுடைய வாலைப் போட்டு முதுகில் அடித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்த காகம், "மாட்டு முதுகுல உக்காந்து எவ்ளோ நாளாச்சு " என்று அதன் முதுகில் போய் உட்கார்ந்து கொண்டது. மாடோ தனது முதுகில் காகம் வந்து உட்கார்ந்ததை உணர்ந்து வாலால் முதுகை அடிப்பதை நிறுத்திவிட்டு " காக்கா காக்கா ...நீ நல்ல காக்கா இல்ல ..என் செல்ல காக்கா இல்ல .......என் முதுகைக் கொஞ்சம் சொறிஞ்சு விடேன் " எனும் அர்த்தம் வரும்படி மா மா என்று கத்தியது.

மாட்டின் முதுகின் சொரசொரத் தன்மையைப் பார்த்த காகத்திற்குதான் முந்தாநாள் கவ்விக்கொண்டு வந்த கையேந்தி பவனின் காய்ந்து போன உளுந்துவடையின் சொரசொரத் தன்மை ஞாபகம் வர நாக்கில் எச்சி ஊறி பொட் பொட் என்று மாட்டின் முதுகில் அதற்கு எந்த இடத்தில் அரித்ததோ அதே இடத்தில் கச்சிதமாகக் கொத்தியது. தனது அரிப்பு இவ்வாறு ஒரு காகத்தால் சொறியப்படும் என்று எதிர்பாராத அந்த மாடு அரிப்பு அடங்கும் சுகத்தில் மெய்மறந்து நிற்க ...தான் இரண்டு முறை கொத்தியும் இந்த மாடு, மாடு மாதிரி நிற்கிறதே என்று கடுப்பான காகம், மீண்டும் மீண்டும் அதன் முதுகில் பொட் பொட் என்று போட மாட்டிற்கு நன்றாக அரிப்பு அடங்கியே போனது .......

தனது பேரனோடு மாலை நேர வாக்கிக் வந்து கொண்டிருந்த ஒரு தாத்தா இக்காட்சியைத் தனது பேரனிடம் காட்டி " பேரா பேரா ....அங்கே பார் .....மாட்டின் நிலையை, நாம் மாடு மாதிரி சோம்பேறித்தனமாக இருந்தால் காகம் கூட ஏறிக் கொத்தும், ஆகவே என்றும் விழிப்புடன் இருக்கவேண்டும் " என்றார். பேரனும் " that crow , bad crow " என்றதை ஆமோதித்தான்.

இப்போது மாடு நிம்மதியாக தனது வாலால் காகத்தை ஓட்டிவிட்டு சக நண்பர்கள் சென்ற அதே பக்கத்துத் தெருவுக்கு காஞ்சனா 50வது தாள் படப் போஸ்டர் தின்னக் கிளம்பியது !


இக்கதையால் அறியப்படும் நீதி : கண்ணுக்குப் புலனாகும் காட்சிகளை அப்படியே நம்பாதே .....அதில் சில உள்குத்துக்கள் இருக்கலாம் !


குறிப்பு : எனது குருநாதர் காலஞ்சென்ற சுஜாதா அவர்கள் இதுமாதிரி இரசனையான நீதிக்கதைகள் எழுதியுள்ளார். அவரைக் காப்பியடித்து இப்போது நானும்

எழுதியவர் : குருச்சந்திரன் (19-Jun-15, 9:10 pm)
Tanglish : madum kakamum
பார்வை : 625

மேலே